PUBLISHED ON : ஜூலை 17, 2015

அன்று எப்போதும் போல நோயாளிகள் வரிசையாக அணிவகுத்து நிற்க, அரிகோ சிகிச்சை அளித்துக் கொண்டே இருந்தார்.
திடீரென்று அவருக்கு சுயநினைவு திரும்பியது போல இருந்தது. எப்போதும் நோயாளிகளைப் பார்த்து முடிகிற வரை அவர் தன் நினைவில் இருப்பதே கிடையாது. மருத்துவர் ப்ரிட்ஸின் ஆவிதான் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். ஆனால், அன்று ஏன் நடுவிலேயே திடீரென்று சுயநினைவு திரும்பியது.
நினைவு திரும்பியதால் அவர் நோயாளி ஒருவருக்கு மருந்துச் சீட்டு எழுதுவதற்காக எடுத்த பேனா அப்படியே அந்தரத்திலேயே இருந்தது. கீழே இறங்க மறுத்தது.
வழக்கத்திற்கு மாறான இந்த விசித்திர போக்கினால் திக்குமுக்காடிப் போனார் அரிகோ.
பேனாவை மேஜை மீது வைத்தார் அரிகோ. வரிசையாக நின்றவர்களைக் கூர்மையாக பார்த்தார்.
அதில் இருந்த ஒருவர் முன்னால் போய் நின்றார்.
'நீ போலீஸ்காரன் தானே?'' என்று தோரணையாகக் கேட்டார்.
சாதாரண உடையில் இருந்த அந்த மனிதர் இந்தக் கேள்வியால் திகைத்துப் போய்விட்டார். அதற்கு மேலும் மறைக்க முடியாமல், 'ஆமாம்'' என்று உண்மையை கூறினார்.
'சரி, என்னுடன் வா,'' என்று அவரை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தார். அங்கு வரிசையாக நின்றிருந்த அனைவரையும் சிறிது நேரம் அறைக்கு வெளியே காத்திருக்குமாறு பணித்துவிட்டு, அறைக்கதவை மூடினார். அல்டி மீரோ மட்டும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப் பட்டார்.
இப்போது அந்த போலீஸ்காரரை கோபமாகப் பார்த்தார். கோபம் என்றால் பார்வையில் அனல் தெறித்தது.
'நான் வைத்தியம் செய்கிறேன் என்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபிப்பதற்காக என்னிடமிருந்து மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு போய் நீதிபதியிடம் கொடுக்கப் போகிறாய், அப்படித்தானே?'' என்று கோபத்தோடு கேட்டார்.
அரிகோ மருத்துவம் செய்வதால் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் வெகுவாகக் குறைந்து, வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தது. இதனால் மருத்துவர்கள் சிலருக்கு அரிகோ மீது கோபமும், ஆத்திரமும் இருந்தது. முறைப்படி அங்கீகாரம் பெறாமல் இவ்வாறு மருத்துவ சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம் என்று அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே பாதிரியார்களும் ஆவியின் செயலால் அரிகோ சிகிச்சைகள் செய்வதை விரும்பவில்லை. இது மதத்திற்கு எதிரான பெருங் குற்றம் என்று கருதினர். எனவே, அரிகோவின் செயல்பாடுகளை நிறுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தேடி அலைந்தனர். முடிந்தால் அவரை சிறையில் தள்ளவும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்தனர்.
இதுபோன்ற ஒரு சூழலில்தான், இந்தப் போலீஸ்காரரை சாதாரண நோயாளிகளைப் போல இங்கே அனுப்பி இருந்தனர்.
அரிகோவின் கேள்விக்கு மீண்டும் பொய் சொல்ல முடியாமல், 'ஆமாம்'' என்று ஒப்புதல் தெரிவித்தார் அந்த போலீஸ்காரர்.
'உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. உன் குடும்பத்தைக் கவனிக்காமல் ரொம்ப நாளாய்ப் புறக்கணித்து வருகிறாய். முதலில் அவர்களைக் கவனி,'' என்று சம்பந்தமே இல்லாமல் பேச்சை மாற்றினார் அரிகோ.
அமைதியாக இருந்தார் அந்தப் போலீஸ்காரர்.
மளமளவென வேகமாக சீட்டில் ஏதோ எழுதி போலீஸ்காரரிடம் நீட்டிய அரிகோ, 'உன் மனைவி, மக்களைக் கவனிப்பதுதான் உன் முதல் கடமை. மற்றவை எல்லாம் அப்புறம்தான். இதோ பிடி மருந்துச் சீட்டு,'' என்று கொடுத்தார்.
அங்கேயே அந்தச் சீட்டைப் படித்துப் பார்த்த போலீஸ்காரரின் முகம் அவமானத்தில் அஷ்டகோணலாக மாறியது.
