PUBLISHED ON : ஜூலை 04, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
இன்னும் கோள்களா!
புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு புதையல் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் அடை யாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப் பட்ட கெப்ளர் தொலைநோக்கி, 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது. நாம் வாழும் பூமியைப் போன்றே வேறு கோள்கள் இருக்கக் கூடுமா என்ற ஆசையின் விளைவே இந்தத் தேடுதல் வேட்டை.
நம் சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது மட்டும் 715 புதிய கோள்கள் கண்டறியப் பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது.
கெப்ளர் தொலைநோக்கி புதிய உத்தி மூலம் புதிய கோள் களுக்கான தேடலில் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாசா ஆய்வாளர் லிஸ்லாயர் கூறியதாவது, 'மனிதர் களுக்குத் தெரிந்த கோள்களின் எண்ணிக்கை இன்று இரு மடங்காகியிருக்கிறது. 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது' என்றார்.
புதிய கோள்கள் கண்டறியப்பட்டாலும், இக்கோள்களின் கூட்டுப் பொருள்கள் (அல்லது எவற்றையெல்லாம் உள்ளடக்கியவை) என்பது குறித்த அதிக விவரங்கள் தெரியவில்லை.
கடினமான தரை, நீர், அவை சுற்றி வரும் நட்சத்திரங்களிலிருந்து அவற்றின் தொலைவு, உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து அறியப்படவில்லை. அந்தக் கோள்கள் அதிக வெப்ப முடையவையா, கடும் குளிர் நிலவும் பிரதேசமா என்பன போன்ற விவரங் களும் அறியப்படவில்லை. ஆனால், தங்கள் நட்சத்திரங்களை அவை பல முறை கடப் பதை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த புதிய கோள்கள் அனைத்தும் கெப்ளர் நிறுவப்பட்ட 2009 மார்ச் முதல் 2011 வரையிலான காலகட்டங்களில் கண்டறியப்பட்டவை.
புதைந்த பள்ளி!
பண்டைய ரோம் சாம்ராஜ்ஜியத்தின் போர் பயிற்சி பள்ளி ஒன்று ஆஸ்திரியாவில் புதைவுகளில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ரோம் சாம்ராஜ்ஜியத்தில் பொது மக்கள் கூடியிருக்கும் அரங்கு களின் மத்தியில் அடிமைகள் ஒருவருடன் ஒருவர் மோதி உயிரை விடுவதும், அடிமை கள் விலங்குகளுடன் மோதுவது மான கொடூரமான பொழுது போக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இதனை மையமாக வைத்து 'கிளாடியேட்டர்' திரைப்படமும் வெளியாகியுள்ளது.
வியன்னா நகரில் இருந்து கிழக்கே 20 கி.மீ., தொலைவில் துனுபி ஆற்றங்கரை யோரம், கிளாடியேட்டர் பயிற்சி பள்ளியின் சிதிலமடைந்த கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து இருந்தன. இதனை தொல்பொருள் ஆய்வாளர்கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
