
பாப்கார்ன்!
மக்காசோளத்தில் செய்யப்படுகிறது பாப்கார்ன். இது, சாதாரண தின்பண்டம் அல்ல. உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. பாலிபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது. இது, உடலில் தேங்கியிருக்கும் கழிவை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் செரிமான சக்தியை அதிகரிப்பதுடன், மலச்சிக்கலை போக்க வல்லது மக்காசோளம். உடல் பருமனை தடுக்க வல்லது. விரும்பி சாப்பிட ஏற்ற உணவு பாப்கார்ன்.
கருப்பு தக்காளி!
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேமில் சர்வதேச அளவில் 'அக்ரோ-மஷோவ்' என்ற விவசாயக் கண்காட்சி, பல ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டு விவசாயத் தொழில் சார்ந்த முக்கிய சந்திப்பு இடமாக இது உள்ளது.
விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் கண்காட்சியில் கருத்தரங்குகள், சந்திப்புகள் நடத்தப்படுகிறது.
கண்காட்சியை ஒட்டி புதிய பயிர் ரகங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இஸ்ரேல் - காசா எல்லை அருகே புதிய முயற்சியாக கருப்பு வண்ண தக்காளி உருவாக்கப்பட்டது. இந்த தாவரம், அக்ரோமஷோவ் - 2021 என்ற விருதை தட்டிச் சென்றது. இந்த தக்காளி, தோற்றம் மற்றும் சுவைக்காக புகழ் பெற்றுள்ளது.
ஸ்கிப்பிங்!
செலவே இல்லாத மிக எளிய பயிற்சி ஸ்கிப்பிங். தமிழில், கயிறாட்டம் என்பர். இந்த பயிற்சிக்கு பெரிய இடம் தேவைப்படாது. சிறிய அறையிலே பயிற்சி எடுக்கலாம். பயிற்றுனரிடம் சென்று கற்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால், 1,300 கலோரி சக்தியை எரிக்க வாய்ப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது, அதிக கலோரிகளை எரிக்க வல்லது கயிறாட்டம்.
துவக்கத்தில் ஸ்கிப்பிங் செய்த பின் உடலில் வலி உணர்வு ஏற்படும். கை, கால் தசைகள் அதிகம் வேலை செய்வதால் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், தசைகள் வலுவடைய உதவும் முழு உடற்பயிற்சியாக இது அமையும்.
இந்த பயிற்சியை தினமும் அரை மணி நேரம் முறையாக செய்தால்...
* கண்கள், மூளை மற்றும் தசைகள் ஒருங்கிணைந்து செயல்படும்
* அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாடு மேம்படும்
* குதிப்பதால் அனைத்து தசைகளும் துாண்டப்படும்
* எலும்புகளின் பலம் அதிகரிப்பதோடு அடர்த்தியும் கூடும்
* எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகள் வலுப்படும்.
ஸ்கிப்பிங் செய்வது சிறந்த இதய பயிற்சி. இதய செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்தும். உடலில் ஸ்டாமினாவை அதிகரிக்க செய்யும்.
குழந்தைகளே, மறக்காமல் தினமும் சிறிது நேரம் கயிறாடி பயிற்சி செய்யுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

