PUBLISHED ON : மார் 04, 2016

உடனே நாகராஜனான வாசுகி அவ்விடம் சென்று பீமனைக் கண்டான். வாசுகியுடன் ஆர்யகன் என்றொரு சர்ப்பமும் வந்தது. பீமனைக் கண்ட ஆர்யகன் மனம் மகிழ்ந்தான். ஏன் எனில், குந்தி தேவியின் தந்தை சூரசேனனின் பாட்டனார்தான் ஆர்யகன்!
தன் பேரனுடைய பேரனைக் கண்டு அவன் மிக்க மகிழ்ச்சி கொண்டான். இதையறிந்த வாசுகி பீமதேவனுக்கு அவன் விரும்பும் பொன்னும், மணியும் வழங்குமாறு உத்தரவிட்டான். ஆனால், ஆர்யகன், ''மகாராஜா! இவ்வரசகுமாரனுக்குப் பொன்னும், பொருளும் எதற்கு? தாங்கள் விரும்பினால் இதோ இங்கிருக்கும் ரசத்தைப் பருகும்படி உத்திரவிடுங்கள். ஆயிரம் யானை பலம் தரும் இந்த ரசத்தைப் பருகினால் இந்த ராஜகுமாரன் மகாபலிஷ்டனாகி விடுவான்,'' என்றான்.
வாசுகி அனுமதி தரவே, பீமன் சுமார் 8 குடங்களிலே நிறைந்திருந்த ரசத்தைப் பருகினான். பின்னர் சுகமாகக் கட்டிலில் படுத்து உறங்கலானான்.
அங்கே... விழித்தெழுத்த பாண்டவர்கள் பீமனைக் காணாது தேட ஆரம்பித்தனர். எங்கும் காணாது போகவே... ஒருவேளை தங்களுக்கு முன்னரே அத்தினாபுரம் புறப்பட்டுச் சென்று விட்டானோ என ஐயமுற்று அவர்களும் வனத்தை விட்டுப் புறப்பட்டனர்.
அரண்மனையை அடைந்ததும் குந்திதேவியிடம் விசாரித்தனர். பீமன் அங்கு வரவில்லை என்று தெரிந்ததும் அவர்களின் கவலை இன்னும் அதிகரித்தது. துரியோதனனின் சூழ்ச்சியாக இருக்குமோவெனக் கவலையுற்ற குந்தி, விதுரரை அழைத்து விசாரித்தார். விதுரர் தேறுதல் மொழிகளைக் கூறிச்சென்றார்.
குந்திதேவி மகாமுனி, ''வியாசரின் வாக்கு பொய்க்காது. உன் புதல்வர்களுக்கு யாராலும் எவ்விதத் தீங்குமிழைக்க முடியாது. நீ கவலைப் படாதே,'' எனக் கூறி சென்றார்.
எட்டு நாட்களுக்குப் பின்னர்தான் பீமன் உறக்கத்திலிருந்து கண் விழித்தான். எட்டுக் குடங்களின் ரசமும் உடலில் ஊறியதால் பீமன், தான் மகத்தான வலிமை பெற்றதை உணர்ந்தான். பீமன் விழித்தெழுந்ததைக் கண்ட நாகங்கள் அவனை உபசரித்து உணவளித்தன. பின்னர் விஷத்தின் மயக்கத்தை நீக்கக் கூடிய பல ஔடதங்களையும் அருந்தச் செய்தனர்.
பீமதேவன் நாக அரசன் வாசுகியிடமும் மற்றும் சர்ப்பங்களிடமும் விடைபெற்றவாறு நீரிலிருந்து வெளிவந்தான்.
நேரே அத்தினாபுரத்தை நோக்கி விரைந்து சென்ற பீமன் முதலில், குந்திதேவியைத் தேடிச் சென்று வணங்கினான். மகனின் பிரிவால் துன்புற்றிருந்த குந்திதேவி முன்னிலும் பலவானாகவும், தேஜஸுடனும் வந்து நிற்கும் மகனைக் கண்டு மனம் பூரித்தாள். பின்னர், பீமன் தன் சகோதரர்களிடம் துரியோதனனின் சூழ்ச்சியைப் பற்றி கூறினான்.
