PUBLISHED ON : டிச 04, 2021

கோவை மாவட்டம், நெகமம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்தபோது, போக்குவரத்துக்கு பேருந்து வசதி அதிகம் கிடையாது; அக்கம் பக்கத்து கிராமங்களில் வசித்த மாணவியர், மிதிவண்டியில் வருவர். வகுப்புத் தோழி நீலாவதியும் அதில் ஒருவர்.
இருவரும் போட்டி போட்டு படித்து, வகுப்பில் முதல், இரண்டாம் இடத்தை மாறி மாறி பிடித்து வந்தோம். அவளது பெற்றோர் கூலித்தொழில் செய்தனர்; அவள் படிப்புக்கு கட்டணம் செலுத்த சிரமப்பட்டனர்.
இந்நிலையில், அவளது மிதிவண்டி பழுதாகி விட்டது; புதியது கேட்டு வற்புறுத்தியவளை, 'படித்தது போதும்... வீட்டில் வேலையை பார்...' என தடுத்து விட்டனர்.
இதை அறிந்தவுடன் என் உண்டியல் சேமிப்பிலிருந்த பணத்தில், என் பெற்றோர் சம்மதத்துடன், புதிய மிதிவண்டி வாங்கி கொடுத்தேன்.
நன்றாக படித்து இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேறினோம். செவிலியர் பயிற்சி பெற்று, அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள் தோழி. பேரன், பேத்திகளுடன் நல்ல நிலையில் வாழ்கிறோம்.
என் வயது, 66; சமீபத்தில் ஒரு திருமண விழாவில் சந்தித்தோம். என்னை அணைத்தபடி, 'நீ கொடுத்த மிதிவண்டியை பாதுகாத்து பராமரித்து வருகிறேன். தக்க சமயத்தில் செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்...' என்று கண்ணீர் வடித்தாள். மனநிறைவுடன் விடைபெற்றோம்.
- ஆ.வசந்த கோகிலம், கோவை.
