
உலகம் வண்ணமயமானது. அன்றாடம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றிலும் வண்ணங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒருவகை குணம் உண்டு.
அந்த விபரங்களை பார்ப்போம்...
பொருட்களை பார்த்த உடன், மூளை தகவல் சேகரிக்க ஆரம்பிக்கும். ஒரு பழத்தைப் பார்த்தவுடன் சாப்பிட ஆசை வரும். வானத்தைப் பார்த்தவுடன் மழையை கணிக்க முயலும் மூளை. இதெல்லாம் எப்படி நடக்கிறது...
எல்லாம் வண்ணங்களின் ஜாலமே!
பழம் பழுத்திருக்கிறதா, சாப்பிட உதவுமா என்பதை நிறத்தை வைத்து தான் தீர்மானிக்கிறோம். மழை வரும் என்பதை மேகத்தின் நிறத்தைப் பார்த்ததும் சொல்கிறோம். சுற்றி இருக்கும் பொருட்களின் தன்மையை, நிறத்தை வைத்து புரிந்து கொள்கிறோம்.
நிறம் உணர்ச்சியை துாண்டி, கொக்கி போட்டு இழுக்கும்!
கடைவீதியில், வண்ண ஆடைகள் கண்ணைப் பறிக்கும். வயதுக்கு ஏற்ப அதன் மீது விருப்பம் ஏற்படும் என்பது, விற்பனையாளருக்கு அத்துப்படி. ஆண், பெண் மற்றும் பிள்ளைகள் கவனத்தை ஈர்க்கும் விதமாக, உடைகளில் வண்ணங்களை காட்சிப்படுத்துவார் விற்பனையாளர்.
மனமும், வண்ணமும்!
ஒருவர் விரும்பும் நிறத்தை வைத்து குண நலனை கணிக்கலாம் என்பது உளவியலாளர் கருத்து. சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் என்பர். இவற்றுடன் வெண்மை, கருமை, சாம்பல், ஆரஞ்சு, ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களின் சேர்க்கை புதிய உணர்வுகளை தரும்.
பச்சை: பொதுவாக அமைதியான நிலையை குறிப்பிட பயன்படுகிறது. இந்த வண்ணத்தை பார்க்கும் போது, மனம் புத்துணர்ச்சி அடையும். வானவில்லின் நடுப்பகுதியில் அமைந்துள்ளதால், சமநிலையை சுட்டுகிறது. ஓய்வு மற்றும் செழிப்பை குறிக்க பயன்படுகிறது.
நீலம்: குளிர்ந்த நிறமாகக் கருதப்படுகிறது. அறிவுத்திறன், நம்பிக்கை, தர்க்க ரீதியான செயல் பாட்டை குறிக்க பயன்படுகிறது. ஆழ்ந்த நீல நிறம், எண்ண ஓட்டத்தை சீராக்கி சிந்தனை ஆற்றலை வளர்க்கும்.
இளநீலம்: மனதை அமைதியாக்கி ஒருமுகப்படுத்தும். அதிக அலை நீளமுள்ளது. இதனால் தான் போக்குவரத்து சிக்னல் விளக்காக இந்த வண்ணத்தை பயன்படுத்துவதில்லை. உலகம் முழுதும் நீல நிறத்தை விரும்புவோர் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிவப்பு: வலிமையின் அடையாளமாக உள்ள நிறம். துணிச்சல், ஆற்றலை குறிக்கும். துாண்டுதலை உண்டாக்கும். கவனத்தை ஈர்க்கும். எனவே தான், போக்குவரத்து சிக்னலில், எச்சரிக்கையாக சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர். நேரம், வேகமாக ஓடுவது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் இந்த நிறம்.
மஞ்சள்: உணர்வை துாண்டும். தன்னம்பிக்கை, ஆக்க பூர்வ சிந்தனை, நட்புணர்வு, நேர்மறை சிந்தனை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகிறது. அளவுக்கு அதிகமான மஞ்சள் நிறம், எதிர்மறையான எண்ணத்தை தரும். பதற்றம், பயத்தை உண்டாக்கும்.
ஊதா: ஆன்மிக உணர்வுடன் தொடர்புடையது. மன நிறைவு, சொகுசு, தரம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆழ்நிலை தியானத்திற்கு உதவும். சீரான சிந்தனையை தரும். வானவில்லில் கடைசியாக இருக்கும். காலம், வெளி மற்றும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையது.
அதிகமான ஊதா நிறப்பயன்பாடு தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம், வெளிப்படையற்ற தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். மற்ற வண்ணங்களுடன் இவற்றை சரியான விகிதத்தில் கலக்காவிட்டால் அலங்கோலமாக தோற்றமளிக்கும்.
ஆரஞ்சு: செயலை துாண்டக் கூடியது. வளமை, பாதுகாப்பு, ஆர்வம், கதகதப்பு, வேடிக்கை ஆகியவற்றின் குறியீடாக உள்ளது. மிகுந்த சோர்வாக மனம் இருக்கும் போது, ஆரஞ்சு வண்ண உடை அணிந்தால் புத்துணர்வு பெறலாம்.
அதே நேரம், கறுப்பு வண்ணத்துடன் சேர்த்துப் பயன்படுத்தினால் எதையோ இழந்த உணர்வைத் தரும். அதீத ஆரஞ்சு வண்ணம், அறிவீனத்தை காட்டும்.
செல்லங்களே... வண்ணங்களால் ஜொலிக்கும் பழங்களை உண்டு நலமுடன் வாழ்வோம்.
ஒரே நிறம் உணர்வு வேறு!
கலாசாரம், பழக்கவழக்கத்திற்கு ஏற்ப, வண்ணங்கள் பற்றிய கருத்து மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, ஆசியா கண்டப் பகுதியில் சிலர் சிவப்பு நிறத்தை அதிர்ஷ்டம் என நம்புகின்றனர்; அதை மகிழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்துவர். ஆப்பிரிக்கா பகுதியில் வசிக்கும் சில இனமக்கள், சிவப்பை, துக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக கருதுகின்றனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு