PUBLISHED ON : ஆக 06, 2010

அனைவருக்கும் எனது அன்பு
மிதக்கும் நகரம்!
சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக 'உலக வெப்ப உயர்வின்' உபத்திரங்களை உலகம் முழுவதும் உணர தொடங்கி விட்டோம்.
இன்னும் 10 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் கிடுகிடுவென எகிறி, பல தீவுகள் உலக வரைபடத்திலிருந்து ஒழிந்து போகும் என்று எச்சரித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால், ஆலந்து நாட்டுக்காரர்கள் இப்போதே சுதாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஏற்கனவே இந்நாட்டின் 20 சதவீத பரபரப்பளவு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது. இன்னும் கடல் மட்டம் அதிகரித்தால் நம்ம பொழப்பு நாறிடும் என்று பயந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். அதன் ஓர் அங்கம்தான் 'மிதக்கும் நகரம்!'
இப்போதே வீடுகளை தண்ணீரின் மேல் போதுமான உயரத்தில் கட்டிவிட்டால், என்னதான் தண்ணீர் மட்டம் உயர்ந்தாலும் நம்மை பாதிக்காது அல்லவா என்று சிந்திக்கின்றனர்.
இதன் முதல் கட்டமாக, ஆஸ்டர்டாம் நகரில் 600 வீடுகளை நீரோடும் ஆற்றின் மேல் கட்டியிருக்கின்றனர். நம்மாளுங்க மட்டுமில்ல, இனி ஆலந்து நாட்டுக்காரர்களும், 'ஆத்துக்குப் போறேன்!''னு சொல்வாங்க!
சத்தமாக படி!
மாணவர்கள் கணித பாடத்தை சத்தமாக படித்து பார்த்தால், சரியான விடைகளை எளிதாக அறியலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
படிக்கும் முறை பற்றி ஸ்பெயின் நாட்டின் கிரானடா பல்கலைக்கழகம் விரிவான ஆய்வு நடத்தியது. கணித பாடத்தில் விடைகளை மாணவர்கள் எளிதாக அறிய புதிய வழி உதவும். கணக்குகளை சத்தமாக சொல்லி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், சரியான விடை எளிதாக தெரிந்து விடும். விரைவாக தீர்வு எழுதிவிடலாம் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கணக்கு என்பது கடினமானதே அல்ல. 1+1=2 என்றால், அது மாறவே மாறாது. அதை ஒரு தடவை மனதில் நிலை நிறுத்தினால் மட்டும் போதும்.
திரும்ப திரும்ப மற்ற பாடங்களை போல் படிக்க வேண்டிய அவசியம், கணக்கினை பொறுத்தவரை இல்லை அல்லவா!
கலாம் காலம்!
பயங்கரவாதம் இன்று நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும், சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர் என பன்முக திறமை கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம்.
நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன்மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம்.
தற்போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும்.
உப்பு-லெஸ் ஆர் மோர் டேஞ்சர்!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உப்பு பற்றிய ஆய்வுக்கு பதினோராயிரம் ஆண் - பெண்களை உட்படுத்தி, நாம் உட்கொள்ளும் உப்பு தான் நமக்கு வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கால்வாசி காரணம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.
சோடியம் குளோரைடைத்தான் நாம் உப்பு என்று அழைக்கிறோம். நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான வேதிப்பொருள் அது. நம்முடைய தற்போதைய உணவு பழக்கத்தால், தேவைக்கதிகமாக உப்பை சாப்பிட வைக்கின்றனர். அதுதான் பல பிரச்னைகளுக்கு மூலகாரணம்.
ரத்த அழுத்தம் என்றதும், உப்பை குறைக்கச் சொல்லி டாக்டர்கள் கூறுவது எதனால்? உப்பில் உள்ள சோடியம் என்ற தனிமம், ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. அதனால் தான், உப்பை குறைக்க சொல்கின்றனர்.
அதே நேரம், உணவில் பொட்டாசியம் சத்தை அதிகமாக எடுத்தால், ரத்த அழுத்தம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் மருத்துவ உலகிற்கு நீண்ட காலமாக தெரிந்திருந்தபோதும், அது பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெறாதது ஆச்சரியமே! உப்பு - அதிகமோ, குறைவோ ஆபத்தே!
அம்மா! செஞ்சு தாங்கம்மா, ப்ளீஸ்!
இது உருளைக்கிழங்கு கடலைக் குழம்பு செய்முறை நேரம்.
தேவையானவை: நன்றாக கழுவி தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு - அரை கப், கொண்டைக்கடலை - கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய், தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புளிக்கரைசலை விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை சேர்த்து, நன்றாக கொதித்ததும் அரைத்த மசாலாவை போட்டு, மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும்.
அன்புடன், அங்குராசு.
***
