
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீபரம கல்யாணி உயர்நிலைப் பள்ளியில், 1971ல், எஸ்.எஸ்.எல்.சி. படித்தேன். அன்று பள்ளி நிறுவனர் அனந்த ராமகிருஷ்ணன் பிறந்தநாள் விழா நடக்க இருந்தது. சிறப்பு விருந்தினராக, மாவட்ட ஆட்சி தலைவர் வரவிருந்தார். மாணவர் இலக்கிய மன்ற செயலராக இருந்த நான் வரவேற்று பேச வேண்டும்.
தமிழாசிரியர் குத்தாலிங்கம் ஒத்திகைக்காக என்னை தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் அறைக்கு அழைத்து சென்றார். தயாரித்து வைத்திருந்த உரையை பேசிக் காட்டினேன். சில திருத்தங்கள் செய்தார்.
அப்போது என் கால்சட்டையின் பின்பகுதியில் ஒட்டு தையல் போட்டு இருந்ததை கண்டு, 'முக்கிய விருந்தினரை வரவேற்கும் நிகழ்வுக்கு, இதையா உடுத்தி வந்தாய்... வேறு உடை இல்லையா...' என மென்மையாக கேட்டார்.
தயங்கியபடி, 'ஐயா... இது ஒண்ணு தான் இருக்கு...' என கூறினேன். அருகில் நின்ற தமிழாசிரியரை ஏறிட்டு பார்த்தார். சற்று நேரத்தில் மாணவன் பச்சாத்து ஒரு கால்சட்டை தந்தான்; அதை அணிந்து நிகழ்ச்சியில் பேசினேன்.
மறுநாள், இரண்டு புதிய சீருடைகள் வழங்கி, 'நன்றாக படித்து முன்னேறி, நீயும் மற்றவர்களுக்கு உதவணும்...' என்றார் தலைமை ஆசிரியர். அதை மனதில் பதித்தேன்.
தற்போது, என் வயது, 68; வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த தலைமை ஆசிரியர் அறிவுரைத்தபடி முடிந்த உதவிகளை தவறாமல் செய்து வருகிறேன்.
- நெல்லை குரலோன், தென்காசி.

