PUBLISHED ON : மார் 31, 2017

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
டாலுமா - ஹெல்ப்புமா!
லகுனா பகுதியில், உள்ளூர் மீனவர்களின் நண்பனாக டால்பின்கள் உலா வருகின்றன. மீன் பிடிப்பதற்காக தண்ணீரில் ஒரு பக்கம் மீனவர்கள் நிற்க, அவர்களை பார்த்தவுடன், டால்பின்கள் ஒன்று கூடி மற்றொரு புறத்தில், மீனவர்களை நோக்கி வரிசையாக அணிவகுக்க துவங்கி விடுகின்றன.
அவை, அணை போல தண்ணீருக்குள் சுவர் எழுப்பியவாறு நிற்கின்றன. அந்த சமயத்தில், அங்கு வரும் மீன்கள், டால்பின்களை கடந்து செல்ல முடிவதில்லை. மீனவர்கள் நிற்கும் பகுதிக்கும் செல்ல முடியாமல் வேறு திசை நோக்கி, மீன்கள் செல்ல முற்படும்போது, டால்பின்கள் சமிக்ஞை எழுப்புகின்றன.
எப்படி என்றால், தங்கள் தலை அல்லது வாலை தண்ணீருக்கு மேல் உயர்த்தி, அந்த பகுதியில் மீன்கள் வந்திருக்கும் தகவலை, மீனவர்களுக்கு தெரிவிக்கின்றன.
உடனே, மீனவர்கள், டால்பின்களுக்கு இடையே வலையை வீச, மீன்கள் சிக்கி கொள்கின்றன. இவ்வாறு, டால்பின்கள் உதவி செய்வதால், ஒரே நேரத்தில் வலையில் இருந்து மீன்களை குவியல் குவியலாக மீனவர்கள் அள்ளுவதும் நடக்கிறது.
ஆனால், எல்லா டால்பின்களும், மீனவர்களுக்கு இப்படி உதவுவது இல்லை. 150 டால்பின்கள் இருந்தால், அவற்றில், 50 டால்பின்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.
உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு, டால்பின்கள் ஏன் நீண்ட காலமாக தொடர்ந்து உதவுகின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
கிம்ப்யூட்டர்!
பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி, உடல் நலிந்து, சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டியவர் கிம்பெக்; வயது 57. அவரது தந்தை, அவரை தொடர்ந்து உற்சாகப் படுத்தினார்.
அப்போது தான், கிம்மிடம், 'போட்டோகிராபிக் மெமரி' எனப்படும் அதீத நினைவாற்றல் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தான் படித்த புத்தகங்களை, ஒரு வார்த்தை விடாமல், முழுமையாக திரும்ப சொல்ல முடியும் அளவுக்கு நினைவாற்றல் பெற்றிருந்தார் கிம்.
ஒரே நேரத்தில், இரண்டு புத்தகங்களை படிக்கும் திறன் அவருக்கு இருந்தது. அதனால், மடமடவென, 12 ஆயிரம் புத்தகங்களை படித்து தள்ளிய கிம், எதை கேட்டாலும் பதில் சொல்ல துவங்கினார்.
கம்ப்யூட்டர் போல, தான் ஒரு, 'கிம்ப்யூட்டர்' என அழைத்து கொண்ட கிம், எந்த துறை பற்றி கேட்டாலும், உடனே பதில் சொல்லி விடுகிறார். இதே திறனைப் பயன்படுத்தி, எந்த இசையை கேட்டாலும், மறு நிமிடமே அதை வாசித்துக் காட்டும் திறமை உருவானது.
இவரது சிறப்பு திறன்களை அறிந்த, ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர், பேரிமரோ, அவரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார். அந்த படம் தான், டஸ்டின் ஹாப்மென் நடித்த, 'ரெயின்மென்' அது மிகப் பெரிய வெற்றி பெற்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்வி என்று தொடர்ந்து தன் திறமையால், உடல் குறைபாடு வெற்றிக்கு ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தார் கிம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
