PUBLISHED ON : ஜன 10, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
அய்யோ என் செல்லமே!
எஜமானருக்கு நாய் நன்றியுள்ள செல்லப்பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை நிரூபிக்கும் விதமான ஒரு சம்பவம் அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது. மிகுல் குஸ்மேன் என்பவர், 'கேப்டன்' என்ற பெயருடைய ஜெர்மன் ஷெபர்டு நாயை வளர்த்து வந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மரணம் அடைந்தார். அது முதல் அவர் வளர்த்த செல்லப்பிராணியான நாய் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டது. அது எங்கோ காணாமல் போய் விட்டதாக உறவினர்கள் நினைத்தனர். ஆனால், அந்த நாயோ வேறு எங்கும் செல்லவில்லை. தன்னை வளர்த்த எஜமானரின் உடல் புதைக்கப்பட்ட சமாதி அருகிலேயே தவம் கிடந்தது. ஒருநாள், இரு நாட்கள் அல்ல. சுமார் 7 ஆண்டு காலமாக அந்த சமாதியையே இன்றும் சுற்றிக் கொண்டிருக்கிறது.
களிமண் பழமொழிகள்!
கி.மு.4000த்திலேயே களி மண்ணை பேப்பர் போல் பயன்படுத்தி, அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்டவணைகள் போன்றவை எழுதப்பட்டன. போகப் போக பேசுகிற மொழியை பிரித்து தனிப்படுத்தி ஒவ்வொரு எழுத்துக்கும் குறியீடுகள் கண்டுபிடிக்கப் பட்டன.
காகிதம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் ஈரக்களிமண்ணை பரப்பி அதில் எழுத்தாணியால் எழுதி, அது உலர்ந்தவுடன் ஈரக்களிமண்ணை அதன் மீது வைத்து பேக்கிங் செய்து விடுவர். அதை கீழே போட்டு உடைத்து விடாமல் மிக ஜாக்கிரதையாக கொண்டு சேர்க்க வேண்டும். பெற்றுக் கொண்டவர் பார்சலை லேசாக தட்டி உதிர்த்தால் போதும் உள்ளே உள்ள விஷயத்தை படிக்கலாம்.
ஆயிரக்கணக்கான குறியீடுகளை வேகமாக களிமண்ணில் எழுத கல்வியறிவு அதிகமாக தேவைப்பட்டதால், பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு சட்டம், மருத்துவம், அரசியல் போன்ற விஷயங்களை எழுதுவதற்கு தனித் தனியாக பயிற்சியும் அளிக்கப்பட்டது.
எழுத்து என்பது இப்படியாக முழுவடிவம் பெற 800 ஆண்டுகள் பிடித்தன. மொழி, மனிதனின் கைவசப்பட்டவுடன் அடுத்த கட்டமாக இலக்கியம் பிறந்தது. கி.மு., 2000-ல் பாபிலோனியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், புராணங்கள், சுற்றுலா தகவல்கள், மன்னர் மேற்கொண்ட வேட்டைகள் போன்றவை தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பழமொழிகளைக் கூட பாபிலோனியர்கள் விட்டுவைக்கவில்லை. அந்த காலத்தில் அழகு நிலையங்கள் பெண்கள் கூடும் இடமாக இருந்திருக்க வேண்டும். ஒரு களிமண் குறிப்பில் அழகு நிலையங்கள் இருந்தால் அங்கே கிசுகிசுவும் கூடவே இருக்கும் என்கிற பழமொழி ஒரு கல் வெட்டில் கிடைத்திருக் கிறது. இன்றளவும் பின்பற்றப்படும், 'வியாபாரத்தில் நண்பர்கள் கிடையாது' என்ற பழமொழியும் களிமண் குறிப்பில் உள்ளது.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
