PUBLISHED ON : ஆக 05, 2023

ஆகஸ்ட் - 6 ஹிரோஷிமா தினம்
கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ளது ஹிரோஷிமா. உலக வரலாற்றில் மிகத் துயரமான நிகழ்வை சந்தித்த முதல் நகரம். இரண்டாம் உலகப் போரின் போது ஆகஸ்ட் 6, 1945ல் இந்த நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது. மனித விபரீதத்தால் அந்த நகரம் உருக்குலைந்து போனது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேச நாட்டுப் படையிடம் சரணடைய மறுத்தது, ஜப்பான். அதை பணிய வைக்க அணுகுண்டு ஆயுதத்தை பயன்படுத்த முடிவு செய்தது அமெரிக்கா.
உலகில், முதன் முதலில் அணுகுண்டு வீசி, அதனால் ஏற்படும் அழிவை சோதனை செய்ய விரும்பியது. இதன் வாயிலாக உலகப்போர் உடனே முடிவுக்கு வரும். அதே நேரம், உலக நாடுகளில் அமெரிக்காவின் மதிப்பு உயரும். இவ்வாறு கணக்குப் போட்டனர் அமெரிக்க தலைவர்கள்.
போரில், ஜப்பான் நகரங்கள் பல குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு இருந்தன. எந்த பாதிப்புமின்றி இருந்த ஒரே நகரம் ஹிரோஷிமா தான். அது, முக்கிய வணிக மையமாகவும், ராணுவத் தளமாகவும் விளங்கியது. அந்த நகரின் அளவு மற்றும் வடிவமைப்பு, அணுகுண்டு தாக்குதல் சோதனைக்கு, பொருத்தமாக இருக்கும் என எண்ணியது அமெரிக்கா. அதனால் தான் அங்கு அணுகுண்டு வீசப்பட்டது.
அமெரிக்க விமானப்படையில் பி -29 ரக, 'எனோலா - கே' என்ற குண்டுவீச்சு விமானம் இருந்தது.
அது, 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை சுமந்தபடி ஜப்பான் நோக்கி பறந்தது. அந்த குண்டின் எடை, 3,629 கிலோ; குறுக்களவு 28 அங்குலம். அந்த அழிவு திட்டத்துக்கு, கர்னல் பால் டிப்பெட் தலைமை ஏற்றிருந்தார். திட்டமிட்டபடி ஹிரோஷிமா நகரில் ஆக.,6, 1945ல் அணுகுண்டு வீசப்பட்டது.
அங்கு வசித்த, 80 ஆயிரம் பேர் உடனடியாக பலியாயினர். இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதம். நகரில் மூன்றில் இரண்டு பகுதி சிதைந்து அழிந்தது, சின்னாபின்னமானது.
தொடர்ந்து, ஜப்பானில் மற்றொரு நகர் மீது அணுகுண்டு வீச, அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அந்த நேரத்தில் கியோட்டா, கோகுரா நகர்களில் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் அவை தப்பின. நாகசாகி நகரம் குண்டு வீச்சுக்கு தேர்வானது. இதற்காக, 'பேக்ஸ் கார்' என்ற விமானம், 'பேட்மேன்' என்ற அணுகுண்டை சுமந்தபடி பறந்தது. நாகசாகி நகர் மீது, ஆக., 9ல் அணுகுண்டு வீசப்பட்டது. அங்கும் பலத்த அழிவு ஏற்பட்டது.
இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் பற்றி இதுவரை மதிப்பிட முடியவில்லை. கிட்டத்தட்ட, 2.26 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தப்பிய பல ஆயிரம் பேர், நச்சு கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
பலருக்கு தோல் உரிந்து போனது. வாய் இருக்க வேண்டிய இடத்தில் ஓட்டை மட்டுமே தென்பட்டது. கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டோரால் அதன்பின் பேச முடியவில்லை. வெட்டுக்கிளி போல சத்தம் மட்டும் எழுப்ப முடிந்தது. காயத்துடன் தப்பியோர் கடும் அவதிப்பட்டு இறந்தனர்.
இந்த கொடூரத்தை மக்களுக்கு நினைவு படுத்தும் விதமாக, 'ஹிரோஷிமா தினம்' ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப் படுகிறது. உலகம் முழுதும் இரங்கல் நிகழ்வுகள், அமைதிப் பேரணிகள், அணு ஆயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
அணுகுண்டுக்கு எதிராக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 1964ல் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அங்கு, அமைதியின் சுடர் என்ற பெயரில் அணையா விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதப் போருக்கு எதிராக, மக்களை பாதுகாக்கும் சின்னமாக விளங்குகிறது.
அமைதி நிறைந்த புதிய உலகம் படைக்க பாடுபடுவோம்!
அதிசய மனிதர் யாமகுச்சி!
அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களில் ஒருவர் சுத்தாமு யாமகுச்சி. பெரும் பாதிப்புடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்.
ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அவருக்கு, 29 வயது. அங்குள்ள துறைமுக பணியாளராக இருந்தார். அணுகுண்டு வெடித்து, காளான் வடிவில் புகை படர்வதை நேரில் பார்த்தவர். வெப்பத்தால் அவரது உடலில் தோல் முழுமையாக உரிந்துவிட்டது.
அங்கிருந்து தப்பியவர், மறுநாள் சொந்த ஊரான நாகசாகி நகருக்குப் போனார். உருக்குலைந்த நிலையில் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்தார். உடலில் தோல் முழுதுமாக உரிந்திருந்ததால் யாரும் அவரை அடையாளம் காணவில்லை. அவரது அம்மா கூட திணறிவிட்டார்.
நாகசாகியில் இருந்த போது மீண்டும் அணுகுண்டுத் தாக்குதல் நடந்தது. அதிலும் தப்பிப்பிழைத்தார். இரண்டு தாக்குதல்களிலும் கொடூரமாக பாதிக்கப்பட்டு, பின் நீண்ட காலம் வாழ்ந்தார். தன், 93ம் வயதில் மறைந்தார்.
இதுபோல், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களில், 165 பேர் தப்பியிருந்தாலும், ஜப்பான் அரசு, யாமகுச்சியை மட்டும் தான் அங்கீகரித்துள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு
