PUBLISHED ON : செப் 24, 2010

அனைவருக்கும் எனது அன்பு.
ரொம்ப குட்டீஸ்க்குப் பள்ளி !
எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. பெங்களூரிலுள்ள, 'போடர் ஜம்போ கிட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக் கூடத்தில் தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, முடிந்து வகுப்புகள் ஓடிக்கிட்டு இருக்கு. இந்த பள்ளியில் எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதில், குழந்தைகளின் மன வளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி, போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும் பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பாடத்திட்டத்திற்கு, 'மனவள மேம்பாடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சம்.
ஒரு வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளுடன் அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக் கூடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இதுபோன்ற பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில், குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது. பாவம் அம்மாக்கள். அம்மாக்களான பின்னும் பள்ளிக்கூடம் போக வேண்டியுள்ளது. தாயின் தியாகம் எப்போதும் அதிகரிக்கிறதே தவிர குறைவதில்லை.
600 பேரை காப்பாற்றிய இருவர் !
சமீபத்தில் மும்பையில் குளோரின் வாயு கசிந்த போது, இன்ஜினியரிங்க கல்லூரி மாணவர்கள் இருவர், சாமர்த்தியமாக செயல்பட்டு, 600க்கும் மேற்பட்ட சக மாணவர்களின் உயிர்களை காப்பாற்றினர். மும்பை துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்களில் இருந்து, சமீபத்தில் குளோரின் வாயு கசிந்தது.
இதில் துறைமுகம் அமைந்துள்ள ஹாஜிபந்தர் பகுதியில் வசித்த, 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லால் பகதூர் சாஸ்திரி மரைன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியும் இங்கு உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தங்கி உள்ளனர். குளோரின் வாயு கசிந்த நேரம், அதிகாலை என்பதால் மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வாயு கசிந்தது யாருக்கும் தெரியவில்லை. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ரஸ்தோகி, நர்சிக் இமாம் ஆகிய மாணவர்களும் அந்த விடுதியில் தங்கியிருந்தனர்.
தேர்வு நடப்பதால், அன்று அதிகாலை இருவரும் படித்து கொண்டிருந்தனர். வித்தியாசமான ஒரு வாசனை அடிப்பதை அவர்கள் உணர்ந்தனர். பள்ளி ஆய்வகத்தில் இது தொடர்பாக, அவர்கள் ஏற்கனவே படித்திருந்ததால் குளோரின் வாயு கசிந்தால் ஏற்படும் வாசம்தான் அது என்பது அவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினர். தூங்கி கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பினர். அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர். பின் நான்கு பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு அறைக்கும் சென்று, தூங்கி கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பினர்.
அவர்களுக்கு பதட்டம் ஏற்படாதவாறு விஷயத்தை தெரியப்படுத்தினர். அதையடுத்து அனைத்து மாணவர்களையும் அதிகமாக தண்ணீர் குடிக்க வைத்தனர். ஈரமான துணியை மூக்கை மறைத்து கட்டி கொள்ளும்படி செய்தனர். லிப்ட்டை பயன்படுத்தாமல் மாடிப்படி வழியாக இறங்கி செல்லும்படி அனைவரையும் கட்டாயப்படுத்தினர்.
ஒருவழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறினர். அப்படியும் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறிந்து இந்துஜா மருந்துவமனை டாக்டர் குஸ்ரல் பஜன் கூறியதாவது...
ரஸ்தோகி, நர்சிக் இருவரின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. அந்த அதிகாலை நேரத்திலும் தூங்கி கொண்டிருந்த அனைத்து மாணவர்களையும் எழுப்பி, அவர்களை காப்பாற்றினர். பொதுவாக தூங்கும்போதுதான், ஒருவர் அதிகமாக காற்றை உள் இழுப்பர். குளோரின் வாயு கசிந்தபோது தொடர்ந்து தூங்கி கொண்டிருந்திருந்தால், மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
இவ்வாறு பஜன் கூறினார். 'குட் ஒர்க் - கீப் இட் அப்!'
ஒரு வரி ; ஒரே வரி !
நட்பு - கடவுள் அளித்த பரிசு. மனிதன் பெற்றுள்ள தலைசிறந்த வரங்களில் ஒன்று.
கலாம் காலம் !
மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, ஆறு ஒழுக்கப் பண்புகளை கடைபிடிக்க வேண்டும். அவை தாராள குணம், நன்னெறி, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, ஒருமித்த கவனம், நுண்ணறிவு.
அம்மா ! ப்ளீஸ் செஞ்சு தாங்கம்மா !
இது 'கத்தரிக்காய் பிரட்டல்' செய்முறை நேரம்.
தேவையான பொருட்கள்:
<சிறிய கத்தரிக்காய் - 10, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, நறுக்கிய பச்சை மிளகாய் - 2, நறுக்கிய தக்காளிப்பழம் - 2, நறுக்கிய கொத்தமல்லி இலை - 1/4 கப், சீரகப் பொடி - ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி, மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக் கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
கத்தரிக்காயை நன்கு கழுவி, காம்பை வெட்டி விடாமல் நான்கு பகுதிகளாக பிளந்து கொள்ள வேண்டும். மேலே தரப்பட்டிருக்கிற மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக பிசைந்து, அதை கத்தரிக்காயுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். வெட்டிய பிளவுகளின் உட்பகுதியிலும், பிசைந்த மாவு நன்கு படும்படி பூச வேண்டும். ஓரளவு அகன்ற பாத்திரத்தில் கத்திரக்காய்களை வைத்து, மைக்ரோ அவனில் ஹையில் 10 நிமிடங்கள் சமைக்க வேண்டும். மூட வேண்டிய அவசியம் இருக்காது. ஓரிரு தடவைகள் கிளறிவிட்ட பின்னர் மைக்ரோ மீடியம் ஹையில், மீண்டும் 10 நிமிடங்கள் சமைக்க வேண்டும். இடை இடையே கிளற வேண்டும். சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்றவற்றுடன் இதனை பரிமாறலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
