PUBLISHED ON : நவ 02, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
கூர்மை என்றாலே சூப்பர் தானே!
புத்தி எப்படி இருக்கணும் கூர்மையாக இருக்கணும். ஊசி, கத்தி, கத்தரிக்கோல்... இப்படி கூர்மையாக இருக்க வேண்டியது என எவ்வளவோ இருக்கு இல்லையா?
கூரான ஊசி பொருட்களின் ஊடே ஏன் சுலபமாக துளைத்து கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா?
துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ, கூரான ஊசியை எளிதாக செலுத்த முடிகிறது. ஆனால், மழுங்கலான ஆணியை செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே... ஏன்?
கூரான ஊசியை செலுத்தும்போது முழு சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால், மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியை செலுத்தினாலும் மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்து செல்ல முடிவதில்லை.
அழுத்தத்தை குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கற்று கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னால் அதிலிருந்து இது அதிகமாக, குறைவாக என்று கண்டு கொள்ள முடியாது.
ஏனெனில் இச்சம்பளம் மாதத்துக்கா, வருடத்துக்கா என்று நமக்கு தெரியாது. அதுபோலவே, ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில், நூறில் ஒரு பங்கு பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதை சார்ந்து இருக்கிறது.
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்து செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம், ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்து கொள்ளும் போது உடல் எடை அதிக பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்து கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும் போது செலுத்தும் அழுத்ததை விட 20 மடங்கு குறைவாக இருக்கும்.
ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மை தாங்கும்.
அவை இல்லா விட்டால் பனியினுள் நாம் புதைய வேண்டியதுதான்.
நிறைய படிக்க படிக்க அறிவு கூர்மையாகும். ஒரே மாதிரி கோடாரியை பயன்படுத்தி இரண்டு மனிதர்கள் வேலை செய்தனர்.ஒருவர் கொஞ்ச நேரத்திலேயே சோர்வுற்றார். இருந்தாலும் நாள் பூராவும் உழைத்தார்.
மற்றவரோ கொஞ்ச நேரம் வேலை செய்தார். கொஞ்சம் நேரம் ஏதோ விஷயமாக போய் விடுவார். நாளின் முடிவில் தொடர்ந்து வேலை செய்யாமல் அடிக்கடி எங்கேயோ போய் விட்டு வந்து கொண்டிருந்தவர், அதிகப்படியான பணியை செய்து இருந்தார்.
நடுநடுவே அவர் வேலையை விட்டு சென்றபோது, கோடாரியை கூர்மைப்படுத்தி கொண்டு வந்தார். கூர்மை பணியை குறைத்து, பலனை அதிகரித்தது.
So, B Sharp!வேண்டாத நீரும் உபயோகமாகும்!
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார். உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில், இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாராஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாராஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் ட்ரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாராஹே கூறியதாவது: 'கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான். இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவு நீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.
அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது. உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர்.
சுத்தமான குடிநீரை தேடி பல கி.மீ., செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்படக் கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார்.
அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராஹேவுக்கு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'கூஸ் கோஸ் சூப்' செய்முறை நேரம்.
என்னென்ன தேவை: கோஸ்-சிறியதாக 1, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், உருளைக்கிழக்கு -1, பால்-2 கப், பச்சை பட்டாணி-கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு-1 டேபிள் ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள்-தேவைக்கேற்ப.
செய்முறை: கோஸை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். கோஸையும், பட்டாணியையும் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
இவை பாதி வெந்தால் போதும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய பூண்டை வதக்கவும். மசித்த உருளை கிழங்கை சிறிது பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்து, அதில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும், கோஸ், பட்டாணி சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, மீதி பாலையும் சேர்த்து குளிர வைத்து பரிமாறவும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
