
மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்றொரு பாட்டி வாழ்ந்து வந்தாள்.
அவளது ஒரே மகன் பக்கத்து ஊரான சின்னப்பட்டியில் வாழ்ந்து வந்தான். கணவனை இழந்த பாக்கியலட்சுமி, தன் மகன் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டாள். பாக்கியலட்சுமிக்கு வயதுக்கு வந்த ஒரு பேத்தி இருந்தாள்.
பாக்கியலட்சுமி சிறுவயதிலிருந்தே வாயாடி. ஆனால், வெட்டிப் பேச்சு பேசி, யாரிடமும் வம்புக்குப் போக மாட்டாள். அப்படி எந்த ஒரு வம்பையும் அவள் சம்பாதித்து கொண்டதில்லை.
கத்தரிக்காய் முதல் கல்பதித்த தங்க, வைர நகை வரை பேரம் பேசி விலை குறைந்து வாங்குவதில் பாக்கியலட்சுமி பலே கில்லாடி. அதனால்தான் அவளை வியாபாரிகள், 'வாயாடி பாக்கியலட்சுமி' என்று அழைத்து வந்தனர். அப்பெயரே அவளுக்குப் பட்டப்பெயர் ஆகிவிட்டது.
பாக்கியலட்சுமி பாட்டியாக ஆகிவிட்ட இப்போது கூட வியாபாரத்தில், ஐந்து பைசா குறைப்பதற்கு அரைமணி நேரம் நாக்கு வறழப் பேசுவாள்.
ஒருநாள் பாக்கியலட்சுமி தன் பேத்தியை அழைத்துக் கொண்டு, காய்கறி மார்க்கெட்டுக்குப் போனாள். கத்தரிக்காய் விற்பவரிடம் சென்று, ''கிலோ காய் என்ன விலை?'' என்று கேட்டாள்.
''கிலோ இருபது ரூபாய்,'' என்று சொன்னான் வியாபாரி.
''என்னய்யா இருபது ரூபா சொல்றே. கிலோவிலே பாதிக்காய் சொத்தை. அதுக்குமா சேத்துக் காசு கேக்கறே?'' என்று பாக்கியலட்சுமி பேரத்தைச் சூடுபறக்கத் தொடங்கினாள்.
''பாட்டி! சொத்தை பத்தையின்னு பேசாதே. சொத்தையிருந்தா, காய் ருசி இல்லாம இருந்தா காசு வேண்டாம்,'' என்று வியாபாரியும் சூடாகப் பதில் சொன்னான்.
''நேத்தைக்கு கிலோ பத்து ரூபாய்க்கு வித்த கத்தரிக்காய் இன்னைக்கு கிலோவுக்கு பத்து ரூபா எப்படி ஏறுச்சு? நேத்து விலைக்கே கொடு. ஏமாத்தற வேலை எங்கிட்ட நடக்காது,'' என்று வியாபாரியுடன் சண்டை போடத் தொடங்கினாள்.
'வாங்கறது ஒரு கிலோ. வம்பளக்கறது ஏழு கிலோ' என்று பாட்டியை மனதிற்குள் வசைபாடத் தொடங்கினான் வியாபாரி.
பாக்கியலட்சுமி வாதத்தைக் கேட்ட மற்றவர்கள் அங்கே கூட்டங்கூடி விட்டனர். அதனால், தனக்கு வியாபாரம் கெட்டு விடும் என்று கருதிய வியாபாரி, கிலோவுக்கு ஐந்து ரூபாய்க்கு குறைத்து கத்தரிக்காயைக் கொடுத்துவிட்டான். பாக்கியலட்சுமி வியாபார பேரத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்தோடு, பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.
வரும் வழியில் பாட்டியைப் பார்த்து, ''பாட்டி, நீ செய்யறது பேரமா தெரியலே... வெறும் விதண்டாவாதமாதான் இருக்கு. உன்னோட பேச்சைக் கேட்டு மார்க்கெட் ஜனமெல்லாம் உன்னை ஒரு விதமா ஏற, இறங்கப் பார்த்தாங்க. இனிமே நான் உங்ககூட காய்கறி வாங்க வரமாட்டேன் பாட்டி,'' என்று கூறிய பேத்தி, தனது வெறுப்பை வெளிப்படுத்தினாள்.
