PUBLISHED ON : மே 06, 2016

நான் மதுரை சவுராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, குற்றாலத்திற்கு, 'இன்பச் சுற்றுலா' சென்றிருந்தோம்.
குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தோம். எங்களோடு வந்திருந்த ஆசிரியர்கள், மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்ததோடு, கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். அன்றிரவு, பத்து மணி வரை சில விளையாட்டு போட்டிகளை நடத்திவிட்டு, 'எல்லாரும் சீக்கிரம் போய் படுங்கள்; காலையில எழுந்ததும் அம்பாசமுத்திரம் கிளம்பணும்' என்று கண்டிப்புடன் கூறினர். எல்லா மாணவர்களும் தூங்கி விட்டனர்.
ஆனால், நானும், என் நண்பன் குமாரும் தூங்கவேயில்லை. எல்லாரும் தூங்கிய பிறகு, கடையில் வாங்கிய கருப்பு மை பாட்டிலை எடுத்து, தூங்கிய அனைத்து மாணவர்களுக்கும் வீரபாண்டிய கட்ட பொம்மன், கமல், ரஜினி, ஹிட்லர் என விதவிதமான மீசைகளை வரைந்தோம். அதோடு, இரண்டு ஆசிரியர்கள் மீசையில்லாமல் ஷேவிங் செய்திருந்தனர். அவர்களுக்கும் அழகாக மீசை வரைந்தோம்.
இந்த வேலையை யார் செய்தது என்று தெரியக்கூடாது என்பதற்காக, கண்ணாடியை பார்த்து, எங்களுக்கும் நாங்களே மீசை வரைந்து கொண்டு சிரிப்பை அடக்கிய படி போய் படுத்து விட்டோம். நீண்ட நேரத்திற்கு பின் தூங்கிப் போனோம். காலையில் எல்லாரும் எழுந்ததும் ஒருவர் முகத்தை பார்த்து மற்றவர் சிரிக்க, அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது. கோபத்தில் ஆவேசமாக இருந்த அந்த இரண்டு ஆசிரியர்களையும், மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர்.
செல்லுமிடமெல்லாம் அந்த மீசைகளை வரைந்தது யார் என்பது பற்றிதான் ஒரே பேச்சு. கடைசி வரை இந்த வேலையை யார் செய்தது என்று அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பள்ளிக்கு திரும்பியதும் ஒருவனிடம், 'நாங்கள்தான் செய்தோம்!' என்று சொல்ல இந்த உண்மை, 'காட்டுத் தீ' போல பரவியது.
உடனே, தலைமையாசிரியர் எங்களை அழைத்தார். 'என்ன செய்யப் போகிறாரோ!' என்று பயந்தபடியே சென்றோம். அங்கே இன்ப அதிர்ச்சி. அவரும் தட்டிக் கொடுத்து, 'இந்த யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?' என்று கேட்டு சிரித்தார்.
இன்றும் எனது பள்ளி நண்பர்களை சந்தித்தால், அந்த மீசை விளையாட்டை பற்றித்தான் பேசிச் சிரிப்போம்!
-வி.மணிகண்டராஜன், மதுரை.