PUBLISHED ON : ஜூலை 10, 2015

அல்டிமீரோவின் வேலைக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பார்வை. ஆனால், அதில் குறைபாடு காணப்பட்டது. அதாவது இடது கண்ணில் படர்ந்திருந்தது கண்புரை. அது நன்றாகப் பழுத்த பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், மங்கலான பார்வையுடன் காலத்தைத் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அல்டிமீரோ.
இதுபோன்ற ஒரு தருணத்தில்தான் அரிகோவைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவரிடம் சென்று சிகிச்சை செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது. ஆனால், கூடவே ஒரு பயமும் சேர்ந்து தொற்றிக் கொண்டது.
அதாவது அரிகோவின் இந்தச் செயல் பாட்டுக்கு, கிறிஸ்துவ திருச்சபை எதிராக இருந்தது. ஆவி மத சம்பிரதாயத்திற்கு எதிரானது என்றும், ஆவி வழி நடத்துவதாகக் கூறி அரிகோ இது போன்ற செயல்களில் ஈடுபடுபவது திருச்சபைக்கு எதிரானது என்றும் பாதிரியார்கள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், அரிகோவிடம் சிகிச்சை பெற்றால் அதனால் திருச்சபையில் எதிர்ப்பைப் பெற வேண்டிவரும். திருச்சபையோடு தீவிரத் தொடர்பினைக் கொண்டிருப்பதால் அதன் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அஞ்சி, தனது முடிவை மாற்றிக் கொண்டார் அல்டிமீரோ.
ஆனால், அப்புறம்தான் தெரிந்தது. வெளிப்படையாக அரிகோவை எதிர்த்தாலும் பாதிரியார்கள் சிலர் ரகசியமாக அரிகோவிடம் சிகிச்சை எடுத்து உடல்நலம் தேறுவதாக அறிந்தார். இதனால் திருச்சபை மீதான பயத்தில் இருந்து விடுபட்ட அவர், உடனடியாக அரிகோவிடம் சென்று சிகிச்சை பெறுவது என்று தீர்மானித்தார்.
மறுநாள், அரிகோவின் மருத்துவ விடுதிக்குச் சென்றார். அங்கு நின்றிருந்த நீண்ட வரிசையில் தானும் நின்று கொண்டார். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய போது, அரிகோ சிகிச்சை செய்வதை அவரால் பார்க்க முடிந்தது.
சிகிச்சை அளிப்பதைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருந்தாரே தவிர, நேரில் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
முரட்டுத்தனமாக பயில்வானைப் போல அரிகோவின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அட்டகாசமான அதிகாரம் செய்யத்தக்க வகையில் அமைந்திருந்தது அவரது பேச்சு. போர்ச்சுக்கீசிய மொழியில் பேசினாலும், இடையிடையே அந்நிய மொழிச் சொற்களும் தாராளமாக வெளிப்பட்டன. அது ஜெர்மன் மொழியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். ஏனென்றால், அப்படித்தான் அவர் கேள்விப்பட்டிருந்தார்.
நாற்காலி, மேஜை போட்டு பந்தாவாக எல்லாம் அவர் அமர்ந்திருக்கவில்லை. நின்று கொண்டுதான் இருந்தார். தனி அறையாக இருந்தாலும், வரிசை உள்ளே வரை அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் செய்யும் சிகிச்சையை அனைவரும் பார்க்க முடிந்தது.
வரிசையில் நிற்பவர்களை ஒவ்வொருவராக அழைத்தார். சில பேரை கன்னாபின்னாவென்று திட்டவும் செய்தார். சிலரைத் திடீரென்று பிடித்து இழுத்து சுவரோடு சுவராக சாய வைத்து, பேனா கத்தியால் கீறியும் குடைந்தும் அறுவை சிகிச்சை செய்தார். ஆனால், நோயாளிகளோ எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவருக்கு ஒத்துழைப்பு நல்கினர். இது ஆச்சரியமாக இருந்தாலும், அல்டிமீரோவிற்கு உதறலாகவும் இருந்தது. இப்போது அவரது முறை வந்தது.
அரிகோவின் அருகே சிறிதான நடுக்கத்துடன் சென்றார். என்ன நோய் என்று எதுவும் கேட்கவில்லை. அவரை முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்து சுவரில் சாய வைத்தார். சமையலறைக் கத்தியைக் கையில் எடுத்தார். அதனை அல்டிமீரோவின் இடது கண்ணுக்குள் விட்டார். ஆனால், அப்போது எந்தவிதப் பயமும் அவருக்குத் தோன்றவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஒரு குண்டு ஊசி குத்தியது போல மெலிதான சுருக்கென்ற வலி.