தருமர் இது கேட்டு மனம் வருந்தினார். பீமனை நோக்கி... ''சகோதரா இச்சம்வத்தைப் பற்றி நீ யாரிடமும் குறிப்பிடாதே... ஆனால், இனி நாம் மிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.
இவ்வாறு துரியோதனன் சூழ்ச்சியால் பீமன் மரணமடையாது முன்னிலும் பலம் கொண்ட மாவீரனாகி விட்டான்.
மகாராஜா திருதராஷ்டிரர் தன் தம்பியின் புதல்வர்கள் நாளுக்கு நாள் வீரத்திலும், புஜ வலிமையிலும் ஓங்கி வருவதைக் கண்டு மனத்திற்குள் துயரமும், கவலையும் அடைந்தார். அவர் அரசியல் சூதில் தேர்ந்த கனிகனைத் தனியாக அழைத்து அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார்.
''அரசே! நான் கூறுவதைக் கேட்டுத் தாங்கள் கோபம் கொள்ளக்கூடாது. அரசன் என்றும் வலிமையுடையவனாய்த் தன்னை தற்காத்துக் கொள்ளும் திறமையுடனிருக்க வேண்டும். தன்னைப் பிறர் தாக்கும் படியான சந்தர்ப்பத்தை அளிக்காது, எதிரியைத் தாக்க தருணம் பார்த்திருப்பதும் நல்லது. அதிலும் பராக்கிரமசாலியான எதிரியை அழித்து விடுவதுதான் சிறந்தது. இந்த விஷயத்தில் தர்ம, அதர்மத்தைப் பற்றிச் சிந்திப்பது சரியல்ல!'' எனப் பற்பல உப கதைகளுடன் திருதராஷ்டிரர் மனதில் பாண்டவர்களான எதிரிகளை ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் படியாகக் கூறிச் சென்றான் மதியூகியான கனிகன்
துரியோதனனும் தந்தையிடம் இவ்விஷயத்தை வற்புறுத்திக் கூறியதும் அரசனின் மனமும் கலக்கமடைந்தது. பாண்டவர்களை எவ்விதம் அத்தினாபுரத்திலிருந்து வெளியேற்றுவது என உபாயம் தேடலானார்.
அரசனின் இச்சைப்படி சில மந்திரிகள் அடிக்கடி பாண்டவர்கள் முன்னிலையில் வாரணாவத நகரத்தின் அழகையும், சிறப்பையும் பற்றி வர்ணிக்கலாயினர். அங்கு நடைபெறப் போகும் விழாவைப் பற்றியும், இயற்கை எழிலைப் பற்றியும் கேள்விப்பட்ட பாண்டவர்கள் அந்நகரத்தை சுற்றிப் பார்த்து வர மிகவும் விருப்பம் கொண்டனர்.
இதையறிந்த திருதராஷ்டிரர் பாண்டவர்களை அழைத்து, ''குழந்தைகளே, நீங்கள் வாரணாவத நகரைப் பார்த்து வர மிக ஆசைப்படுகிறீர்கள் எனக் கேள்விப்பட்டேன். நல்லது. உங்கள் விருப்பம் போல் தாயார் குந்திதேவியுடன் போய் வாருங்கள். எப்போது அத்தினாபுரம் திரும்பிவர நினைக்கிறீர்களோ அப்போது வந்து விடுங்கள்,'' என்றார்.
பெரிய தந்தையின் அனுமதி பெற்ற பாண்டவர்கள் மிக்க குதூகலத்துடன் பயணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
இதற்குள் துரியோதனனின் சூழ்ச்சி மீண்டும் உருவாகியது. கட்டடம் கட்டும் கலையில் தேர்ந்த மந்திரி புரோசனை அழைத்து அவனுக்கு நிறையப் பொன்னும், பொருளும் தந்து, ''மந்திரியாரே நான் கூறிய படி நடந்து என் எதிரிகளை நீங்கள் நாசம் செய்தால் நீர் விரும்பும் செல்வத்தை அளிப்பேன்,'' என்றான்.