''நீ படிச்சு என்ன பிரயோசனம். இன்னும் உலகம் தெரியாம இருக்கிறே?'' என்று பேத்தியைப் பார்த்துச் சொன்னாள் பாட்டி.
''என்னவோ எனக்குப் பிடிக்கலே உன்னோட வியாபாரமும், பேரமும்,'' என்றாள், பேத்தி.
சில நாட்கள் சென்றன-
பாக்கியலட்சுமி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, அரிசியை முறத்தில் எடுத்து வைத்து கல் நீக்கிக் கொண்டிருந்தாள். பேத்தி பாடப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கீரை விற்பவள், அவர்களது வீட்டு வழியே வந்தாள்.
''கீரைக்காரி, இங்கே வா, கீரை என்ன விலை?'' என்று கேட்டு அவளைக் கூவி அழைத்தாள் பாக்கியலட்சுமி.
கீரைக்காரி அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து கீரை இருந்த கூடையைக் கீழே இறக்கி வைத்தாள்.
''கீரை கட்டு என்ன விலை?'' என்று கேட்டாள் பாக்கியலட்சுமி.
'இந்த நாள் பூராவும் கீரை பேரத்திலேயே போய்விடப் போகுது' என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் பேத்தி.
''ஒரு கட்டுக் கீரை பத்து ரூபாய்,'' என்று கூறினாள் கீரைக்காரி.
''என்னம்மா கூடைக்கும் சேத்தா விலை சொல்றே?'' என்று கேட்டாள் பாக்கியலட்சுமி.
அரைமணி நேரம் பேசி, இரண்டு ரூபாய் குறைத்து கீரையை வாங்கினாள்.
பின்னர் கீரைக்காரி பாக்கியலட்சுமி பாட்டியை பார்த்து, ''அம்மா தாயே! தாகமாக இருக்கு. மோர் இருந்தா கொடுக்கறீங்களா?'' என்று கேட்டாள்.
ஒரு பெரிய டம்ளரில் நிறைய மோர் ஊற்றி, எடுத்து வரும்படி பேத்தியிடம் கூறினாள் பாக்கியலட்சுமி. அவள் உடனே சென்று மோர் கொண்டு வந்தாள்.
மோரை வாங்கிக் குடித்து முடித்த கீரைக்காரி, ''அம்மா மகராசி! நீங்க நல்லா இருக் கணும்,'' என்று வாழ்த்தியவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
பாட்டியைப் பார்த்து, ''ஏம் பாட்டி, கீரைக்கு இரண்டு ரூபாய் கொறைச்சுக் கொடுத்தே... ஆனா அந்த இரண்டு ரூபாய்க்கு அதிகமாகவே மோரை அவங்களுக்குக் கொடுத்தியே... இந்த வியாபாரத்திலே உனக்கு என்ன லாபம்? கீரைக்காரி உன்னை நல்லா ஏமாத்திட்டா பாத்தியா?'' என்று கேட்டாள்.
''அடியே என் மக பெத்த மகளே, உனக்கு வியாபாரமும் தெரியாது. நம்ம பரம்பரையையும் புரியாது. நான் அரைமணி நேரம் பேசி கீரைக்கு இரண்டு ரூபாய் விலை குறைச்சேனே, அதுக்குப் பேரு வியாபாரம். அந்த வியாபாரம் முடிந்ததும், ஒரு டம்ளர் மோர் கொடுத்தேன் பாரு. அது நம்ம பாரம்பரியம்; நம்ம கலாசாரம்; மத்தவங்களுக்கு உதவுகிற கலாசாரம் தாண்டி நம்ம கலாசாரம். வியாபாரம்னா பேரம் பேசியாகணும். உதவியின்னா பேரத்துக்கு இடமில்லை. இப்ப உனக்குப் புரியுதா வியாபாரம் வேற, கலாசாரம் வேறன்னு. இந்தக் காலத்துல இரண்டையும் போட்டுக் குழப்பறாங்க. அதனால்தான் வியாபாரத்துல தோத்துப் போறாங்க. கலாசாரத்தை மறந்து போறாங்க,'' என்று கூறினாள் பாட்டி.
பாக்கியலட்சுமி பாட்டியாகி விட்ட போதிலும் அவளது கருத்துக்கள் புதுப்பொலிவுடன் மிளிர்வது கண்டு, பெருமை கொண்டாள் பேத்தி.
***