
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
ஏழிலைக் கிழங்கு!
உருளை, சேப்ப, கருணை கிழங்குகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன ஏழிலை...
கப்பக் கிழங்கு என்று சொல்கிறோமே அது தான் இந்த ஏழிலை!
பல சத்துக்கள் அடங்கிய கிழங்கு. அவித்து, பொறித்து, குழந்தைகளுக்கு வழங்கினால், அடம் பிடிக்காமல் சாப்பிடுவர்.
தென் ஆப்பிரிக்காவை, தாயகமாக கொண்ட இக் கிழங்கு, தற்போது, ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில், பரவலாக உண்ணப்படும், உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.
மனிகாட், டாபியோகா, யுகா, கஸ்ஸவா என, பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
* மாவுச்சத்து நிறைந்தது. 100 கிராம் கிழங்கில், 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில், சுக்ரோஸ் எனும், சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும், 'அமைலேஸ்' என்ற கூட்டுச் சர்க்கரையும், கணிசமான அளவில் உள்ளது
* மிக குறைந்த கொழுப்புச் சத்தும் மற்ற கிழங்குகளை விட, அதிக அளவு புரதச்சத்தும் நிறைந்தது
* 'விட்டமின் -கே' நிறைந்தது. எலும்புகளின் உறுதி தன்மைக்கு உதவுவதுடன், குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சி, மூளைத் திறனுக்கு அத்தியாவசியமானது. அதனால், 'அல்சீமர்' எனும், ஞாபக மறதி வியாதிக்கு, மருந்தாகப் பயன்படுகிறது
* விட்டமின் - பி காம்ப்ளக்ஸ், பைரிடாக்சின், ரியோபிளேவின், தயமின் போன்றவை, இதில் உள்ளன
* தாது உப்புக்களான, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், அயர்ன், மாங்கனீசு போன்றவையும், நிறைந்துள்ளது
* 100 கிராம் கிழங்கில், 271 மி.கி., பொட்டாசியம் சத்து இருக்கிறது இது, சுரப்பிகள் நன்றாக வேலை செய்யவும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஒழுங்குப்படுத்துகிறது.
* அண்டை மாநிலமான கேரளா உட்பட, உலக நாடுகள், ஏழிலைக் கிழங்கால், பல்வேறு உணவு பண்டங்கள் தயாரித்து, சாப்பிடுகின்றனர்
* தமிழகத்தில், இக்கிழங்கை அவித்து, பொறித்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது
* ஏழிலை கிழங்கு சிப்ஸ், சுவையாக இருக்கும்
* கேக், பிஸ்கட், கூழ் என, வித விதமான பதார்த்தங்கள் செய்து சாப்பிட்டு விட்டு, 'ஏழிலைக்கு ஈடில்லை...' என குரல் கொடுங்கள்!
இமயத்தில் சிப்பியா...
இமயமலையின் சிகரங்களில் கடற்சிப்பிகள் கிடைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. 'அவ்வளவு உயரமான மலைப் பகுதியில், கடற்சிப்பிகள், எப்படி வந்தது... ' என்ற கேள்வி எழுகிறதல்லவா...
பல கோடி ஆண்டுகளுக்கு முன், இமயமலை இருக்கும் பகுதி, கடல் பகுதியாக இருந்துள்ளது. மற்ற ஆசிய நாடுகளில் இருந்து, இந்தியா கடல் நீரால் பிரிக்கப்பட்டு இருந்தது.
ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் நிலப் பரப்பை தாங்கி இருக்கும் பூமித் தகடுகள், வடக்கு ஆசியாவை நோக்கி நகர்ந்தன.
இதன் காரணமாக, கடலில் மூழ்கி இருந்த இமயமலைப் பகுதி உயர்ந்தது. இதனால் தான், கடற்சிப்பிகள், கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், இமயமலையின் சிகரங்களில் காணப்படுகின்றன.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.