PUBLISHED ON : நவ 09, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
உடல் பருமன் குறைய...
* தேனை வெந்நீரில் கலந்து அருந்தினால், பருத்த உடல் மெலியும்.
* காரட் சாறுடன் பத்து மிளகும், தேனும் கலந்து பருகி வர பருத்த உடல் இளைக்கும்.
* நூறு கிராம் கொள்ளை ஊற வைத்து முளை கட்டியவுடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து கலவை இயந்திரத்தில் அரைத்துப் பால் எடுத்து அத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து பருகி வர உடல் கொழுப்பு குறைந்து இளைப்பது உறுதி.
* காலை உணவு எதுவும் உட்கொள்ளாமல் இரண்டு தக்காளிப் பழம் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்; வலு குறையாது.
* வாழைத்தண்டு சாறு சாப்பிட்டால், அதிகச் சதை போட்டவர்களின் உடல் சீராகும்.
முட்டாள்களின் தொப்பி!
எழுதுவதற்காக கடையில் காகிதம் வாங்கும்போது 'புல்ஸ்கேப் பேப்பர்' கொடுங்க என்று கேட்கிறோம். அது என்ன புல்ஸ்கேப்? அதற்கு பொருள் என்ன? அது 'புல்ஸ்கேப்' இல்லை. 'பூல்ஸ்கேப்' அதாவது தமிழில் சொல்ல வேண்டுமென்றால் 'முட்டாள்களின் தொப்பி' இது ஒரு காகித நிறுவனத்தின் பெயர். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி பெயர் வைத்துக் கொண்டனர். அவர்கள் தயாரித்த காகிதங்களில் மிக மிக மெலிதாய்-லேசாய் ஒரு தொப்பியை 'டிரேட் மார்க்'காக வரைந்து இருப்பர். அந்த காகிதத்தின் தரம் நன்றாக இருந்ததால், காகிதம் வாங்க வருபவர்கள், கடைக்காரர்கள் வேறு கம்பெனியின் பேப்பரை கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, 'பூல்ஸ் கேப் பேப்பர்' கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்தனர். அதுவே நாளடைவில் 'புல்ஸ்கேப்'பாக மாறிவிட்டது.
துப்பறியும் நாய்!
எல்லா வகையான நாய்களையும் போலீஸ் துப்பறியும் துறைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா? முடியாது! டாபர்மேன், லேப்ரா, ரெட்ரிவர், அல்சேஷன் போன்ற ஜாதி நாய்களைத்தான் துப்பறியும் துறைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்சொன்ன ஜாதிகளில் எந்த ஜாதியாக இருந்தாலும் சரி... நாய்களை இரண்டு மாத குட்டியிலேயே வாங்கிவிடுவர்.
அது நான்கு மாத குட்டியாய் வளரும் வரை இடைவெளி விட்டுவிட்டு, 'பார்வோ வைரஸ்' என்ற ஊசியும், டிஸ்டெம்பர் வேக்ஸினையும், ஆன்ட்டி-ராபீஸ் ஊசியும் போட்டு நாய்களை நோய்கள் தாக்காதபடி பார்த்துக் கொள்வர். குட்டிக்கு நான்கு மாதம் முடிந்ததும் பயிற்சியை ஆரம்பித்து விடுவர். முதல் பயிற்சி, 'ஹீல் வாக்கிங்' நாய்க்குட்டியை இடது பக்கமாக கயிற்றைப் பிடித்தபடி கூட்டிப் போவதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.
நாய் துப்பறியப் போகும் நேரங்களில் எதிரே வேறு ஏதாவது ஒரு அந்நிய நாய் எதிர்பட்டாலும் கூட அதைப் பார்த்து குரைக்காமல், சட்டையே செய்யாமல் போக வேண்டும். அதேபோல் பயற்சியாளர் நடக்கும் வேகத்துக்கு, நாயும் நடக்க வேண்டும். குட்டியில் இருந்தே பழக்கினால்தான் அவை குறிப்பு அறிந்து செயல்படும். இந்த 'ஹீல் வாக்கிங்' பயற்சி முடிந்ததும், இரண்டாவது பயிற்சி 'பார்க்கிங்'
'பார்க்கிங்' என்றால் குரைப்பது. எல்லா நாய்களுமே குரைக்கக் கூடியதுதான். ஆனால், பயிற்சியாளர் உத்தரவு போடுகிற நேரத்தில் குரைக்க வேண்டும். அவர் நிறுத்தச் சொல்கிற நேரத்தில் நிறுத்த வேண்டும். இதை நாய்கள் புரிந்துகொள்ள பயிற்சியாளர்கள் இரண்டு வார்த்தைகளை பயன்படுத்துவர்.
