
அபூர்வ நெல்குதிர்!
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சையில், நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மாபெரும் நெற்குதிர் நிமிர்ந்து நிற்கிறது. கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய காலக் கட்டங்களில் இது அமுதசுரபியாக இருந்து உதவி, பசி பிணி போக்கியுள்ளது.
தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர், கி.பி.,16ம் நுாற்றாண்டில் கோவில்களில் திருப்பணி மேற்கொண்டார். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் தானியத்தை சேமிக்கும் வகையில், குதிர் ஒன்றை அமைக்க விரும்பினார். மன்னரின் விருப்பத்தை, அவரது அமைச்சர் கோவிந்த தீட்சிதர் நிறைவேற்றி உள்ளார்.
வட்டவடிவில், கூரையுடன் சுடுசெங்கலால் கட்டப்பட்டுள்ளது இந்த நெல் குதிர். இதன் உள் மற்றும் வெளிபகுதிகள் பூசப்படவில்லை. இந்த குதிர், 36 அடி உயரம் உள்ளது; சுற்றளவு 80 அடி. பலத்த மழை பெய்தாலும் இதற்குள் வெள்ள நீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குதிர், அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என, மூன்றாக அமைக்கப்பட்டுள்ளது. பகுதிக்கு ஒன்று என மூன்று வாயில்கள் உள்ளன.
முதலில் அடிப்பகுதி வாயில் வழியாக நெல் கொட்டுவர். அது நிரம்பியவுடன், அடைத்து விட்டு, அடுத்த வாயிலை திறப்பர். அதன் வழியாக நெல் கொட்டுவர். அதுவும் நிரம்பியவுடன், மூன்றாவது வாயில் வழியாக கொட்டுவர். அது, தானிய சேமிப்பாக இருக்கும். பஞ்சம் ஏற்படும் நேரத்தில் உதவும்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில், பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விளைந்த நெல், இந்த குதிரில் சேமிக்கப்பட்டது. பஞ்சம் ஏற்பட்ட போது, நெல்குதிரை திறந்து, மக்களுக்கு வாரி வழங்கி, பசிபிணி போக்கியுள்ளார் மன்னர்.
இந்த அபூர்வ நெற்களஞ்சியம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, பாலைவனநாதர் கோவில் வளாகத்தில் உள்ளது. இப்போது, தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படுகிறது.
நம் பண்பாட்டு தொன்மையை பறைசாற்றும் அபூர்வ கருவூலம் இது.
சுண்ணாம்பு சத்து!
முன்பு வீடுகள் தோறும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தனர். சுண்ணாம்பை நேரடியாக உட்கொள்ள முடியாது என்பதால், ஏதாவதொரு இயற்கை விளைபொருளுடன் சேர்த்து சாப்பிட்டனர். குறிப்பாக வெற்றிலை, பாக்கு உடன் சேர்த்து பயன்படுத்தி வந்தனர் தமிழர்கள்.
இப்போது வீடுகளில் சுண்ணாம்பு இருப்பதில்லை. கடைகளில் கூட அரிதாகத்தான் கிடைக்கிறது. கர்ப்பிணிகளுக்கு அதிக கால்ஷியம் சத்து தேவை. அது சுண்ணாம்பு சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிறது. அந்த கால்ஷியம் சத்து, குழந்தை வளர்ச்சியிலும் சேரும்.
குளிர்காலத்தில் தொண்டை கட்டினால், முருங்கை இலை சாற்றுடன், சிறிதளவு சுண்ணாம்பை குழைத்து, தொண்டை வெளிப்புறத்தில் பூசினால், நிவாரணம் கிடைக்கும்.
சுண்ணாம்பை நேரடியாக உணவுப் பொருளாக பயன்படுத்தக் கூடாது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

