தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி! (8) - சரண்யா

பூங்குழலி! (8) - சரண்யா

பூங்குழலி! (8) - சரண்யா


PUBLISHED ON : மே 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: பட்டத்து யானை தேர்ந்தெடுத்த இளவரசி பூங்குழலியை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூண்டது. இனி-

அரண்மனையின் பிரதான வாயிலில், தோரணங்கள், வாழைகள் கட்டப்பட்டிருந்தன. தண்ணீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டிருந்தது. சரம் சரமாகவும், கொத்து கொத்தாகவும் பூக்கள் தொங்கின.

வரவேற்பு, ஆடலும், பாடலுமாக நடந்தது. ராஜ வரவேற்பைக் கண்டு அதிர்ந்து போனாள் பூங்குழலி. 'இதையெல்லாம் தன் அப்பா காணவில்லையே...' என்று அவள் மனம் வருந்தினாள்.

உள்ளே சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, அதில் மலர்கள் தூவப்பட்டிருந்தன. அனைத்தும் ரோஜா மலர்கள். அதன் இதழ்களில், கண்ணாடி முத்துக்கள் போல் பனி நீர்தங்கியிருந்தது.

ரோஜா மலர்களை செடியிலிருந்தே பறிக்கக்கூடாதென்று உறுதியாக இருப்பவள் பூங்குழலி. ஆயிரக்கணக்கான ரோஜாப் பூக்களால் விரிக்கப்பட்ட மலர் கம்பளத்தை மிதித்து அதன்மீது நடக்க அவள் பிரியப்படாமல் நின்று விட்டாள்.

''குழந்தாய்! என்னம்மா தயக்கம்?'' என்று கேட்டாள் மகாராணி மாணிக்கவல்லி.

''மலர்களை மிதித்து, அதன்மீது நடக்க மனம் வரவில்லை அரசியாரே!'' என்றாள் பூங்குழலி.

அவளுடைய மனதின் மென்மையை புரிந்துகொண்ட மகாராணி, பூங்குழலி நடந்து செல்லும் அளவுக்கு ரோஜா மலர்களை அகற்றி பாதைவிடச் சொன்னார்.

ஒரு நொடியில் அதை சேவகர்கள் செய்து முடித்தனர்.

வருங்கால இளவரசியின் மலர்களை நேசிக்கும் உயர்வான மனவிருப்பத்தையும், அதை உடனே நிறைவேற்றி வைத்த மகாராணி மாணிக்கவல்லியின் பரந்த உள்ளத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைந்த மக்களும், அரசவை பிரதானிகளும், அரண்மனை ஊழியர்களும், ''இளவரசி வாழ்க! மகாராணி வாழ்க!'' என கோஷமிட்டனர்.

அரண்மனையினுள் அழைத்துச் செல்லப்பட்ட பூங்குழலி, வாசனை திரவியங்களும், மஞ்சளும் கலந்த நன்னீரால் குளிப்பாட்டப்பட்டாள். மணம் வீசும் கஸ்தூரி மஞ்சள் பொடியை அவள் உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டினர். தலையை துடைத்து, கூந்தலுக்கு சாம்பராணி புகைகள் காட்டப்பட்டன.

ஒரு அரசகுமாரனோ, அரசகுமாரியோ தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறிய வயதிலிருந்து, இருபது வயது வரை உள்ளவர்கள் மதிக்கத்தக்க பட்டாடைகள், இரு பாலருக்கும் ஏற்ற அளவில் தயாராக தைக்கப்பட்டிருந்தன .

புத்தாடை அணிவிக்கப்பட்டாள் பூங்குழலி. அவள் தோற்றமும், உருவரும், மந்திரக்கோலால் மந்திரம் போட்ட மாதிரி, முற்றிலும் மாறிப் போயிருந்தது.

அவளுக்கு, சுவையான உணவு கொடுக்கப்பட்டது. அப்பாவின் நினைவு வந்து, மனம் முழுவதையும் ஆக்ரமிக்க, கொஞ்சமே சாப்பிட்டாள் பூங்குழலி.

