
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பேமஸ் ஆடை அணிவதில் டென்ஷனா?
இன்று பேத்தி வயது சின்ன பெண்களிலிருந்து பாட்டி வயது பெரிய பெண்கள் வரை அனைவரும் அணியும் ஆடையாக முதல் இடத்தில் இடம் பெற்றிருப்பது சுடிதார் தான்.
அது மிக எளிமையாகவும், சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், நாகரிகமானதாகவும் கலாச்சாரமானதாகவும் உள்ளது.
பெரியவர்களை மதிப்போம்!
திருமணம், சமூக சடங்குகளில் பந்தி பரிமாறும்போது முதியவர்கள்படும் அவஸ்தை சகிக்க முடியாது. உணவிற்காக, இளையவர்கள் அடித்து பிடித்து பறக்க, வயதில் பெரியோர் பசியையும் பொறுத்து காத்திருக்க வேண்டி வருகிறது.
இதற்கு ஒரு வழிமுறையை கடைப் பிடிக்கலாம். அவர்களுக்காகவே ஒரு வரிசையை ஒதுக்கி ஒழுங்குபடுத்தலாம். இதை பார்க்கும் சிறியவர்களுக்கும், பெரியவர்களை மதிக்கும் பண்பு உண்டாகும்.
ஒளிபட்டால் தூங்கலாம்!
சிலர் தூக்கமின்மை வியாதியால் கஷ்டப்படுவர். நல்ல சூரிய ஒளி மேலே படும்படி (தினம் 30 நிமிடம்) இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். தூக்கத்தை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் சுரக்க இது உதவும்.
அதிகாலை சூரியன் உதித்ததிலிருந்து அரைமணி நேரம் மற்றும் மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பு என ஆரம்பித்து நடக்கலாம். நடத்தல் மற்றும் சூரிய ஒளிப்படல், நல்ல காற்றை சுவாசித்தல் என பற்பல நன்மைகள் ஏற்படும்.
எமரி ஒட்ட வைக்கும்!
இன்று நிறைய பயன்பாடுகளில் பிளாஸ்டிக் பயன்படுகிறது. அதுவும் வீட்டு உபயோகப் பொருள்களில் பிளாஸ்டிக் நிறைய இடம்பெறுகிறது.
பிளாஸ்டிக் சாமான்கள் விரிசல் அல்லது ஓட்டை விழுந்து விட்டால், எம்.சீல் வைத்து ஒட்ட முடியாது.
ஆனால், உப்புத்தாள் (எமரி பேப்பர்) கொண்டு அந்த இடத்தை தேய்த்து சொர சொரப்பாக்கி விட்டு, அதன்மேல் எம்.சீல் பிசைந்து ஒட்டினால் நன்றாக பிடித்து கொள்ளும்.
இலை பழுக்காது!
உணவு என்பது நம் உடலினை, உள்ளத்தினை, உயிரினை வளர்ப்பது. அதனை உண்ணும் முறைகளில் முக்கியமானது அதனை உண்ண தேவைப்படும் தட்டுகள். அன்றைய காலங்களில் இலைகளில் உண்பர்.
முக்கியமாய் தையல் இலை, வாழை இலைகளில் உண்பர். வாழை இலையில் உண்பதால், நன்மைகள் நிறைய உண்டு. இன்று பொய் வாழையிலை புசிக்கிறோம். ஒரு மாதம் வாழையிலையில் உண்டுதான் பாருங்களேன்.
செரிமானம் சூப்பராய் இருக்கும். உடல் மினுமினுப்பு பெறும். இந்த இரண்டே நமக்கு மிக முக்கியமானவைகள் தானே.
வாழை இலை பழுத்துவிடும். வாழை இலையை சுருட்டி செங்குத்தாக நிமிர்த்தி வைத்தால், நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது. காய்கறி வாங்கபோகும்போது நிச்சயமாக இனி வாழை இலையை வாங்க மறவாதீர்.
