PUBLISHED ON : டிச 07, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
எனக்கு வேண்டாம் பால்!
இது நிறைய வீடுகளில் குட்டீஸ்கள் கொடுக்கும், 'உரிமைக்குரலாய்!' இருக்கிறது.
பால் மட்டுமல்ல... பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் என்றாலும் இவர்களுக்கு பிடிக்காது. நண்பர்களே இதனை படியுங்கள்... பின்பு சொல்லுங்கள் பால்-வேணாமா வேணுமான்னு!
மனிதன் தனது உணவுக்காக பாலையும், அதிலிருந்து கிடைக்கும் பொருள்களையும் வெகு காலமாக பயன்படுத்தி வருகிறான். எப்போதிலிருந்து பயன்படுத்தத் தொடங்கினான் என்பதை பற்றி திட்ட வட்டமாக சொல்ல முடியாது. ஆனால், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பால் தரும் விலங்குகளை மனிதன் வளர்க்கத் தொடங்கி விட்டான்.
பசு, எருமை, செம்மறியாடு, கோலாடு போன்றவைதான் பாலுக்காக வளர்க்கப் படும் விலங்குகள். வட ஐரோப்பாவில் மட்டும் ரெயின்டியர் என்ற மான் வகையை பாலுக்காக வளர்க்கின்றனர். மனித உடலுக்கு வேண்டிய எல்லா சத்துகளும் பாலில் அடங்கி உள்ளன. பசும் பாலில் 87.2 சதவீதம் தண்ணீரும், 3.7சதவீதம் கொழுப்பும், 3.5 சதவீதம் புரதச்சத்தும், 4.9 சதவீதம் சர்க்கரையும் உள்ளன. இது போக மீதி வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன.
இவை எல்லாமே மற்ற மிருகங்களின் பாலிலும் அடங்கியுள்ளன. பாலில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு, வெண்ணையாக நமக்கு கிடைக்கிறது. அந்த கொழுப்பு நமக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கிறது. பாலில் உள்ள புரதச்சத்து தசைகளை வலுவடையச் செய்கிறது. இதில் அடங்கியுள்ள சர்க்கரை உடலினுள் எளிதில் கரைந்து ஆற்றல் அளிக்கும் எரி பொருளாக செயல் படுகிறது. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்கின்றன. இரும்பு, சோடியம், மாங்கனீசு, குளோரின், அயோடின் ஆகிய வையும் மேலும் உடலுக்கு தேவையான ஏ.பி.சி.டி., வைட்டமின்களும் உடலில் குறைவாக இருந்தால் அதை சரி செய்கின்றன. பால் விரைவிலேயே கெடும் தன்மை கொண்டது. அதனால் பாலைக் கறந்த 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே, அதனை 10 டிகிரி சென்டி கிரேடுக்கு குளிர செய்ய வேண்டும். பாலை விற்பனைக்கு அனுப்பும் வரை இதே நிலை நீடிக்க வேண்டும். பால் திரிந்து போவதை தடுக்க அதனை வெண்ணையாகவும், பாலாடைக் கட்டியாகவும், பாலேடாகவும், கட்டியான பாலாகவும், பால் பவுடராகவும் மாற்று கின்றனர். இதனை தவிர தயிராகவும், பால் புரதமாகவும், பால் சர்க்கரையாகவும் மாற்றலாம். நாள் முழுவதும் பலமுறை காய்ச்சுவதால் பால் புளிக்காது பாதுகாக்கலாம்.
பழ ஒவ்வாமை!
பழங்கள் சாப்பிடலாமா? என்று ஒருவர் கேட்டால் இதென்ன அபத்தமான கேள்வி? என்றுதான் பதில் வரும். பழம் என்றாலே நமக்கு உடனே தோன்றுவது ஆரோக்கியம் தான். அன்றாடம் பழம் சாப்பிடுவது ஆரோக்கியம் காக்கும். உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும். நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச் சத்துக்கள், தாது உப்புகள் ஆகியவற்றை அள்ளி வைத்திருக்கின்றன பழங்கள். எல்லாம் சரி, ஆனால், பழங்கள் சில 'பகீர்'களை ஏற்படத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 'பழ அலர்ஜி' என்ற ஒன்று உண்டு. பிற ஒவ்வாமைகளைப் போல இதுவும் படுத்தி எடுத்து விடும். பழ அலர்ஜியா... அப்படி ஒன்று உண்டா என்கிறீர்களா? ஆமாம். சிலரது உடம்பு சிலவகை உணவுகளை ஏற்றுக் கொள்வது இல்லை. அவற்றில் பழங்களும் அடக்கம். சிலருக்குப் பப்பாளி ஒத்துக் கொள்ளாது; சிலருக்கு திராட்சை ஒத்துக் கொள்ளாது; சிலருக்கு ஆப்பிள்களும் கூட. நமது உடம்பு, பழ அலர்ஜியை எந்த அளவு தாங்குகிறது என்பதைப் பொறுத்து 'ரியாக்ஷன்கள்' உடனேயோ, தாமதமாகவோ வெளிப்படலாம். ஆக, ஒரு பழம் உங்களுக்கு ஒவ்வாமைத் தன்மையைக் காட்டினால் அதைப் புறக்கணித்து விட்டு, ருசியாக இருக்கிறது. பிடித்திருக்கிறது என்று புகுந்து விளையாடி விடாதீர்கள்.