துரியோதனன் கூறியபடி புரோசன் காற்றிலும் கடிதெனச் செல்லும் இரதத்தில் ஏறி வாரணாவதத்தை அடைந்தான். அந்நகரின் எல்லையில் ஓர் அழகிய பெரும் மாளிகையை நிர்மாணிக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். திறமைசாலியான புரோசன் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருளான மரம், சணல், குங்கிலியம் போன்ற பொருள்களால் சுவர்களை எழுப்பினான். அதன் மீது நெய், கொழுப்பு, எண்ணெய் அரக்கு முதலியவற்றைக் கொண்டு, தயாரித்த மெழுகைப் பூசி விட்டான். இதுபோல் அவ்வழகிய பெரும் மாளிகை முழுவதுமே எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பலவித ரசாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்டது. ஆனால், காண்பவர்கள் இதை அறிந்து கொள்ள முடியாதபடி புரோசன் அம்மாளிகையை அலங்கரித்தான்.
அரச குமாரர்கள் தங்குவதற்கு ஏற்றபடி மாளிகை பற்பல விலையுயர்ந்த பொருள்களால் நிறைந்து விளங்கியது. போக வாழ்விற்குத் தேவையான சகல சாதனங்களும் அமைக்கப்பட்டன. நகரத்தின் எல்லையிலே கம்பீரமாக எழும்பி நின்ற அம்மாளிகை காண்போரைத் தன்பால் கவர்ந்தது. பாண்டவ குமாரர்கள் தங்குவதற்கென அரசன் கட்டிய மாளிகையைக் கண்ட மக்கள் வியந்தனர்.
புறப்படும் முன்னர் துரியோதனன் புரோசனை எச்சரிக்கை செய்திருந்தான்.
''புரோசனா, பாண்டவர்களை நீயே வரவேற்று அம்மாளிகையில் தங்கும்படியாகச் செய். அவர்களுக்கு எவ்விதக் குறையும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள். மக்களுக்கோ, பாண்டவர்களுக்கோ நம்மீது சிறிதும் சந்தேகம் ஏற்படக்கூடாது. சில நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் அவர்கள் அயர்ந்த நித்திரையிலிருக்கும் சமயம் பார்த்து நீ மாளிகைக்குத் தீ வைத்து விடு...'' என்றார்.
புரோசனும் துரியோதனன் கூறியபடி யாவும் செய்து முடித்துவிட்டுப் பாண்டவர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
அழகிய வெண் புரவிகள் பூட்டிய ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றது. பாண்டவர்களும், குந்தியும் யாவரிடமும் பிரியாவிடை பெற்றனர். அறிவாளியும், பாண்டவர்களின் பால் அன்பும் கொண்ட விதுரரும் மற்றும் சிலரும் நகரத்தின் எல்லை வரையில் உடன் சென்றனர்.
துரியோதனனின் சூழ்ச்சியை அறிந்த விதுரர் தருமரிடம் சந்தேக பாஷையில்... ''ராஜ நீதியில் தந்திரசாலியான எதிரியின் எண்ணத்தை அறிந்தவன்தான், எவ்வித ஆபத்தையும் கடக்க முடியும். உலோகத்தினால் செய்யப்படாத வலிமையான ஆயுதமொன்றுள்ளது. அதைத் தடுக்கும் உபாயம் அறிந்தவனுக்கு உயிர் பயமில்லை. காடுகளை அழிக்கும் குளிரைப் போக்கும் ஒரு பொருள் வளைக்குள் வாசம் செய்யும் எலியை ஒன்றும் செய்ய முடிவதில்லை.
''முள்ளம்பன்றிகூடப் பூமியில் வளைதோண்டித் தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிறது. அறிவாளிக்கு நட்சத்திரங்கள் கூடத் திசையை அறிவிக்கும்,'' என்று பூடகமாக துரியோதனனின் சூழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். தருமர் அதன் பொருளை உணர்ந்து விதுரரை வணங்கி விடைபெற்றார்.
துரியோதனனின் தீய எண்ணத்தைத் தான் அறிந்து கொண்டும் தருமர் அதைத் தம்பிகளிடமோ, தாயிடமோ வெளியிடவில்லை. யாவரும் மகிழ்ச்சியுடன் பல நாடுகளையும் கடந்து வாரணாவதத்தை அடைந்தனர்.
- தொடரும்...