சிறுநீரக செயலிழப்பை தவிர்க்க...!
இந்த சிறுநீரக உறுப்பின் செயலிழப்பு என்பது வாழ்க்கை முறையையே புரட்டி போடுகிற பெரும் பிரச்னை.
இது வராமல் தவிர்க்க சில யோசனைகள்....
* உப்பு என்பது ரொம்ப தப்பு என்பதை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் புரிய வையுங்க. ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றை கிட்டேயே சேர்க்காதீங்க. அதை சாப்பிட்டேதான் ஆகணும் என்றால் அந்த அளவுக்கு உப்பு நமது உடலிலிருந்து வெளியேறும்வரை, வியர்த்து விறுவிறுக்க வேலையோ, விளையாட்டோ மேற்கொள்ளணும்.
* அதிக நீர் குடித்தால், உடல் இளைக்கும், சருமம் மினுமினுக்கும் என்று ஒரு சிலர் நிறைய நீர் அருந்துகின்றனர். அதுவும் சரியில்லைதான். ஒருவரின் உடல் கூற்றுக்கும், தாகத்துக்கும் ஏற்ப நீர் அருந்தினால் போதுமானது.
* சிறுநீரகப் பிரச்னைக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் இரண்டும் முன்னணி காரணங்கள் என்பதால், இவை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வந்துவிட்டால், வருடத்துக்கு ஒரு முறையாவது சிறுநீரில் ஆல்புமின் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்ள வேண்டும்.
* 'சி.கே.டி' எனப்படும் க்ரானிக் கிட்னி டிஸீஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், அதை தடுத்து நிறுத்தவோ, சீர் செய்யவோ முடியும்.
* பதற்றமற்ற வாழ்க்கை முறை, சமச்சீரான சத்துணவு, இருவித மருந்து தொகுப்புகள் மூலம் சிறுநீரில் புரோட்டீன் இழப்பை தடுத்து சி.கே.டி., மேலும் பரவாமல் தடுக்கலாம்.
இருப்பினும் வருமுன் காப்பதே நல்லது!
பேரிச்சை ஓலை!
உலகிலேயே அதிக அளவில் பேரீச்சை மரங்கள் வளர்வது வட அமெரிக்காவில்தான். 100 அடி உயரம் வரை இந்த மரங்கள் வளர கூடியவை. ஒரு பேரீச்சை மரம், பழம் கொடுக்க ஆரம்பிக்கிறது என்றால், அப்படி கொடுப்பதை அது 300 ஆண்டுகள் வரை நிறுத்தாது!
பேரீச்சை மர ஓலைகளை ஆப்பிரிக்கர்கள் தம் குடிசைகளுக்கு மேல் வேய்ந்து கொள்கின்றனர். பேரீச்சை மரத்திலிருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது. இதன் இளம் தண்டிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் மிகவும் ருசியானது, சத்து மிகுந்தது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'முந்திரி குலாப்ஜாமுன்' செய்முறை.
தேவையானபொருட்கள்: முந்திரி-20, பால்-1 கப், கோவா -1/2 கப், மைதா-1/2 கப், சர்க்கரை-1 1/2 கப், ஏலப்பொடி-1 டீஸ்பூன், கேசரிப்பொடி-1 சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - சிறுதுளி, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: முந்திரியைப் பாலில் ஊற விட்டு அரைத்து, மைதா, கோவா சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றை சிறு உருண்டை களாக உருட்டவும். சர்க்கரையை பாகு செய்து, ஏலப்பொடி, கேசரிப் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் உருண்டைகளை போட்டு பொன்னிற மாக குலாப்ஜாமுனைப் பொரித்தெடுக்கவும். அவற்றை சர்க்கரை பாகில் போட்டு ஊற வைக்கவும். இது ஒரு ஸ்பெஷல் ஸ்வீட். பண்டிகை காலங்களில் செய்து விருந்தினரை அசத்துங்கள்.
என்றும் அன்புடன், அங்குராசு.
***