PUBLISHED ON : மே 27, 2023

எலும்பும், நாரும்!
பல் துலக்கும் பிரஷ் உருவான விதம் வினோதமானது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ளது நியுகேட் சிறை. இங்கு, 17ம் நுாற்றாண்டில் கைதி வில்லியம் ஆடிஸ் அடைபட்டு இருந்தார். அவர் பல்துலக்க, கிழிந்த துணிகள் உபயோகித்து வந்தார். அது மிகவும் சிரமம் தந்தது. இதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்கும் எண்ணம் எழுந்தது.
ஒருநாள், உணவில் எலும்புத் துண்டு ஒன்று கிடந்ததை கண்டார். அதை பயன்படுத்தி, எளிதாக பல் துலக்கலாம் என பத்திரப்படுத்தினார். பின், சிறை அதிகாரிகளிடம் கடின நார் பொருளை பெற்றார்.
எலும்புத் துண்டில் துளைகள் போட்டு, நாரை செருகினார். உலகின் முதல் பல்துலக்கும் பிரஷ் உருவானது. சிறையிலிருந்து விடுதலையானதும் அதுபோல் பல் துலக்கும் பிரஷ் தயாரித்து, பெரும் பணம் ஈட்டினார் வில்லியம் ஆடிஸ்.-
பாலிசியும், பேனாவும்!
மை ஊற்றி எழுதும் பவுண்டன் பேனாவைக் கண்டறிந்தவர் வாட்டர்மேன். இவர் அமெரிக்காவில் இன்சூரன்ஸ் நிறுவன முகவராக வேலை செய்து வந்தார். பணக்காரர் ஒருவர் பெரும் மதிப்பில் ஒரு பாலிசி எடுக்க விரும்பி அவரை அணுகினார்.
அந்தக் காலத்தில் எழுத கட்டைப் பேனாவும், மைக்கூடும் தான் புழக்கத்தில் இருந்தது. கட்டை பேனாவை, மையில் தோய்த்து எழுதுவர்.
இன்சூரன்ஸ் ஒப்பந்தம் தயாரித்ததும் கையெழுத்து போட முயன்ற போது, பேனா சரியாக எழுதவில்லை. மீண்டும், மையில் தோய்த்து எழுத முயன்றார். ஒப்பந்த பத்திரத்தில் மை கொட்டி விட்டது.
அதை அபசகுனமாக எண்ணிய பணக்காரர், 'பாலிசி எடுக்க விரும்பவில்லை...' என்று கூறிவிட்டார். 'பேனா செய்த குளறுபடியால் வியாபாரம் பறிபோச்சே... மை கொட்டாத பேனா உருவாக்கினால் எப்படி இருக்கும்' என யோசித்தார் வாட்டர் மேன். அரும்பாடுபட்டு மை ஊற்றி எழுதும் பவுண்டன் பேனாவை கண்டுபிடித்தார்.
குளிர் சாதனம்!
ஐரோப்பிய நாடான நார்வே லேனா நதி அருகே பனிக்குழியில், கி.பி., 1798ல் ஒரு மிருக உடல் வெளிப்பட்டது. நீண்ட காலமாக அது அழுகாமல் கிடந்ததால் பார்த்தவர்கள் வியந்தனர். குளிர் நிறைந்த இடத்தில் பொருள் கெட்டுப்போகாது என்ற உண்மையை அது உணர்த்தியது.
இதை மேலும் ஆராய்ந்து, கடும் குளிரில் பாக்டீரியா செயலிழந்து விடும் என்பதை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள். அந்த அடிப்படையில் தான் குளிர்சாதன பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
எறும்பு பிரச்னை!
அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு பகுதியில் எறும்புகளால் பெரும் தொல்லை ஏற்பட்டது. குடியிருப்புகளில் புகுந்து துவம்சம் செய்துகொண்டிருந்தன. கொடும் விஷம் தெளித்தும் கட்டுப்படவில்லை.
எறும்பு தொல்லை தாங்க முடியாமல் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. முடிவில், ஒருவகை ஈக்களை ஏவி, எறும்பை கட்டுப்படுத்தும் முறையை கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்.
அந்த ஈக்கள், தொல்லை தந்த எறும்புகளின் தலையில் முட்டையிட்டன. அதிலிருந்து வெளிவந்த லார்வா புழு, எறும்புகளின் தலையையே தின்றன. இவ்வாறு, எறும்பால் ஏற்பட்ட பிரச்னை தீர்க்கப்பட்டது.
குழந்தைகளே... சமயோசிதமாக சிந்தித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
