PUBLISHED ON : ஆக 30, 2013

முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. 'நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள்.
ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். 'இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து வைத்திருந்தான். காற்றடித்த போதெல்லாம் வாயில் மண்தான் விழுந்தது. மாலை வரை அப்படியே படுத்துக் கிடந்த அவனுக்கு வாய் வலித்தது.
எழுந்தான். ஒரு சாக்கு பையையும், ஒரு கோலையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் வேலைதேடி அல்ல... அதிர்ஷ்ட தேவதையைத் தேடி.
வழியில் ஒரு ஓநாயைக் கண்டான்.
''எங்கே போகிறாய்... நல்லவனே!''
''அதிர்ஷ்ட தேவதையிடம், எனக்கு செல்வமும், மகிழ்ச்சியும் தர வேண்டி செல்கிறேன்,'' என்றான்.
''நல்லது! எனக்கு ஓர் உதவி செய்வாயா?''
''தாராளமாக!''
''நான் பிறந்ததிலிருந்தே எலும்பும், தோலுமாகவே இருக்கிறேன். என் உடம்பில் உரோமம் ஏன் வளர வில்லை? அது வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறாயா?'' என்றது ஓநாய்.
''ஆகட்டும்!''
இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒரு திராட்சைத் தோட்டம் வந்தது. அந்தோ பரிதாபம். அந்தக் கொடிகளில் ஒரு பச்சை இலைக்கூட இல்லை. எல்லாம் பழுப்பேறி இருந்தன. அதுவும் அவனை, ''எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டது.
''அதிர்ஷ்ட தேவதையிடம், வேலை செய்யாமல் நான் பணக்காரனாகவும், செல்வாக்கு உள்ளவனாகவும் இருக்க, வரம் பெற போகிறேன்!'' என்றான்.
''அப்படியானால், என் பழுத்த இலைகள் பச்சை இலைகளாக மாற, நான் என்ன செய்ய வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டு வா!''
''ஆகட்டும்!''
இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், ஓர் ஆறு வந்தது. அதைத் தாண்டும் போது, நீருக்கு மேல் வந்தது ஒரு மீன். அதன் முதுகில் இராஜப் பிளவைக் கட்டி பெரிதாக இருந்தது. அதனிடமும், 'தான் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கப் போவதைப் பற்றி பெருமை அடித்துக் கொண்டான்' அந்த முட்டாள்.
''இதோ பார்த்தாயா இந்த கட்டியை... இது பெரிதாகிக் கொண்டே வருகிறது. அதிர்ஷ்ட தேவதையிடம் இதற்குப் பரிகாரம் கேட்டு வருகிறாயா?'' என்றது.
அவனும் ஒத்துக்கொண்டான். இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஓர் அழகிய சிற்றோடை தென்பட்டது. அதன் அருகே மிகவும் அழகிய பெண்ணொருத்தி நின்று கொண்டு இருந்தாள். வெள்ளை நிற ஆடையும், புதிதாக பூத்த மலர் கிரீடமும் கொண்ட அவளை கண் கொட்டாமல் பார்த்தான்.
''நீ யார்? எதற்கு வந்தாய்?வழியில் யாரை சந்தித்தாய்?''என்று கேட்டாள்.
''ஒரு ஓநாய், ஒரு திராட்சைத் தோட்டம், ஒரு மீன், என்றான்.
''அவைகள் உன்னிடம் என்னென்ன கேட்டன?''
''ஓநாய்க்கு உரோமம் வர வேண்டுமாம்! அதைப் பற்றி அதிர்ஷ்ட தேவதையை கேட்டு வரச் சொல்லிற்று!'' என்றான்.
''முழு சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன் இதயத்தைத் தின்றால் அதன் குறை நீங்கும்!''
''திராட்சையின் குறை என்ன?''
''அதன் இலைகள் துளிராகயிருக்கும் போதே பழுத்து உதிர்ந்துவிடுகின்றன!''
''அந்தத் திராட்சைக் கொடியின் அடியில், ஒரு பெரிய இடம் நிறைய பொற்காசுகளை யாரோ எப்போதோ புதைத்துவிட்டனர். அந்தப் புதையலை தோண்டி எடுத்து விட்டால், திராட்சை கொடிகள் செழிப்பாக வளர்ந்து, கொத்து கொத்தாக பழுத்துத் தொங்கும்!''
''அது சரி! மீனின் கட்டிக்கு?'' என்றான் சோம்பேறி.
''அந்தக் கட்டி முழுவதும் வைரங்கள் இருக்கின்றன. அந்தக் கட்டியை அறுத்து வைரங்களை எடுத்துவிட்டால் மீனின் கட்டி போய்விடும்!'' என்றது.
''இதை நான் மீனிடம் சொல்கிறேன்!''
''சரி, நீ வந்த வழியே போ! அதிர்ஷ்டம் உன் கையில்!'' என தேவதை மறைந்தது.
சோம்பேறியோ, தான் வெகு விரைவிலேயே பெருஞ்செல்வந்தனாகி விட்டது போல் நினைத்துக்கொண்டு சந்தோஷமாக வந்தான்.
ஆற்றில் மீன் வந்தது.
சோம்பேறி அதனிடம், தேவதை கூறியதை கூறினான்.
''நீயே அந்தக் கட்டியை அறுத்து வைரங்களையெல்லாம் எடுத்துச் செல்!'' என வேண்டியது.
''எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருந்தது. நீ வேறு யாரையாவது அந்தக் கட்டியை அறுக்கச் சொல்!'' என வேகமாச் சென்று விட்டான்.
அடுத்து திராட்சைத் தோட்டத்தை அடைந்து தேவதைச் சொன்னதைச் சொன்னான்.
''நீயே அந்தப் புதையலை வெட்டி எடுத்துச் செல்!'' என மன்றாடியது.
''அதெல்லாம் முடியாது. எனக்கு நேரமில்லை. அதிர்ஷ்டம் எனக்காகக் காத்திருக்கிறது,'' என வேகமாகச் சென்றான்.
ஓநாய் எதிர்ப்பட்டது.
''ஓநாயிடம் தேவதைச் சொல்லியதை சொன்னதுடன், மிகப் பெருமையாக, தான் எப்படி மீனையும், திராட்சைத் தோட்டத்தையும் உதறிவிட்டு வந்ததைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டான்.
''உன் சோம்பேறித்தனத்தால் நீ கெட்டாய். முட்டாளே புதையலைத் தோண்டியிருந்தால் நீ செல்வந்தனாகியிருப்பாய். மீனின் கட்டியை அறுத்திருந்தால், எவ்வளவோ வைரங்கள் உனக்கு கிடைத்திருக்கும். எனவே, உன்னைப் போன்ற முட்டாள் சோம்பேறிகளுக்கு, இந்த உலகில் இடமில்லை. உழைப்பின்றி எதுவும் கிடையாது!'' என்று கூறிக்கொண்டே, அவனைக் கொன்று தின்றது.
***
