
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரஹ்மானியா மேல்நிலை பள்ளியில், 1992ல், 7ம் வகுப்பு படித்தேன். மதிய உணவு இடைவேளையில் மணி ஒலித்ததும், நிழலில் அமர்ந்து சாப்பிட மரங்களை நோக்கி ஓடுவோம்.
வளாகத்தில் குறைந்த அளவில் தான் மரங்கள் இருந்தன. தேவையை ஈடுகட்டும் வகையில் நிறைய மரக்கன்றுகளை நட்டது, பள்ளி நிர்வாகம்.
பக்கத்தில் இருந்த, கல்வெட்டான் குழி குளத்திலிருந்து, காலையும், மாலையும், சிறிய வாளியில் தண்ணீர் முகந்து, கன்றுகளுக்கு ஊற்றி வந்தோம். நாளடைவில் இந்த பணியை மேற்கொள்வதில் சலிப்பு ஏற்பட்டது.
இதை கவனித்த தலைமையாசிரியர் ஹசன் அபு பக்கர், 'இப்போது தண்ணீர் ஊற்ற கஷ்டமாக இருக்கலாம். பிற்காலத்தில், இதனால் பெரும் பலன் ஏற்படும். எனவே, தயங்காமல் தண்ணீர் ஊற்றுங்கள்...' என உற்சாகப்படுத்தினார். அந்த வார்த்தைகள், 30 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது.
சமீபத்தில், என் உறவினர் குழந்தையை அழைத்து வர, அதே பள்ளிக்கு சென்றிருந்தேன். லேசான சாரல் மழையில் வளாக மரத்தடியில் ஒதுங்கினேன். ஆசையாக வளர்த்த மரங்கள் மகிழ்ச்சி தந்தன. மனப்பூரிப்புடன் குழந்தையை அழைத்து வீடு திரும்பினேன்.
தற்போது, என் வயது, 42; அன்று தலைமை ஆசிரியர் உதிர்த்த முத்தான வார்த்தைகள், இன்றும் என் நினைவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
- ஏ.ஜி.முகம்மது தவுபீக், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 88257 68085