அடுத்த நொடிப் பொழுதில் அரிகோவின் கையில் ஜவ்வு போன்ற ஈரமான ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்தார். அவ்வளவுதான்.
''நீங்கள் போகலாம். கடவுள் வழிகாட்டுவார்,'' என்று சொல்லி, அடுத்தவரை சிகிச்சைக்கு வருமாறு அழைத்தார் அரிகோ.
எதுவும் பேசமுடியாமல், அறையை விட்டு வெளியே வந்தார் அல்டிமீரோ. இப்போது அவரது பார்வை மங்கல் ஏதுமின்றி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதாவது அவரது கண்புரை நொடிப் பொழுதில் அகற்றப்பட்டுவிட்டது; குணமாகியும் விட்டது. புரை பழுக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மருத்துவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கண்ணில் திரை போட்டு, சோடா புட்டிக் கண்ணாடி போட்டு... எதுவுமே இனிமேல் தேவை இல்லை. அனைத்தும் சரியாகிவிட்டது.
இப்படி நினைக்கும்போதே அல்டிமீரோவிற்கு சந்தோஷமாக இருந்தது. இதனிடையே அரிகோவிடம் அவருக்கு ஏற்பட்ட இன்னுமொரு முக்கிய நிகழ்வு அவர் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விட்டது.
அல்டிமீரோவின் மாமாவிற்கு திடீரென்று மாளாத வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வயிற்றில் மிகப் பெரிய புற்றுநோய்க் கட்டி இருப்பது தெரியவந்தது. ஆனால், அது முற்றிய நிலையில் இருந்த காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.
ஆக இறப்புக்கான நாட்களை எண்ணத் தொடங்கினார் அவரது மாமா. ஆனால், அரிகோவிடம் அழைத்துச் சென்றால் குணமாகும் என்று உறுதியாக நம்பினார் அல்டிமீரோ.
எனவே, மாமாவை அழைத்துக் கொண்டு அரிகோவின் மருத்துவ விடுதிக்குச் சென்றார். வரிசையில் காத்திருந்து முறை வந்ததும் அரிகோ அவரது மாமாவை அழைத்தார்.
வழக்கம்போல என்ன, ஏது என்றெல்லாம் கேட்காமல் சமையலறைக் கத்தியை எடுத்தார். அவரது வயிற்றை ஒரு பூசணிக்காயைப் பிளப்பது போல் கத்தியால் பிளந்தார். பிளந்த வயிற்றினுள் கையை விட்டு புற்றுநோய்க் கட்டியைப் பிய்த்து எடுத்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரத்தம் கொஞ்சம் வரத் தொடங்கியது. உடனே மேற்கூரையை நோக்கி அண்ணாந்து பார்த்த அரிகோ, 'ரத்தம் வரக்கூடாது என்று ஏசு சொல்கிறார்,'' என்று உரக்கக் கூறினார்.
என்னவொரு அதிசயம்!
அடுத்த நொடிப் பொழுது ரத்தம் அப்படியே நின்றுவிட்டது.
அப்புறம், ''டாக்டர் ப்ரிட்ஸ், தயவு செய்து வயிற்றை மூடி விடுங்கள்,'' என்று சொன்னார் அரிகோ. அப்படியே ஒரு சிறு துண்டு பஞ்சினால் வயிற்றைத் தேய்த்தார். பளிச்சென்று வயிறு அப்படியே ஒட்டி மூடிக் கொண்டது.
இந்தப் பிரமிக்கத்தக்க அதிசயத்தை நேரடியாகக் கண்ணுற்ற அல்டிமீரோ, வெலவெலத்துப் போனார்.
'ஆவியோ, என்னவோ, மக்களுக்கு நல்ல சேவையைச் செய்கிறார் அரிகோ' என்று நினைத்தார்.
இந்த மகத்தான சேவையில் தன்னையும் இணைத்துக் கொள்ள விரும்பினார் அல்டிமீரோ.
உடனடியாக அரிகோவிடம் சென்ற அவர், ''இந்த மகத்தான சேவையில் நான் உங்களுக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். அதற்காக எந்தவித ஊதியமும் எனக்குத் தர வேண்டியதில்லை. உதவி செய்ய அனுமதி மட்டுமே வேண்டும்,'' என்று கேட்டார்.
ஏற்கெனவே தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சல்லி காசு கூட வாங்காமல் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடனேயே அரிகோ செயல்பட்டு வந்ததால், அல்டிமீரோவின் பிரதிபலன் எதிர்பாராத அந்த உதவியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து விட்டார். அதுமுதல் அரிகோவின் உதவியாளராக அல்டிமீரோ சேவை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் நடந்தது.
-தொடரும்...
