PUBLISHED ON : செப் 05, 2020

இடப்பெயர்ச்சி!
இயற்கையை கண்காணித்து, வாழ்வை மேம்படுத்தி கொள்கிறது மனிதஇனம். விலங்குகளும், பறவைகளும் மனிதனின் நல்வாழ்விற்கு பெரிதும் உதவுகின்றன. அவை இரைதேடியும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர்கின்றன. இதை, 'மைக்ரேஷன்' என்பர். இதில் பறவைகள் முதலிடம் வகிக்கின்றன.
பறவை மற்றும் விலங்குகளின் இடப்பெயர்ச்சியை ஆராயும் பணி, நீண்டகாலமாகவே நடை பெற்று வருகிறது.
பழங்காலத்தில் அம்பு, ஈட்டி, கத்தியால் வேட்டையாடினர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட உயிரினத்தின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம், அவை செல்லும் வழியில் வடிந்திருக்கும். அதை அடையாளமாக கொண்டு, இருப்பிடத்தை கண்டறிந்தனர். காலடி தடயத்தைக் கொண்டும் அறிந்தனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த இயற்கை மற்றும் பறவை ஆய்வாளர் ஜான் அடுபான், இடம் பெயரும் பறவைகள் பற்றி, 1803ல் ஆராய்ந்தார். ஆண்டுதோறும் ஒரே இடத்திற்குத் தான் அவை சென்று திரும்புகிறதா என்ற கேள்விக்கு விடை தேடினார்.
வட அமெரிக்காவில் வாழும் 'ஈஸ்டர்ன் போயிபி' என்ற பறவையை ஆய்வுக்கு பயன்படுத்தினார். ஒரு பெண் பறவையின் காலில், தகவல் வளையத்தை மாட்டி பறக்க விட்டார். அது இனப்பெருக்கத்திற்காக இடப்பெயர்ந்தது. சில மாதங்களுக்கு பின், இருப்பிடத்திற்கே திரும்பியது.
தற்போது பறவை, விலங்குகளை பின்தொடரவும், கணக்கெடுக்கவும், 'டிராக்கிங் டிவைஸ்' என்ற கருவி பயன்படுகிறது. இந்த கருவியை, பறவை அல்லது விலங்கு உடலில் பொருத்துகின்றனர். அவை இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ்., தொழில் நுட்பம் மூலம் கண்காணிப்பர். செயற்கைகோள் உதவுவதால் உடனுக்குடன், இடம் பெயர்வதை அறிய முடியும்.
தாவரவியல் பூங்கா!
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ அருகே தேசிய தாவரவியல் பூங்கா, 75 ஏக்கர் பரப்பில் உள்ளது. இது, 1௭௮9ல் அமைக்கப்பட்டது.
இங்குள்ள பூந்தோட்டத்துக்கு, 'சிக்கந்தர் பாக்' என்று பெயர். எலுமிச்சை மரங்களும், மாந்தோட்டமும் கவரும் வகையில் உள்ளன.
பலவகை ஆர்க்கிட் செடிகளும் உண்டு. செடிகளை உலர்த்தி பாதுகாக்கும், ஹெர்பேரியம் மற்றும் தாவரவியல் ஆய்வுக்கூட வசதியும் இங்கு உண்டு.
சுறுசுறுப்பு!
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த எழுத்தாளர் லெபைலிக்கு, ஒரு வாசகர் கடிதம் வந்தது. அதில், 'என்னை விடச் சுறுசுறுப்பானவர் யாருமில்லை என்று, என் நண்பர் பெருமை பேசுகிறார். அவரைத் திருத்த ஒரு வழி சொல்லுங்கள்...' என, ஆலோசனைக் கேட்கப்பட்டிருந்தது.
பதிலாக, ஒரு கதையை அனுப்பினார் லெபைலி.
அந்த கதை...
பட்டுப்புழுவும், சிலந்தியும், ஒரே செடியில் கூடு கட்டின. ஆற அமர கட்டியது பட்டுப்புழு. மிகவும் வேகமாகப் பணியை முடித்த சிலந்தி, 'பார்த்தாயா என் சுறுசுறுப்பை... சீக்கிரமாக வேலை முடிந்துவிட்டது. நீண்ட நாட்களாகியும், உன்னால் கட்ட முடியவில்லையே...' என, கேலியாக பார்த்தது.
அர்த்தப்பூர்வமாக சிரித்தபடி, 'பரவாயில்லை... நீ கட்டிய கூட்டால் யாருக்கு லாபம் என்று யோசித்து பார்... நான் கட்டிய கூடு, நுாலாகி, பட்டுத்துணியாக பலருக்கும் பயன் தருமே...' என்றது பட்டுப்புழு.
நாணி கோணியது சிலந்தி.
கதையுடன், 'உங்கள் நண்பரிடம் இதை படித்து காட்டுங்கள். அதன் பின், அவர் தற்பெருமை பேச மாட்டார்' என எழுதிய கடிதத்தையும் அனுப்பியிருந்தார் லெபைலி.
'உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா
முடம் பினி லுத்தமனைக் காண்'
இது, தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியுள்ள குறள். இதன் பொருள், பூ உலகில் பிறந்துள்ள நாம் பிறருக்கு உதவி வாழ வேண்டும் என்பதாகும். இந்த குறளை மனதில் பதிப்போம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