தினசரி பைபிள் படி. காலை, பகல், மாலை ஆகிய மூன்று வேளையும் தவறாமல் படி' என்று அந்த மருத்துச் சீட்டில் எழுதப்பட்டிருந்தது.
இதனிடையே நாட்டின் அரசு உயரதிகாரிகள், முப்படைத் தளபதிகள், போலீஸ் அதிகாரிகள், செனட்டர்கள் என்று பல்வேறு தரப்பினரும் அரிகோவிடம் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கமாகி விட்டது.
இதனால் அவரது செல்வாக்கு மேலும், மேலும் அதிகரித்தது.
இதனிடையே, இதன் உச்சகட்டமாக பிரேசில் நாட்டின் அதிபராக இருந்த ஜுசேலினோ குபிட்ஷேக், தமது மகளை வைத்தியத்திற்காக அரிகோவிடம் அழைத்து வரப்போகிறார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.
இச்செய்தி எதிரிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் வரவழைத்தது. என்றாலும் அதிபரின் மகள் சிறுநீரகத்தில் இருந்த மிகப் பெரிய கட்டியை அகற்ற முடியாது என்று புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், கடைசி சந்தர்ப்பமாக அரிகோவிடம் சிகிச்சை அளித்துப் பார்க்கலாம் என்று அங்கு அதிபர் வந்தார். அப்படியே சிகிச்சை அளிக்கப்பட்டது.
வழக்கம்போல் சமையலறைக் கத்தியால் கீறி கட்டியை அகற்றி சாதித்தார் அரிகோ.
இப்படியாக அமானுஷ்ய சக்தியோடு மக்களின் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்து கண் கண்ட தெய்வமாகக் காட்சி தந்த அரிகோவை, அந்நாட்டின் பிரபல பத்திரிகையான, 'கப்ரியேல் காட்ட'ரின் நிருபர் பேட்டி காண்பதற்காக ஒருநாள் வந்திருந்தார்.
வழக்கம்போல அன்றும் கூட்டம் மொய்த்தது. ஆனால், அரிகோவோ அன்று நிதானமாக இல்லாமல் மிகுந்த சஞ்சலத்துடன் காணப்பட்டார். அவரால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. திணறினார்.
இதனைக் கவனித்த நிருபர், ''தாங்கள் ஏதோ கலக்கத்துடனும், சஞ்சலத்துடனும் இருப்பது போலத் தெரிகிறதே. காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டார்.
சற்று நிதானமடைந்த அரிகோ பின்னர் தயக்கத்துடன் கூறினார்.
'என் மனக்கண்ணில் கருப்பு சிலுவை ஒன்று தெரிகிறது. அது எனக்கு மிகவும் மனக்குழப்பத்தையும், சஞ்சலத்தையும் தருகிறது!'' என்றார்.
'கருப்பு சிலுவை தெரிவதால் தாங்கள் ஏன் மன சஞ்சலம் அடைய வேண்டும்?''
'சரியான கேள்வி. ஆனால், இப்படி கருப்பு சிலுவை என் மனக் கண்ணில் தோன்றும் போதெல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மரணமடைகின்றனர். அதனால் தான் நான் மிகவும் குழப்பத்துடன் இருக்கிறேன்,'' என்றார் அரிகோ.
இது புதிய தகவலாக இருந்த போதிலும் அரிகோவின் சஞ்சலத்தைப் போக்க வேண்டியது அப்போதைய கடமை என்று நினைத்தார் நிருபர். ஏதேதோ வேடிக்கையாகப் பேசி அவரது மனதை மாற்ற முயற்சித்தார். ஆனாலும் பெரிதாகப் பலன் கிடைக்கில்லை.
மறுநாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்த தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?
செனட்டர் பிட்டன் கோர்ட் கார் விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார்!
அரிகோவை உலகறியச் செய்தவர் பிட்டன் கோர்ட். பல நேரங்களில் அவருக்கு உதவியாகவும் இருந்தார். அரிகோவின் மிகப் பெரிய ஆதரவாளர்களில் முதன்மையாக இருந்த செல்வாக்கு மிக்கவர் பிட்டன் கோர்ட். அவரது மரணம் அரிகோவை உலுக்கி எடுத்துவிட்டது. கவலை அவரை உருக்கி விட்டது. மனதளவில் சிதைந்து போய் விட்டார். நொறுங்கிப் போன அரிகோ, அதன் பின்னர் பழைய மாதிரி தனது செயல்பாட்டில், மருத்துவ சிகிச்சையில் முழு ஈடுபாட்டுடன் இயங்க சற்று சங்கடப்பட்டார். எனினும் அந்தச் சேவையை எக்காரணம் கொண்டும் அவர் நிறுத்தவே இல்லை.
- தொடரும்...