ஒரு வார்த்தை 'ஸ்பீக்' இன்னொரு வார்த்தை 'கொய்ட் கன்டரோல்' இதில், 'ஸ்பீக்' என்று அவர் சொன்னால் நாய் குரைக்கும்.
'கொய்ட் கன்ட்ரோல்' என்றால் குரைப்பதை நிறுத்திவிடும். இது தவிர இன்னும் சில உத்தரவு வார்த்தைகள் உண்டு. சிட், கெட் அப், ப்ளாட், டவுண், ரெஸ்ட், ட்ராப். இந்தப் பயிற்சிகளையெல்லாம் 30 நாட்களுக்குள் நாய்க்குட்டிகள் கற்றுக்கொண்டுவிடும்.
ஹாஹ்... ஹாஹ்.. என்னும் சத்தம்!
'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டு போகும்' என்கின்றனர். ஆனால், எத்தனை பேர் வாய்விட்டு சிரிக்கிறோம். வெறுமனே ஒரு புன்னகையோடு சிரிப்பை நிறுத்திவிடுகிறோம்.
எங்கே இதற்கு மேல் சிரித்தால் கையிலிருக்கும் காசு போய்விடுமோ? என்பது போல் சிரிக்கிறோம். ஜப்பான் நாட்டு மனோ தத்துவ பேராசிரியர் யோஜி, சிரிப்பை அளப்பதற்கு, 'டிஜிட்டல்' கருவி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், வயிறு குலுங்க சிரித்தால் தான் அது இயல்பான சிரிப்பு. சிரிக்கும் போது பலமுறை, 'ஹாஹ்... ஹாஹ்...' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்தச் சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி, சுரப்பிகள் இயங்கும் திறன் அதிக மாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்திற்கும், வயிற்றுக்கும் இடையேயுள்ள தசைகள் முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும் என்கிறார். குறிப்பிட்ட அளவு 'ஹாஹ்... ஹாஹ்...' என்ற சத்தம் வெளிப்படும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை யோஜி கண்டுபிடித்துள்ள 'டிஜிட்டல்' கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வுகள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. சிரித்தால் எத்தனை நன்மை கிடைக்கிறது. அதற்காக தனியாக மட்டும் சிரித்துவிடாதீர்கள். வேறு அர்த்தமாகிவிடும்!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!
இது 'வெண்ணெய் இனிப்பு' செய்முறை நேரம்.
தேவையானவை: மைதா, வெண்ணெய், சமையல் எண்ணெய், சர்க்கரை தலா கால் கிலோ, பன்னீர் 5 துளிகள், பச்சரிசி மாவு 3 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் 2 சிட்டிகை.
அலங்கரிப்பதற்கு: முந்திரி, வண்ணங்கள் சேர்த்த தேங்காய் பூக்கள்.
செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து சலிக்கவும். அதில் 150 கிராம் வெண்ணெய் சேர்த்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, அதனுடன் பன்னீர் சேர்த்து கலக்கவும். மீதி இருக்கும் வெண்ணெயில் பச்சரிசி மாவு கலந்து, நன்றாக அடித்து வைக்கவும். ஊறிய மைதா மாவை பெரிய எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து, மெல்லிய வட்டமாக தேய்த்து, அதன் மேல் பரவலாக மாவுக்கலவையை தடவவும்.
இப்படி ஒன்றுக்குமேல் ஒன்றாக 5 வட்டங்கள் சேர்த்து, ஒன்றாக சுருட்டி நீளவாக்கில் எடுக்கவும். அவற்றை ஒரே அளவுள்ள 4 துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டையும் அதிகம் அழுத்தாமல், விரல் கனத்திற்கு வட்டமாக தேய்க்கவும். எண்ணெயை மிதமாகக் காய வைத்து, தேய்த்த மைதா வில்லைகளைப் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். தீ அதிகமாக எரிந்தால் உள்ளே சரியாக வேகாது. பொரித்து எடுத்த வில்லைகளை சர்க்கரைப் பாகில் ஊறவிட்டு, 5 நிமிடங் களுக்குப்பின் எடுத்து அதன் மேல் சிறியதாக நறுக்கிய முந்தரிப் பருப்பையும், வண்ண தேங்காய் பூக்களையும் தூவி அலங்கரிக் கவும். இது மிகவும் சுவையான இனிப்பு. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
