PUBLISHED ON : ஜூலை 27, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
யானைக்கு பிடிக்க கூடாதது...
காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு, காட்டு யானைகள், எப்போதும் தொந்தரவாகவே இருக்கும். வயல்களை அழிப்பது, குடியிருப்புகளை சேதப்படுத்துவது என, எதிர்பாராத தொந்தரவுகள். ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட, மனிதன் பலவகைகளிலும் முயற்சிக்கிறான். அந்த முயற்சிகளால், யானைகள் காயம் அடைகின்றன; மனிதர்கள் இறக்கின்றனர்.
யானை - மனிதன் இடையேயான, இந்த போராட்டத்தை சுமூகமாக மாற்ற, வனத்துறை, ஒரு வழி கண்டு பிடித்துள்ளது. அதுதான், யானைகளைக் கொண்டே, காட்டுயானைகளை விரட்டுவது.
சரி... நாம் வளர்க்கும் கோவில் யானைகளை வைத்து விரட்டலாமே என்றால், அது முடியாது. கோவில்களில் வளரும் யானைகள் எல்லாமே, பெண் யானைகள் தான். அது மட்டுமல்ல; பிறந்ததில் இருந்து, மனிதர்களை பார்த்தே வளர்வதாலும், ஒரே இடத்தில் கட்டிப் போடுவதாலும், பலம் குறைந்து, மென்மையாகி விடுகின்றன. காட்டு யானைகளை பார்த்ததும், இவை கதி கலங்கி விடும். அதனால், அவற்றை பயன்படுத்துவது இல்லை.
இந்த பிரச்னையைத் தீர்க்க உருவானது தான், காட்டு யானைகளைக் கொண்டே, ஊருக்குள் வரும் யானைகளை விரட்டும் திட்டம்.
இதற்காக, காடுகளில் காயம்பட்டு கிடக்கும் ஆண் யானைகளைக் கொண்டு வருகின்றனர். அவற்றுக்கு, மருத்துவம் செய்து பழக்கப்படுத்தி, குறிப்பிட்ட யானைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை, 'கும்கி' என்று அழைக்கின்றனர்.
நல்ல, வாட்ட சாட்டமான ஆண் யானைகளே இதற்கு தேர்வு செய்யப்படும். அவற்றுக்கு, தந்தம் இருக்க வேண்டும். யானைக்கு தனி கம்பீரத்தை கொடுப்பது, தந்தம். பெரிய தந்தம் உள்ள யானையை பார்த்தால் மற்ற யானைகள் பயப்படும்.
இப்படி தேர்வு செய்யப்பட்ட, 'கும்கி' யானைகள் குணமடைந்தப் பின், பாகன்கள் நெருங்கி பழகுவர். ஆரம்பத்தில், பக்கத்தில் வரவிடாமல் விரட்டியடிக்கும்.
முதலில், இனிப்பான கரும்பு துண்டுகளை கொடுத்து பழக்குவர். இனிப்பை சுவைக்கும் யானை, அதற்கு அடிமையாகும். தொடர்ந்து, வெல்லம் கொடுப்பர். இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக கும்கியை வழிக்கு கொண்டு வருவர். பின், காட்டு யானையை துரத்த பழக்குவர்.
யானைக்கு பிடிக்க கூடாதது மதம்... பிடித்து விட்டாலோ, சகலமும் கதம்! கதம்!
மொசக்குட்டி!
முயல்கள், கொறிக்கும் பாலுாட்டி வகையை சார்ந்தவை. மேல் உதடு பிளவு பட்டிருக்கும். கூர்மையான பற்கள், தேய தேய வளர்ந்தபடியே இருக்கும். இதனால், கடின பொருட்களையும், சுலபமாக கொறித்து உண்ணும்.
குழி முயல்கள், வெண்மை, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கும். காட்டு முயல்கள், பழுப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் காணப்படும்.
முயல்களை வளர்க்க, நீள கூண்டு அவசியம். முயல்களை, காதுகளின் அடிப்பகுதியில் ஒரு கை, உடலின் அடியில் ஒரு கை, என பிடித்து லாவகமாக துாக்க வேண்டும்.
முயல்களுக்கு, வைட்டமின் பி சத்தும், அமினோ அமிலங்களும் அதிகம் தேவை. முயல் புழுக்கைகளில், இச்சத்துகள் இருப்பதால், அதையே உண்டு விடுகின்றன.
விவசாயிகளுக்கு, தொல்லை தரும். வயல்களில் வளரும் பயிர்களை, மூளையிலேயே தின்று அழித்து விடும்.
குழி முயல் முடியால், தொப்பிகள், ஆடைகள் நெய்யப்படுகின்றன. குழி முயலைப் பழக்கி, வீட்டில் வளர்க்கலாம். காட்டு முயல் பழகாது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!
