PUBLISHED ON : செப் 20, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
எக்ஸ்ட்ரா ஒரு கண்டம்!
உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவர். ஆனால், வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.
இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று. இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார். இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறு கிறார். இந்த உலகில் 100 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சக்கணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங் கள் உள்ளன. அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர்.
1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்தபோது, அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன. அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புது வகையான பூச்சியினம்.
அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார். என்னவொரு ஆச்சரியம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சிகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலேயே இனப்பெருக்கம் செய்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டுபிடிப்புகள் சாத்தியம்.
எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக் கின்றனர். இவற்றை ஆராயும் பணிக்கு 'காட்டுக்கூரை' என்று பெயரிட்டிருக்கிறது.
இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.
கேளு மைக்கேல் - வைக்கோல்ல செங்கல்!
என்ன பெயரும், மேட்டரும் ரைமிங்கா கீதா! இந்தியா ஒரு விவசாய நாடு. இப்போதும் கூட 60 சதவீத மக்கள் விவசாயத்தைத்தான் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். முன் பெல்லாம் இயற்கை விவசாயமுறை இருந்தது. அதனால் மறுசுழற்சி என்பது விவசாயத்தில் அபரிமிதமாக இருந்தது. மாடுகளைக் கொண்டு, உழுத நிலத்தில் விளையும் பயிர் களின் தானியங்களை மனிதர்கள் எடுத்துக் கொண்டு வைக்கோலை மாட்டுக்கு உணவாக கொடுத்தனர். மாடு இடும் சாணம் மீண்டும் பயிர் களுக்கு உரமாகும். இப்படி வளமான மறு சுழற்சி இருந்தது. இன்றைக்கு கால்நடை கள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
விவசாயத்திலும் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலும் குறைந்து, செயற்கை உரங்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
வெளிநாடுகளில் நம் நாட்டை விட கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு. அங்கெல்லாம் விவசாயத்தை தனித் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பை தனித் தொழிலாகவும் செய்து வருகின்றனர். அதனால் ஏராளமான அளவு வைக்கோல் மிச்சமாகிறது.
உதாரணமாக, அளவுக்கு அதிகமாக வைக்கோலும், குறைவான எண்ணிக்கையில் கால்நடைகளும் உள்ள கனடா போன்ற நாடுகளில் வைக்கோலை கொண்டு செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. வைக்கோல் கட்டுகளை இயந்திரத்தில் வைத்து மிகுந்த அழுத்தத்தில் அழுத்தி செங்கல் தயாரிக்கின்றனர்.
இந்த வைக்கோல் செங்கலைக் கொண்டு வீடு கட்டுகின்றனர். இந்த வைக்கோல் வீடுகள் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது மண்ணால் செய்யப்படும் செங்கலை விட வலிமையாக இருக்கிறது. காற்று, மழை போன்றவற்றையும் சேதமில்லாமல் தாங்கி நிற்கிறது.
காரைவிட சைக்கிள் பெட்டர்!
ஹெலிகாப்டர் போன்று வானில் பறக்க கூடிய நவீன சைக்கிள் ஒன்றை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த யான்ரிக் ரெட், ஜான் போடன் என்ற 2 இன்ஜினியர் கள் உருவாக்கி இருக்கின்றனர்.
'எக்ஸ்புலோஸ் ஏர்-எக்ஸ்-1' என்று பெயரிட்டுள்ள இந்த சைக்கிளுக்கு 4 சக்கரம், ஒரு இருக்கை மற்றும் அதன் பின் பகுதியில் விசிறிகள் அமைந் திருக்கின்றன.
அதை இயக்க இயற்கை எரிவாயுவை கொண்டு (புகை வெளியிடாத எரிபொருள்) செயல்படும் 249 சி.சி. திறன் எந்திரம் உள்ளது. இதனால் இந்த நவீன சைக்கிள் நிற்கும் இடத்தில் இருந்த படியே ஹெலிகாப்டரை போல உயரே கிளம்பி பறக்கும் திறன் படைத்தது.
சுமார் 4 ஆயிரம் அடி உயரத்திற்கு செல்ல முடியும். அத்துடன் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் பயணிக்க இயலும். இதுபற்றி கண்டுபிடிப்பாளர் யான்ரிக் ரெட் கூறும் போது, அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் அலுவலக மாடியில் இருந்தபடி இதை இயக்க முடியும்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதன் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சொகுசு கார் விற்பனையை விட இதன் விலை குறைவாகவே இருக்கும் என்கிறார்.
அநேகமாக இந்த பறக்கும் சைக்கிள் 15 ஆயிரம் பவுண்ட் (ரூ.12 லட்சம்) விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
அதுமட்டுமின்றி இதை பயன்படுத்த லைசென்சு தேவை இல்லையாம். எனவே, போக்குவரத்து நெரிசல் இன்றி உல்லாசமாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்.
ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேணாம்!
பொதுவாக பலர் அன்றாடம் ஒரு ஆடையை அணிவர். மடிப்பு குலையாதபடி அவை இருக்க வேண்டும். இதற்காக பேண்ட், சட்டைகள் சலவை செய்து, பிறகு இஸ்திரி பெட்டி (அயர்ன் பாக்ஸ்) மூலம் நன்றாக தேய்த்து அணிந்து கொள்வர்.
இதை செய்ய சற்று உழைப்பும், பணச்செலவும் தேவைப்படுகிறது. ஆனால், சலவை செய்வது, அயர்ன் செய்வது போன்ற தொல்லையே இல்லாத ஒரு புதுமையான ஆடையை அமெரிக்க நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
இந்த புதுமையான ஆடையை 100 நாட்கள் வரையில் சலவைக்கு போடாமல் அயர்ன் செய்யாமல் தினமும் அணியலாம். துர்நாற்றம், எதுவும் இருக்காது. இதை உயர்ரக கம்பளியை கொண்டு உருவாக்கியுள்ளனர். இந்த சட்டை ஒன்றின் விலை சுமார் ரூபாய் 5 ஆயிரம் (98 டாலர்கள்) ஆகும்.
இது இளைஞர்களுக்கு ஒரு புதுமையான வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்றும் அன்புடன், அங்குராசு.
