PUBLISHED ON : ஆக 10, 2018

சுவாமி விவேகானந்தர், இளம் வயதில் துறவறம் செல்ல விரும்பி, தாயாரிடம், அனுமதி கேட்டார்.
''மகனே... ஒரு கத்தியுடன் என்னை வந்து பார்...'' என்றார்.
தாயின் சொற்படி, விவேகானந்தர், ஒரு கத்தியை எடுத்து வந்து கொடுத்தார். தாய் ஒன்றும் கூறாமல் மவுனமாயிருந்தார். ''தாங்கள் கூறியபடி, கத்தியோடு வந்துள்ளேன்; ஒன்றும் கூறாமல் மவுனம் சாதிக்கிறீர்களே...'' என வினவினார் விவேகானந்தர்.
புன்னகைத்த அவரது தாய், ''நாளையும், கத்தியோடு வா...'' என்றார். அன்றும் அதேபோல சென்றார்; அனுமதி கிடைக்கவில்லை. இது போல், மாத கணக்கில் நடந்தது. அனுமதி கிடைக்காததால் வருத்தமுற்றார். இருப்பினும், தாயின் கட்டளையை மீறவில்லை. தினமும், கத்தியோடு சென்று தாயை சந்தித்தார்.
ஒரு நாள் -
என்ன ஆச்சரியம், துறவறம் எடுத்துக் கொள்ள, தாய் அருள்புரிந்தார். வியப்படைந்த விவேகானந்தர், ''தாயே... மாதக்கணக்கில் மவுனம் சாதித்து விட்டு, இன்று அனுமதி கொடுத்தீரே! அதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா...''என்றார்.
''மகனே... நேற்று வரை, நீ கத்தி எடுத்துவந்த போது, கத்தியின் கூர்மையான பாகத்தை என்னை நோக்கியும், பாதுகாப்பான கைப்பிடி பாகத்தை, உன் பக்கமாகவும் வைத்திருந்தாய்; இன்று தான், கூர்மையான பாகத்தை உன் பக்கமும், ஆபத்தில்லாத கைப்பிடி பாகத்தை என்னை நோக்கியும் தந்தாய். இதுதான் உன்னிடம் ஏற்பட்ட மாற்றம்.
''அதாவது, ஆபத்து விளைவிக்க கூடிய பாகத்தை உன்பக்கம் வைத்திருந்தது, தியாக மனப்பான்மை வளர்ந்துள்ளதை காட்டுகிறது. துறவறம் என்பது, பிறரை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும். உன்னிடம் வருபவர்களுக்கு ஆபத்து நேராது என்பது உறுதியாக வேண்டும். தியாக மனப்பாங்கை அடைந்தவர் தான், துறவறம் பூணலாம். அந்த பக்குவம் உனக்கு வந்து விட்டது; என் ஆசிகள்...'' என்றார்.
குட்டீஸ்... ஒரு காரியத்தை விரும்பினால் கடைசிவரை அதில் உறுதியாக இருக்க வேண்டும். அதுதான் லட்சியம் நோக்கி நம்மை அழைத்து செல்லும்.
