PUBLISHED ON : நவ 13, 2021

மண் மணக்கும் மாநகரம்!
மண்மணம் என்றவுடன் ஞாபகம் வருவது, மதுரை மாநகரம். இந்நகரத்தில் பேசும் விதம், உணர்ச்சி மிக்க வாழ்வியல், சுவை மிக்க உணவுகள், விண் முட்டும் கோபுரம், சிறப்பு மிக்க வரலாற்று கட்டடங்கள், முக்கியமாக மல்லிகைப்பூ இதெல்லாம் மனதில் நிழலாடும்.
மதுரையின் சிறப்புகளை அறிவோம்...
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்த மாநகரம் வந்த காலம் 1812. அப்போது, மதுரை ஆட்சித் தலைவராக இருந்தவர் ரோஸ் பீட்டர். மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தார்.
மதுரையின் சிறப்பாக மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. ஆட்சித் தலைவராக இருந்த ரோஸ் பீட்டருக்கு, மீனாட்சி அம்மன் மீது அபரிமிதமான பக்தி. ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் என்ற நம்பிக்கையில் பக்தி வைத்திருந்தார்; அந்த கோவிலுக்கு ஏதாவது செய்ய நினைத்தார்.
மீனாட்சி அம்மனுக்கு காலணி தேவைப்படுவதை அறிந்து, செய்து கொடுத்தார். அது சாதாரண காலணி அல்ல; பவளம், மரகதம் மற்றும் வைரங்கள் பதித்த காலணி. இப்போதும் மீனாட்சி அம்மன் கோவிலில் பயன்படுத்தப்படுகிறது.
ரோஸ் பீட்டர் நினைவாக, மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ரோஸ் முகிலன், ரோஸ் பாண்டியன், ரோஸ் மாயாண்டி என்ற பெயர்களை, குழந்தைகளுக்கு இன்றும் சூட்டுகின்றனர்.
ஆறிலிருந்து ஆரம்பம்!
எந்த பொருளுக்கும் ஆரம்பம் உண்டு. அதேபோல, மதுரை மாநகருக்கும் ஆரம்பம் உண்டு. கி.மு., 6ம் நுாற்றாண்டில் இங்கு மக்கள் வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மருத மரங்கள் அதிகம் இருந்ததால், 'மருதத்துறை' என அழைக்கப்பட்டது. அதுவே, 'மதுரை' என்று மருவியதாக கூறுகின்றனர் தொல்லியல் வல்லுனர்கள். நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்படுகிறது.
திருமலை நாயக்கர் மஹால், தமிழ்ச்சங்கம் என பலவும் மதுரைக்கு பெருமை சேர்க்கின்றன. புராதன சிறப்புகள் உள்ள மதுரைக்கு, இந்த காலத்திலும் ஒரு சிறப்பு சேர்ந்துள்ளது.
அது, புதுமைகள் நிறைந்த குழந்தைகளுக்கான பூங்கா; அதுவும் சாதாரண குழந்தைகளுக்கு மட்டுமல்ல; சிறப்பு குழந்தைகளுக்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, புதுாரில் இந்த பூங்கா அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இதை அமைத்துள்ளன.
இங்குள்ள விளையாட்டு உபகரணங்களை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் எளிதில் பயன்படுத்த முடியும். பூங்காவை பயன்படுத்த சிறப்பு குழந்தைகளுக்கு வயது வரம்பு கிடையாது.
மற்ற குழந்தைகளில், பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவலனும் கற்களும்!
கோவலன் என்றவுடன் சிலப்பதிகாரம், மதுரை மாநகரம், கண்ணகி, சிலம்பு, இவையெல்லாம் ஞாபகம் வரும்.
பாண்டிய மன்னனால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை பெற்றவர் கோவலன். தண்டனையை நிறைவேற்றிய இடம், 'கோவலன் பொட்டல்' எனப்படுகிறது. மதுரை அருகே மாடக்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில், முதுமக்கள் தாழியும், மூன்று கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, கோவலனுக்கு தண்டனை நிறைவேற்ற பயன்படுத்திய கற்கள் எனக் கருதப்படுகிறது. அந்த இடம், சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்கப்படுகிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
