PUBLISHED ON : ஜூன் 10, 2011

வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!
சோயா சேருங்கள்!
சோயா மாவை 'ஒண்டர்பீன்' என்று கூறி புளகாங்கிதப்படுகிறது அமெரிக்கன் சோயாபீன்ஸ் அசோசியேஷன். வியப்புக் குரிய இந்த சோயாவை சப்பாத்தி, பூரி, கட்லட், வடை, பக்கோடா, சிப்ஸ், முறுக்கு, சோயா உருண்டை குழம்பு, பொரியல் என்று கலந்து கட்டி அடிக்கலாம். ஆனால், வெறும் சோயா மட்டுமே உபயோகித்து சமைக்காமல், மற்ற காம்பினேஷனுடன்தான் சமைக்க வேண்டும்.
சோயாவை உணவில் சேர்த்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்களும் சமையல் நிபுணர்களும் அறிவுறுத்திக்கிட்டே இருக்காங்க. 'சோயாவை உட்கொண்டால், அஜீரண கோளாறு ஏற்படுகிறதே...' என்று நிறைய குடும்ப தலைவிகள் வருத்தத்துடன் கேட்பதுண்டு. முதன் முதலாக, சோயா சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடும்போது அஜீரண தொல்லைகள் சிலருக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
சில குறிப்புகளை மனதில் கொண்டு சோயாவை சமைத்தால், அஜீரண கோளாறுகளிலிருந்து எளிதாக,'எஸ்கேப்' ஆகலாம்.
கோதுமை மாவுடன் சோயாபீன்ஸை சேர்த்து அரைக்கும்போது சோயாவை வெறும் வாணலியில் சூடாகும் வரை வறுத்து கொள்ளுங்கள். பிறகு 4 கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ சோயா என்ற கணக்கில் சேர்த்து மிஷினில் அரைத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் சப்பாத்தி செய்யும்போது இந்த மாவை பயன்படுத்தலாம். சோயாவை வறுப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் வாய்ப்பும் மிகக் குறைவு. சோயா உருண்டைகளை பயன்படுத்தும்போது உருண்டைகளை வெந்நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டுங்கள். அதை பிழிந்து குளிர்ந்த தண்ணீரில் போட்டு மறுபடியும் பிழிந்த பிறகே சமையலில் பயன்படுத்த வேண்டும். சோயா உணவுகளை ஒரேடியாக அதிக அளவு சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இதற்கு சோயாவும் விதி விலக்கல்ல. எந்த விதமான சமையலில் சேர்க்கும்போதும்,அதில் சோயாவை கால் பங்குக்கு மேல் சேர்க்க வேண்டாம்.
தட்டை, முறுக்கு செய்ய வைத்திருக்கும் மாவில் சோயமாவு சிறிதளவு சேர்த்தால் ருசி மறாது அதிக எண்ணெயும் குடிக்காது. ஒரு தடவை சாப்பிட்டு விட்டு அஜீரண கோளாறு ஏற்பட்டு விட்டதே... என்று சோயாவை சமையிலிருந்து ஒதுக்கி விட வேண்டாம். அதிகமாக சேர்த்து கொள்ளாமல் சிறிதளவு சேர்த்தால், எந்த தொந்தரவும் இருக்காது. சுருக்கமா சொன்னால் சோயா ஒரு மாயாஜாலம்.
டிப்ஸ்!
உப்பு தண்ணீரில் பயன்படுத்துவதால் பாத்திரங்கள் பழுப்பு கலரில் மாறிவிடுகின்றன.
ஒரு டேபிள் ஸ்பூன் டிடெடர்ஜெண்ட் பவுடரும், கோலமாவும் கலந்து பாத்திரம் தேய்த்து ஐந்து நிமிடத்திற்கு பிறகு கழுவினால் கறைகள் நீங்கி பாத்திரங்கள் பளிச்சிடும்.
அன்னை தெரசா!
