PUBLISHED ON : செப் 24, 2010

சில குடும்பங்களில் வீக் எண்ட்களில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்து கொண்டிருப்பர். சில குடும்பங்களில் இந்த இயந்திர வாழ்க்கை சுழலில் இண்டு இடுக்கில், சந்து பொந்தில் சேர்ந்தாற் போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய் விடுவர். பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறைதான் சுற்றுலா ஸ்பாட். செப்., 27 சுற்றுலா தினம். இதனை ஒட்டி சில சுற்றுலா சொர்க்கங்களை சந்திப்போமா...
வால்பாறை... வட்டப் பாறை!
நடுத்தர வர்க்கத்தினர் வெளிநாடு செல்ல இயலவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை. அந்த வருத்தத்தை முழுவதுமாக தீர்த்து வைக்க கூடிய இடம் இந்த வால்பாறை. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம். நடுவில் ஆறுகள், அணைகள், கண்ணுக்கு குளுமையான புல்வெளிகள். இப்படி சுற்றுலா தலமாக நம் முன் நிற்கிறது வால்பாறை.
பொள்ளாச்சியில் இருந்து அரைமணி நேரம் பேருந்தில் பயணம் செய்தால் ஆஜராகிறது 'ஆழியாறு அணை'. அதன் அற்புத தோற்றம் பார்க்க பார்க்க மகிழ்ச்சியை பெருக்கும். அணையை ஒட்டியவாறு உள்ள ஆழியாற்று பூங்காவில் குழந்தைகளோடு விளையாடிவிட்டு அங்குள்ள 'குரங்கருவி'யில் குழந்தைகளோடு குளிப்பதே படுஜாலியான விஷயம்தான். குற்றால அருவிமாதிரி ஐஸ் பொழிவதுபோல் ஜில்லென்று இருக்கும். இங்குள்ள குரங்கு குட்டிகளின் அட்டகாசம் குழந்தைகளுக்கு பேரானந்தம். தின்பண்டங்களின் மீது மிக ஜாக்கிரதை வேண்டும். குரங்கருவியில் குளித்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினால் 40 கொண்டை ஊசி வளைவுகள். தென்னிந்தியாவிலேயே அதிக கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை இது. மெதுவாக செல்லும் பேருந்து பயணத்தில் ஒரு பக்கம் அழியாறு அணையின் அழகிய தோற்றம், நீல நிறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர், மறுபுறம் உயர்ந்த மலைகள் என இருபுறமும் ஆழமான இயற்கை காட்சிகள் கண் கொள்ளாதவை. இவற்றையெல்லாம் ரசித்தபடியே வால்பாறையை நெருங்கும்போதே, சுற்றிலும் பசுமையான தேயிலை செடிகளின் மேல் பனிமூட்டம் சூழ்ந்த ரம்மியமான காட்சிகள் காணப்படும். வால்பாறையை சுற்றியுள்ள இடங்களெல்லாம் வால்பாறையிலிருந்து 20 கி.மு., சுற்றளவிலேயே இருப்பது இன்னமும் இந்த இடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. கேரள மாநிலம் சாலக்குடியிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வால்பாறையிலிருந்து 50 கி.மு., தூரம்தான். நயாகராவை பார்க்க முடியாத மக்களுக்கு அதிரப்பள்ளி அருவி அதிர்ஷ்ட பரிசாகும். அருவியின் அழகு சொல்லில் விளக்க முடியாது. வால்பாறையிலிருந்து 15 கி.மு., தூரத்திலுள்ள சின்ன கல்லாறு, புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். தமிழகத்தின் சிரபுஞ்சி என்றே அழைக்கப்படுகிறது. இதுதான் உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் இரண்டாவதாகும்.
இங்குள்ள அருவியில் தண்ணீர் விழும் ஓசை இசையை கேட்பது போலவும், சிங்கத்தின் உறுமல் போலவும் இருக்கும். இதை கேட்கத்தான் வெளிநாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். அங்கிருந்து சோலையாறு பக்கம். ஆசியாவின் மிக ஆழமான இரண்டாவது அணை இதுதான். இந்த இடங்களுக்கு எல்லாம் அரசியாய் அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதமான இடம் கிராஸ் ஹில்ஸ். பசுமையின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் பூஞ்சோலைகள் நிறைந்த மலைப்பகுதி. உலகின் எழில் நிறைந்த புல்வெளிகளில் ஒன்று. கிராஸ் ஹில்ஸில் உள்ள குன்றுகளுக்கிடையில் ஓடும் கோணலாறிலும் குட்டி அருவியிலும் குளிப்பது த்ரில்லான விஷயம். இங்குள்ள குடில்களில் இரவு நேரம் தங்குவது வித்தியாசமான அனுபவம்.
அங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் அக்காமலை. வால்பாறையில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் உள்ளது பாலாஜி கோவில். சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் ரசிக்க வேண்டியது. அருகில் கரமலையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தை நாடிவரும் பக்தர்கள் அதிகம். இவை தவிர நல்லமுடி பூஞ்சோலை, ஷேக்கல் முடி என இயற்கை வளங்கள் நிறைந்த மனதை கொள்ளை கொள்ளும் ஏராளமான இடங்களை கொண்டது வால்பாறை.
ஏற்காடு!
சேலத்தில் இருந்து அடிவாரம் வழியாக ஏற்காடு சென்றால் உங்களை முதலில் வரவேற்பது ஏற்காடு ஏரி. இந்த ஏரியில் படகில் பயணம் செய்யலாம். இதுதவிர மான் பூங்கா, ராஜராஜேஸ்வரி கோவில், சேர்வராயன் கோவில், லேடீஸ்சீட் (வியூ பாயிண்ட்), ஜென்ஸ் சீட் (வியூ பாயிண்ட்), சில்ரன் சீட் (வியூ பாயிண்ட்), ரோஜா தோட்டம், மாண்ட்போர்ட் பள்ளி, ரெட்ரிட் இல்லம், மஞ்சகுட்டை வியூ பாயிண்ட், பக்கோடா வியூ பாயிண்ட், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி மையம், வாழவந்தி ராமர் கோவில், ஆத்துபானம் அரசு தேக்கு தோட்டம், தலைசோலை அண்ணாமலையார் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, மீன் காட்சியகம் ஆகியவை உள்ளன.
கொல்லிமலை!
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை உள்ளது. தரை மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 2 ஆயிரம் மீட்டர் உயர் கொண்டதாகும். இதன் உச்சிக்கு செல்ல 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். பசுமையான மலை மீது வளைந்து நெளிந்து செல்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். கொல்லிமலையில் சித்தர்கள் நடமாட்டம் உண்டு. இங்கு ஆபூர்வ மூலிகைகள் விளைகின்றன. எல்லா வகை நோய்களுக்கான மூலிகைகளையும் சித்த வைத்தியர்கள் இங்கு வந்த பறித்து செல்கின்றனர்.
நேரம் எடுத்து பார்க்க வேண்டிய இடங்களை பார்த்துவிடுவோம்!
