
வவ்வால் உண்மையில் பறவை அல்ல; அது பாலுாட்டி வகை மிருகம். இதன் முகம் நரி போன்று இருப்பதால், பறக்கும் நரி என்றும் அழைப்பர். பாலுாட்டிகளில் பறக்கும் திறனுள்ள ஒரே விலங்கு இதுதான். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.
பகல் முழுதும் தலைகீழாக தொங்கும். சூரியன் மறைந்த பின் இரை தேடி உண்ணும்; இறகுகள் வழுவழுப்பாக இருக்கும். பெரிய காதுகளுடன் காணப்படும், டவுன் செண்டி என்ற வவ்வால்.
பழம் தின்னி வவ்வால், 48 கி.மீ., வரை பறக்கும் திறன் உடையது. பழத்தின் சாறை மட்டும் உறிஞ்சி, சக்கையை ஒதுக்கி விடும்; வாழைப்பழம் மென்மையானது என்பதால், அப்படியே சாப்பிடும்.
மீன் சாப்பிடும் வவ்வாலும் உண்டு. ஆஸ்திரேலிய கண்ட நாடான, பபுவா நியூ கினியா பகுதியில் வவ்வாலை உணவாக கொண்டுள்ளனர். அமெரிக்காவில், காட்டேரி என்ற வகை வவ்வால், மிருகங்களின் ரத்தத்தை உறிஞ்சும். இரையை, 17 மீட்டர் துாரத்தில், துல்லியமாக உணர்ந்து தாக்கி சாப்பிடும்.
மதுரை மாவட்டத்தில், வவ்வால் தோட்டம் என்ற கிராமம் உள்ளது. ஆனை மலையை ஒட்டிய குகைகளில் ஏராளமாய் உள்ளன. மயிலாடுதுறை, பெரம்பூர் பகுதியில் வவ்வாலடி என்ற இடம் உள்ளது. அதை சுற்றி பசுமையான வயல்கள். இங்குள்ள ஆலமரத்தில், 150 ஆண்டுகளுக்கு மேலாக வவ்வால்கள் வசிக்கின்றன.
வவ்வால் எச்சம் சிறந்த உரம். கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் குகைகள் அதிகம்; அவற்றில் வசிக்கும் வவ்வால் எச்சத்தை சேகரித்து, விற்று நல்ல வருமானம் பார்போரும் உண்டு.
- செல்வ கணபதி