PUBLISHED ON : ஜன 25, 2013

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்று. இதை இனிப்பு உணவு, கார உணவு என்று இரண்டிலுமே பயன்படுத்துவோம். இவ்வளவுதான் ஏலக்காய் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால், நமக்கு தெரியாத இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!
* வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு தலைசுற்றுவது, மயக்கம் வருவது போன்றவை ஏற்படும். அதற்கு அரை டம்ளர் தண்ணீரில், நான்கு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கி குடிக்கலாம்.
* வாய்வு பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காயை காய வைத்து, பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீரில், அரை ஸ்பூன் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிப்பது நல்லது.
* நாவில் வறட்சி, மார்பு சளி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் ஒன்று, இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும் நிவாரணம் கிடைக்கும். ஆனால், அடிக்கடி மெல்லக் கூடாது.
*குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்திக்கு, இரண்டு ஏலக்காயை பொடியாக்கி, தேனில் குழைத்து மூன்று வேளை நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.
* விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீரில், இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, அதோடு கொஞ்சம் புதினா போட்டு, கொதிக்க வைத்து குடித்தால் போதும்!