மற்ற ஒவ்வாமைகளைப் போலவே பழ ஒவ்வாமையும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். காரணங்கள் என்ன? 'பழ அலர்ஜி'க்கு மரபணு ரீதியாக, பாரம்பரிய அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம். வைரஸ் கிருமித் தொற்று போன்ற சில நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு உடம்பானது 'பிரக்டோஸை' ஏற்காமல் அதை வெளியே தள்ளப் பார்க்கும். பெரும்பாலான பழங்களில் 'பிரக்போஸ்' அதிகளவில் உள்ளது. அதை உடம்பு ஏற்காதபோது பழத்தை ஏற்காதது மாதிரி தெரிகிறது.
அடுத்து காலநிலை மாற்றம். காலநிலை மாறுபடும்போது சில பழங்களைச் சாப்பிடுவது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பருவமழைக் காலத்தின்போது திராட்சை (அ) 'சிட்ரஸ்' அளவுக்கு அதிகமுள்ள பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் சில நோயாளிகளுக்கு அறிவுரை கூறுவது இதனால்தான். சுற்றுப்புறச் சூழலில் ஏற்கனவே சில நோய்த் தொற்றுகள் இருக்கும் போது, சில பழங்கள் அதை வேகப்படுத்தக் கூடும். சில வேளைகளில் பழங்களில் இருந்து அதிகமாக வெளிப்படும் வேதிப்பொருட்கள் செரிமான அமைப்பை அதிகமாகச் செயல்பட வைத்து ஒவ்வாமை நிலைமைக்குத் தள்ளலாம்.
அறிகுறிகள்!:
பழ ஒவ்வாமையின் அறிகுறிகள் என்னென்ன? அரிப்பு, தொண்டை வீக்கம், வாந்தி, வாந்தி உணர்வு, வயிற்றில் சங்கடம், உதடு வீக்கம், உடம்பில் தடிப்பு, சிவத்தல், வயிற்றுப் போக்கு, உச்சபட்சமாக ஆஸ்துமா, அதிலும் மோசமான மரணம் கூட!
என்ன செய்வது?
ஒருவருக்கு அன்றாட உணவில் அவசியமானவைதான் பழங்கள். உங்களுக்கு ஒரு பழம் ஒவ்வாமையை ஏற்படுத்துவது உறுதியானால், அந்தப் பழத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பை நீங்கள் தகுந்த மாற்று உணவால் சரிப்படுத்த முன்வர வேண்டும். பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, அதை சமைத்துச் சாப்பிடும்போது அதன் ஒவ்வாமைத் தன்மைகள் வெகுவாகக் குறைகின்றன.
எனவே, பழத்தை 'பேக்கிங்' செய்து (அ) பதப்படுத்தி சாப்பிடுவது மோசமான யோசனை அல்ல. அதன்மூலம், குறிப்பிட்ட பழத்தால் கிடைக்கும் சத்துகளை நீங்கள் இழக்க மாட்டீர்கள். ஆனால், அதை விட நல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பழத்தை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவது. அதற்குப் பதிலாக நீங்கள் மாற்று உணவுகளை நாடலாம். பழங்களின் தோலில் படிந்துள்ள பூச்சிக் கொல்லிகளும், விவசாய வேதிப்பொருட்களும் கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, பழத்தின் தோலை உரித்து விட்டால் சில வேளைகளில் பிரச்னை தீர்ந்துவிடும். பழம்தானே என்று அலட்சியமாக இல்லாமல், அதிலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்னை இல்லை!
என்றென்றும் அன்புடன், அங்குராசு!