அவளை தூக்கி தம் மடி மீது வைத்துக்கொண்டார் அரசர் அமரசிம்மன். மகாராணியும், அருகில் வந்து உட்கார்ந்து, பூங்குழலியின் தலையை வருடிக் கொடுத்தாள்.

''குழந்தாய் பூங்குழலி... இனி நான் தான் உனக்கு தந்தை; மகாராணி தான் தாயார்! எங்களை, அரசர், அரசி என்று நீ நினைக்கக்கூடாது!'' என்று அரசர் அமரசிம்மன் கூறிக்கொண்டிருந்த போது, ''அரசே! அரசே!'' என்று மகிழ்ச்சியில் திளைப்பது போல கூவிக்கொண்டு வந்தார் அமைச்சர் அறிவுமதி.

''வாருங்கள் அமைச்சரே! நம் பட்டத்து யானை, மேகநாட்டின் வருங்கால இளவரசியாக, பூப்போன்ற மென்மையான உள்ளம் படைத்த இந்த குழந்தை பூங்குழலியை எப்படி தேர்ந்தெடுத்துவிட்டது பாருங்கள். இவள் நடந்துவர, காஷ்மீர், பாரசீக ரோஜாக்களால் நடை பாதை விரித்திருந்தோம். பூக்களை மிதித்துக்கொண்டு, அவற்றின் மீது நடந்துவர பூங்குழலிக்கு இஷ்டமில்லை என்றாள். எவ்வளவு மென்மையான உள்ளம் பாருங்கள் குழந்தைக்கு!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

''அதை எல்லாம் அறிந்துதான், அமைச்சர் பணியை எல்லாம் நிறுத்திவிட்டு, வருங்கால இளவரசியை காணவும், என் வணக்கத்தை தெரிவிக்கவும், ஒரு நல்ல குழந்தையை அரச வாரிசாகப் பெற்ற உங்கள் பரவசத்தையும், மகாராணியாரின் மகிழ்ச்சியையும் காண ஓடோடி வந்தேன் அரசே!'' என்றார் அமைச்சர் அறிவுமதி பொய்யாக.

''குழந்தாய் பூங்குழலி! உன் முதல் ஆசை என்னம்மா?'' என்று பூங்குழலியிடம் கேட்டார் அரசர் அமரசிம்மன்.

''எனக்கு, கல்வி கற்க வேண்டும். பல துறைகளிலும் நல்ல அறிவு உண்டாக வேண்டும். வேத சாஸ்திரங்களை அறிய வேண்டும். பஞ்ச பூதங்கள், சூரிய, சந்திரன் நட்சத்திரங்கள் பற்றி எவ்வளவு படித்து அறிய முடியுமோ, அவ்வளவு படிக்க வேண்டும். நம் நாட்டு புராணங்கள், இதிகாசங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள், நன்னெறி, மூதுரை, நாலடியார், தேவாரம், பிரபந்தம், பக்தர் சரிதம், நாட்டின் எல்லைகள், நாட்டின் வாழ்வாதாரங்கள், அருவிகள், அனைக்கட்டுகள் பாசனங்கள், பயிர்கள் வாய்பேச முடியாத ஜீவன்களின் வாழ்வுமுறை, அறம், அன்பு, தியாகம், மேன்மை, பெரியோரை மதித்தல் ஆகியவைகளை கற்க வேண்டும் என்பது தான், எனது முதலும், தீராததுமான ஆசை; பேராசை!'' என்று சொல்லி சிரித்தாள் பூங்குழலி.

அவள் சொல்லச் சொல்ல, இவ்வளவு சின்னப் பெண்ணுக்கு, இவைகளைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்படி தெரிந்தது? என்ற வியப்பு ஏற்பட்டது.

''கூடவே, பட்டத்து யானை சாமா, எவரையோ தேர்ந்தெடுக்காமல், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, குழந்தை பருவத்திலேயே, சுடர்விட்டு பிராசிக்கப் போகிற ஒரு குழந்தையை தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளது என்று எண்ணி மகிழ்ந்தனர் அரசரும், அரசியும்.

''அமைச்சரே! நாளையே இளவரசியை, நல்ல ஒரு குருவிடம் கல்வி கற்க ஏற்பாடு செய்யுங்கள்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us