
வாழைக்காய்!
வாழை மரத்தின் இலை, பூ, தண்டு, காய், பழம், நார் என, அனைத்தும் பயன் மிக்கது. அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா நலமும் பெறலாம். அது பற்றி பார்ப்போம்...
வாழைக்காயில்...
* வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் நலம் மேம்படும்
* குடலை சுத்தப்படுத்தி உடல் எடையை குறைக்கும்
* நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் இயக்கத்தை மேம்படுத்தும்
* மலத்தை இலகுவாக்கி, எளிதாக வெளியேற்றும்; மலச்சிக்கல் குறையும்
* அளவறியாமல் சாப்பிடுவதால் வயிறு பருமனாகிறது. சாப்பிடும் அளவை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நன்கு பழுக்காத வாழைக்காயை உட்கொள்ளலாம். பிற உணவின் மீதான நாட்டத்தை குறைக்கும்
* குடலில் இருக்கும், 'ப்ரோபயாடிக்' என்ற நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது வாழைக்காய்
* அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும்
* பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவு, நச்சை வெளியேற்றும்
* பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பு கவசமாய் செயல்படும்
* எலும்பிற்கு பலம் தந்து, மூட்டு வலியிலிருந்து பாதுகாக்கிறது வாழைக்காய்.
நுாறாவது குரங்கு!
கிழக்காசிய நாடான ஜப்பான், கோஷிமா தீவில், ஒரு வகை குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர் அறிஞர்கள். இது, 1952ல் நடந்தது.
குரங்குகளுக்கு உணவாக, சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்டிப் போட்டனர். அவை பல இடங்களில் சிதறி கிடந்தன. சகதி நிறைந்த இடத்தில் விழுந்திருந்த, கிழங்கு துண்டுகளையும் எடுத்து சாப்பிட்டன.
அதில், 18 மாத பெண் குரங்கு ஒன்று மட்டும் சற்று வித்தியாசமாக செயல்பட்டது.
சகதி மண்ணில் கிடந்த கிழங்கை, நீரோடைக்கு எடுத்து சென்றது. நீரில் கழுவி, சகதியை நீக்கிய பின் சாப்பிட்டது. பின், சுத்தமாக சாப்பிடும் வித்தையை, தன் தாய்க்கும் கற்று தந்தது.
அதைக் கண்ட மற்ற குரங்குகள் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. ஆனால், வயதில் முதிர்ந்த குரங்குகள் மட்டும், அந்த பழக்கத்தை கடைபிடிக்க முன்வரவில்லை.
என்றாலும், இளைய குரங்குகள் சுத்தமாக்கி சாப்பிடுவதை கைவிடவில்லை. அந்த இனத்தில் பெரும்பான்மை குரங்குகள், சுத்தமாக சாப்பிடும் வழக்கத்தை, 1958ல் முழுமையாக கடைபிடித்திருந்தன. இந்த சோதனையால் பார்வை மற்றும் மன அலை மூலம் ஒரு பழக்கம் பரவுகிறது, என கண்டறிந்தனர் விலங்கியல் அறிஞர்கள்.
இதை முன் வைத்து, 'நுாறாவது குரங்கின் விளைவு' என்ற புத்தகத்தை எழுதினார் அறிஞர் கென் கேயஸ்; அது பிரபலமானது. இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என, பின்னர் வந்த அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நல்ல மாற்றத்திற்காக முயற்சிக்கும் போது, இந்த தத்துவத்தை நினைவில் பதித்துக் கொள்ளலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

