PUBLISHED ON : மே 30, 2020

மூளை பலம்பெற!
மூளை, மனித உடலின் மிக முக்கிய பகுதி; அதை காக்கும் விதத்தை பார்ப்போம்!
இயற்கையின் கொடை மஞ்சள் செடி; அதன் கிழங்கு, உணவில் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறது; மருத்துவ பண்புகள் நிறைந்தது. நோய் கிருமிகளை அழிக்க வல்லது. இதில் உள்ள, 'பயாசைட் மெத்தாக்சி குர்குமின்' என்ற ரசாயனக்கூறு, மூளையில் ரத்தம் உறைவதை தடுப்பதாக, ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
உணவில், தினமும் மஞ்சள் சேர்ப்பது நல்லது. தமிழர் உணவில், சுவையூட்டியாக மஞ்சள் வலம் வருகிறது.
ரத்தம் உறைவதை தடுக்கும் திறன், பூண்டுக்கு உண்டு. ரத்த கொதிப்பை குறைக்கும். உடல் கொழுப்பை கரைக்கும். பூண்டை வேகவைத்தும், வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிட்டால், மூளை வலுப்பெறும்.
செம்பருத்தி, வெள்ளைத் தாமரை பூ இதழ்கள் இதயத்துக்கும், மூளைக்கும் உகந்தவை. இந்த இதழ் சேர்த்த தேனீர், ரத்தக் கொதிப்பை குறைக்கும்; பக்கவாதத்தை தடுக்கும்.
திராட்சை விதை, மூளையில் ரத்தம் உறைவதைக் தடுக்கும். நாட்டு திராட்சையை விதையுடன் சாப்பிடுவது நன்மை தரும்.
இஞ்சியை பயன் படுத்தாத பாரம்பரிய மருந்துவம் உலகில் இல்லை. ஆசிய நாடான ஜப்பான் முதல், ஆப்ரிக்க நாடான ஜமைக்கா வரை, எல்லா நாட்டு பாராம்பரிய மருத்துவத்திலும், இஞ்சிக்கு முதலிடம் உண்டு.
இஞ்சியை காய வைத்தால் சுக்கு; இதன் சிறப்பை, 'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை' என்கிறது பழந்தமிழர் சொல்லாட்சி. இஞ்சித் துவையல், இஞ்சித் தேநீர், இஞ்சித் தேன் என, பல வகையாக சாப்பிடலாம்.
மூச்சுப்பயிற்சியும், மூளையை பலப்படுத்தும்; இதை, தேர்ச்சி பெற்ற யோகா மையங்களில் கற்கலாம்.
பணக்கார துறவி!
பிரபல யோகி சுவாமி விவேகானந்தரை தரிசிக்க வந்த பணக்காரர், 'இந்த இளம் வயதில், உங்களால் எப்படி துறவியாக முடிந்தது...' என கேட்டார்.
'ஒன்றும் ஆச்சரியமில்லை; நீங்களும் கூட துறவி தான்; நான், கடவுளுக்காக எல்லாவற்றையும் துறந்தேன்; பணத்துக்காக, நீங்கள் எல்லாவற்றையும் துறந்துள்ளீர். அவ்வளவு தான்...' என்றார். பதில் கேட்டு வாயடைத்தார் பணக்காரர்.
நிறம் மாறாமல்!
இயற்கை நிறம் மாறாமல், காய்கறிகளை குறைந்த நேரம் வேக வைத்து சாப்பிட வேண்டும். அதிக நேரம் வேக வைத்தால், நிறம் மங்கி, வைட்டமின் உட்பட சத்துக்கள் செயலிழந்து விடும்.
வேக வைக்கும் போது, சோடா மாவு சேர்க்காதீர். அது காய்கறியின் நிறத்தை காக்கும்; ஆனால், வைட்டமின் சத்துக்களை காலியாக்கி விடும்.
துாக்கம் எங்கே...
பிரபல ஞானி ஹோஜா, நகர வீதிகளில் நள்ளிரவில் சுற்றித்திரிந்தார்.
அவரைப் பிடித்து, 'இந்த நேரத்தில் எதை தேடி அலைகிறீர்...' என்றனர் வீரர்கள்.
'என் துாக்கம் காணாமல் போய் விட்டது; அதை தேடி அலைகிறேன்...' என்று பதில் அளித்தார் ஞானி.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
