
திண்டுக்கல், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில், 1964ல், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
தேர்ச்சிக்கு, 35 மதிப்பெண் எடுத்தால் போதும். அதனால், தேர்வுகளில் அந்த அளவிற்கு மட்டும் விடை எழுதுவேன்.
ஆங்கில ஆசிரியர் நவமணி, என் விடைத்தாளை கவனித்து, 'எப்போதும், 35 மதிப்பெண்ணை குறி வைக்காதே... அது மதில் மேல் பூனை; தவறாக சாய்ந்தால் தேர்ச்சி பெறுவது கடினம்... அனைத்து, வினாக்களுக்கும் விடையளிக்க பழகு...' என புத்திமதி கூறினார். அன்றுமுதல் கவனத்துடன் விடையளிக்க முயற்சித்தேன்.
பொது தேர்வில், சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். நன்றாக படித்த அவரைப் போலவே, பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். ஆங்கில மொழி உச்சரிக்க, அவரது பாணியையே பின்பற்றினேன். சக ஆசிரியர்களின் பாராட்டுதலை பெற்றேன்.
தற்போது, 73 வயதாகிறது; அந்த ஆசிரியரை எப்போது நினைத்தாலும் ஆனந்தக் கூத்தாடுகிறது மனம்.
- கே.மகாலட்சுமி, திண்டுக்கல்.
தொடர்புக்கு: 98428 14125.

