தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஆக 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்பூசணி!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது தர்பூசணி. அதன் ருசியால், பலநாட்டு மக்களின் அன்றாட உணவில் முக்கியத்துவம் பெற்று விட்டது. மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில், 1,200 ரக தர்பூசணிகள் உள்ளன. விதையற்ற ரகங்களும் உண்டு.

ஆசிய நாடான ஜப்பானில், சதுரம், முக்கோணம் என, ரசனைக்கு ஏற்ப பல வடிவங்களில் விளைவித்து அறுவடை செய்கின்றனர் விவசாயிகள். அது மட்டுமல்ல; ஆசிய நாடுகளான சீனா, ஜப்பானில், விருந்தாளிகள் கொண்டு வரும் மதிப்புமிக்க வெகுமதிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பழத்தில் கனிந்த சிவப்பு பகுதியை சாப்பிட்டு, தோலை குப்பையில் வீசி விடுகிறோம். சீனர்கள், இந்த பழத்தின் எந்த பகுதியையும் வீணாக்குவதில்லை. வெள்ளை நிறத்தில் கெட்டியான சதைப் பகுதியையும் பயன்படுத்துகின்றனர். அதைக் கொண்டு வறுவல், சட்னி, பச்சடி, ஊறுகாய் என உணவுகளை தயாரிக்கின்றனர்.

கொழுப்பும், புரதமும் அதிகமாக உள்ள இதன் விதைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வறுத்து, ஸ்நாக்ஸ் போல் சாப்பிடுகின்றனர். பொடியாக்கியும் உணவு வகைகளில் சேர்க்கின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்னாம் மக்கள் புத்தாண்டு தினத்தன்று இந்த விதைகளில் செய்த பலகார உணவுகளை தவறாமல் சாப்பிடுகின்றனர். விதையிலிருந்து எண்ணெய் எடுத்தும் பயன்படுத்துகின்றனர். அதற்காக, பிரத்யேகமான தர்பூசணி ரகங்களை பயிரிடவும் செய்கின்றனர்.

தர்பூசணியில் அதிகமாக, 'சிட்ரூலின்' என்ற பொருள் உள்ளது. இது மற்ற என்சைம்களுடன் கலந்து ரசாயன மாறுதல் அடைந்து,'ஆர்ஜினைன்' என்ற அமிலமாக மாறுகிறது. இது இதயத்தின் இயங்கு திறனை மேம்படுத்துகிறது; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடல் பருமனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நன்மை செய்கிறது. இதில் உள்ள, 'லைகோபீன்' என்ற நுண்பொருள், இதயத்தையும், சருமத்தையும் பாதுகாப்பதோடு, உடல் கொழுப்பையும் கரைக்கும்.

வைட்டமின் - சி, மிகுதியாக இருப்பதால் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. ஒரு காலத்தில், குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளைந்தது. இப்போது, ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

செடி கொடி பீன்ஸ்!

பீன்ஸ் மகத்துவமான தாவர வகை. அதன் காயில் அவ்வளவு சத்துகள் அடங்கியுள்ளன. பேப்பேசி என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல் பெயர், பேசில்லஸ் வல்கரிஸ்.

செடியாகவும் வளரும்; கொடியில் விளையும் பீன்ஸ் வகையும் உண்டு.

புதிய பீன்ஸ் குறைந்த அளவு கலோரி தரக்கூடியது. வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்தது. நார்சத்தும் அதிகம். பெருங்குடலுக்கு நோய் எதிப்பு தன்மையைத் தருகிறது. ரத்ததில் கொழுப்பு அளவையும் குறைக்கும். புற ஊதாக்கதிர் வீச்சில் இருந்து, கண் ரெட்டினாவைக் காக்கும்.

இரும்பு, கால்சியம், மெக்னீஷியம், மாங்கனீஷ், பொட்டாஷியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை, உடல் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது.

பீன்சில், பொரியல், கூட்டு செய்து சாப்பிடலாம். கேரட், காலிபிளவர், தக்காளி போன்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கலாம். சீஸ், விதைகள், காளானுடன் சேர்த்து விதவிதமாக சமைக்கலாம்.

சாலட், வெஜிடபிள் பிரியாணி, நூடுல்ஸ் உணவுகளில், பீன்ஸ் பிரதானமாக சேரும். ஆரோக்கியமாக வாழ, பிரியத்துடன் சாப்பிடுவோம் பீன்ஸ்.

மகிழட்டும் மனம்!

மிகவும் மென்மையானது மனம். அதிக பாரங்களை சுமக்க முடியாதது. எனவே, இன்றைய பாரத்தை மட்டுமே சுமக்க அனுமதிக்கவும். நேற்றைய கவலை, பாரங்களை எல்லாம் துாக்கி வீசிவிடுங்கள். இன்று என்ற அழகான நாளோடு லயிக்க விடுங்கள்.

உணவை ருசித்து மகிழுங்கள்; இயற்கையை ரசித்து அனுபவியுங்கள். மன அழுத்தத்தை போக்க, தியானம் உதவும். இறுக்கமான மனதை இலகுவாக்கி, உடலை நெகிழ வைக்கும்.

மன அழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்தால், மாடியிலோ, அறையிலோ சிறிது நேரம் உலாவலாம். பூக்களை ரசிக்கலாம். அசையும் மரங்களில் மனதை செலுத்தலாம். வீசும் காற்றுடன் ஒன்றலாம். இப்படி மூழ்க நிறைய பயிற்சிகள் இருக்கின்றன.

முழு கவனத்தையும் உச்சி முதல் பாதம் வரை கொண்டு வாருங்கள். நன்றாக மூச்சை உள் இழுங்கள். உடல் உயர்ந்து, தாழ்வதும் ஆங்காங்கே ஏற்படும் சின்னச்சின்ன வலிகளும் கவனத்தில் வரும். மனதுக்குள் ஏகப்பட்ட சிந்தனைகளும் உருவாகும். வரிசை கட்டி வரும் சிந்தனைகளை கவனத்தில் கொள்ளாதீர்.

ஓடையில் சுதந்திரமாக நீந்தும் மீன்களை போல, எண்ணங்கள் கடந்து செல்ல அனுமதியுங்கள். கடந்துபோன கவலைகளையும், வர இருக்கும் பிரச்சனைகளையும் சிந்திக்காமல், இன்றைய நாளில் மட்டும் மூழ்கி ரசித்து, கணங்களை மகிழ்ச்சியாக கழியுங்கள்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us