இந்தியா வந்திருந்த உலக வங்கி தலைவர் பார்பர் கோவைல் அன்னை தெரசாவை சந்தித்து,'அவரது அனாதை இல்லத்திற்கோ, சமூக சேவைக்கோ தனது வங்கியின் உதவி ஏதாவது தேவைப்படுமா' என்று கேட்டார்.
'உலக வங்கியா? அப்படி என்றால் என்ன? அது என்ன செய்கிறது?' என்று அன்னை தெரசா கேட்டதும், பார்பர் ஆடி போய்விட்டார்.
அன்னை தெரசா அவரிடம் சொன்ன இன்னொரு விஷயம் கோவைலை மேலும் ஆச்சரியப்பட வைத்தது.
'நான் யாரிடமும் இதுவரை உதவி கேட்டதில்லை, அவர்களாகவே முன் வந்து உதவினால்தான் ஏற்றுக் கொள்கிறேன். பேங்கில் வட்டிக்கு கடன் வாங்கி ஏழைகளுக்கு உதவும் அளவுக்கு எனக்கு வருமானம் எதுவும் கிடையாது' என்று சொல்லி விட்டார் அன்னை தெரசா.
சேர்த்ததை பிரித்தார்!
ஒரு சமயம் விவேகானந்தர் பேசவிருந்த மேடையில், 'GOD IS NOWHERE' என்று சிலர் எழுதி வைத்தனர். அதாவது 'கடவுள் எங்கேயும் இல்லை' என்று அதற்கு பொருள். விவேகானந்தர் அங்கே வந்ததும் அந்த வாக்கியம்தான் அவர் கண்ணில் பட்டது.
உடனே, அவர் அதே வாக்கியத்தில் ஒரு சிறு திருத்தம் செய்தார். அதில் ஒரு எழுத்தைக் கூட அழிக்காமல் ஒரு வார்த்தையை மட்டும் இரண்டு வார்த்தைகளாக பிரித்தார் அவ்வளவுதான்.
கடவுள் எங்கே இருக்கிறார் என்ற வாசகமே கடவுள் இங்கே இருக்கிறார் என்று மாறிவிட்டது. விவேகானந்தர் செய்த அந்த சிறு மாற்றம் இது தான்.
'GOD IS NOWHERE' என்பதில் கடைசி வார்த்தையை மட்டும் இரண்டாக பிரித்தார். 'GOD IS NOW HERE' என்ற அர்த்தமே மாறி விட்டது.
ஓட்டை மாற்று!
நண்டு கடினமான ஓட்டுடன் வளர முடியாது. அதனால் அது ஆண்டுத்தோறும் தன் ஓட்டை கழற்றி விடும். புது ஓடு உருவாகி கொண்டிருக்கும் போது பழைய ஓட்டை கழற்றிவிடும்.
ஒற்றை காலில் நிற்பார்!
பூரபல கராத்தே வீரர் யாமகுச்சி ஒற்றை காலில் நாள் கணக்கில் நிற்பார். 'பலம் காலில் இல்லை, மனதில்தான் இருக்கிறது... அப்படி நிற்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு நின்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மனதை உட்படுத்தி விட்டால் காலில் வலியே தெரியாது' என்பாராம்.
நாடே ராணுவம்!
உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டில்தான் ராணுவம் கிடையாது. ஆனால், அந்த நாட்டிலுள்ள திடசாலிகளான ஆண்கள் அனைவரும் சிப்பாய்களாக கருதப்படுகின்றனர். எப்போது படை திரட்டினாலும் அவர்கள் கட்டாயம் சேர்ந்தாக வேண்டும். எனவே, சுவிட்சர்லாந்திற்கு ராணுவம் என்று தனியாக ஒன்று இல்லாவிட்டாலும் கூட, அந்த நாட்டையே ஒரு ராணுவமாகதான் கருத வேண்டும்.
அன்புடன் அங்குராசு.
