PUBLISHED ON : ஏப் 11, 2020

சேரவூர் நாட்டு மன்னர் அவையில், என்றும் இல்லாத கூட்டம்; மக்கள் திரள், அரசவை மண்டபத்திற்கு வெளியே வரை நின்றது. காரணம், வெளிநாட்டு மல்யுத்த பயில்வானின் வருகை.
மல்யுத்தத்திற்கு பெயர் பெற்றது அந்த நாடு. வெளிநாட்டு பயில்வானுடன் போட்டியிட, ஒருவரை தேர்வு செய்ய கூடியிருந்தது அரசவை. அந்த பயில்வானும் அங்கு அமர்ந்திருந்தான்.
அவன் அடிக்கடி எழுந்து, ஆரவாரம் செய்த மக்களை வணங்கினான். குட்டி யானை போன்று பெருத்த உடலை துாக்கி, கைகளை சுழற்றினான்; கால்களை துாக்கி பஸ்கி செய்து மகிழ்வித்தான்.
மக்களுக்கு ஒரு புறம் சிரிப்பும், மறுபுறம் பயமும் ஏற்பட்டது.
'அவன் கையில் சிக்கினால், எலும்புகள் முறிந்து விடும்' என, வதந்தி பரவியது. அவனிடம் குத்து பட்டு இறந்தவர் பட்டியலை கற்பனை கலந்து கூறினார் ஒருவர். இப்படியே பலரும் பலவித தகவல்களை பரப்பினர். இவை, பயில்வான் மீதான பயத்தை அதிகரிக்க வைத்தது.
பயில்வானுடன் போட்டி போட வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார் மன்னர்.
வினாடிகள் நிமிடங்களாயின; நிமிடங்கள் மணிகளாயின; யாருமே முன் வரவில்லை. மன்னர் பலமுறை அறைகூவியும், யாரும் முன்வரவில்லை.
நாட்டு மதிப்பையும், கவுரவத்தையும் எண்ணி, துயரம் கலந்த குரலில், 'போட்டியிட ஒருவர் கூட தயாராகயில்லையா...' என்றார் மன்னர்.
அவரது வேதனைக் குரல் மண்டபமெங்கும் ஒலித்து, எதிரொலித்தது; இந்த வெட்கக் கேடு கண்டு, அந்தரே என்பவன் கலங்கினான். சற்றுநேரம் நிதானமாக யோசித்து எழுந்து, 'மன்னா... பயில்வான் சவாலை ஏற்கிறேன்... அவருடன் மல்யுத்தம் செய்ய தயாராக இருக்கிறேன்...' என்றான்.
சபையில் ஒரே ஆரவாரம்; மன்னருக்கோ வேதனை அதிகரித்தது. பலம் வாய்ந்த பயில்வானை, எளிய உடல் கொண்ட அந்தரேயால் ஜெயிக்க முடியுமா; இது, உடல் வலிமையை காட்டும் போட்டி; புத்தி சாதுர்யம் செல்லுபடியாகாது. நாட்டுக்கு பெரும் அவமரியாதை வரப் போவதாக கருதினார் மன்னர்.
அந்தரே எழுந்து, 'பிரசித்தி பெற்ற பயில்வானுடன் மல்யுத்தம் செய்வதென்றால், சாதாரண காரியமல்ல. எனவே, போட்டிக்கு தயார் ஆவதற்கு, ஒரு மாத கால அவகாசம் கொடுங்கள். இந்த ஒரு மாதமும் பயில்வானும், நானும் ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது...
'போட்டிக்கு தயாராவதற்கான என் அறை, பயில்வான் தங்கும் அறையை அடுத்து இருக்க வேண்டும். இரண்டு வரி செங்கல் கொண்ட சுவர் தான் எங்களைப் பிரிக்க வேண்டும்...' என்று வேண்டினான் அந்தரே.
மன்னர் சம்மதித்தார். உரிய ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார்.
போட்டி நடக்கப்போகும் நாளை, ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் மக்கள்.
அறையில் பயிற்சிக்கு சென்ற மறுநாளே, சுவரின் கனத்தை அளந்தான் அந்தரே. அந்த சுவரில், ஒரு வரி செங்கல்லைப் பெயர்த்தெடுக்க ஆரம்பித்தான்; இது, தினமும் ரகசியமாக நடந்தது.
போட்டிக்கு மூன்று நாட்களே இருந்தன.
சுவரைப் பெயர்த்திருந்த இடத்தில், ஒரு வரி செங்கல் மட்டுமே மீதமிருப்பதை அறிந்தான். இதற்கு, மேலும் காலம் தாழ்த்த விரும்பவில்லை அந்தரே.
அன்று இரவு அறையிலிருந்து, 'நண்பா... போட்டிக்கு இன்னும், இரண்டு நாட்கள் தானே உள்ளன... தயாரா...' என்று கத்தினான் அந்தரே.
பக்கத்து அறையிலிருந்த பயில்வான், 'நான் எப்போதுமே தயார் தான்...' என்றான்.
'நல்லது... இரண்டு வெற்றிலை கொடேன்... நான் வைத்திருந்தது நேற்று இரவு தான் தீர்ந்தது; பெரும் கஷ்டமாக இருக்கிறது...'
'இரண்டென்ன... 10 தருகிறேன்; ஆனால், எப்படி தருவது; சுவர் குறுக்கே நிற்கிறதே...' என்றான் பயில்வான்.
'பூ... இதென்ன கஷ்டம்... இந்த சுவர் வழியே கொடு...' என்று அசட்டையாக கூறுவது போல் பாசாங்கு செய்தான் அந்தரே.
ஆச்சரியத்துடன் சுவரை உடைக்க முயன்றான் பயில்வான்.
சுவர் பெயர்வதாக இல்லை; கைகள் அலுத்துப் போயின. பயில்வான் பெருமூச்சு வாங்குவது அந்தரேக்கு கேட்டது.
'நண்பா... சீக்கிரம்...' என, அவசரப்படுத்தினான் அந்தரே.
'எப்படியப்பா தர்றது... சுவர் இரும்பு போல இருக்கே...' கத்தினான் பயில்வான்.
மறு வினாடி, 'படார்...' என்ற சத்தம் கேட்டது; மீதியாக இருந்த சுவர் துண்டு, பயில்வான் அறையில், மடமட வென உடைந்து விழுந்தது. தொடர்ந்து, அதன் வழியாக அந்தரேயின் கை, பயில்வானின் அறைக்குள் பாய்ந்து நீட்டி நின்றது.
'சரி நண்பா வெற்றிலையை தா...' என்று, மிகவும் ஏளனத்துடன் கேட்டான் அந்தரே.
சுவரை உடைத்து, நீண்ட கையைக் கண்டான் பயில்வான். அந்த அதிசயத்தை நம்பவே முடியவில்லை. பெரும் பீதி அடைந்தவன், 'உறுதிமிக்க சுவரை உடைத்து தள்ளிய கை, நம் மீது பட்டால் என்ன ஆகும்' என்று நடுங்கினான்.
அன்று இரவே, அந்த நாட்டை விட்டு, தப்பி ஓடினான், பயில்வான்.
இந்த செய்தி, மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பேரானந்தத்தில் திளைத்தார். அந்தரேயை கவுரவித்தார்.
குழந்தைகளே... பலசாலியையும் வெல்லும் பலம், புத்திசாலிதனத்துக்கு உண்டு என்பதை அறிந்தீர்களா...
