PUBLISHED ON : டிச 24, 2022

இறைவனின் திருமகனாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து, பூமியில் அவதரித்ததை நினைவூட்டும் விதமாக, கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற சொல்லைக் கேட்டதும், பளிச்சென மனக்கண் முன் தோன்றுவது, 'சாண்டா கிளாஸ்' என்ற கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் தான்.
பனி படர்ந்த தாடியுடன், மான்கள் பூட்டிய பனிச்சறுக்கு வண்டியில் முதியவர், பரிசு மூட்டையுடன் வருவது மனக்கண்ணில் தோன்றும். கூடவே ஆங்கிலத்தில், 'ஜிங்கிள் பெல்...' என்ற இனிய கீதமும் ஒலிக்கும்.
குழந்தைகளை குதுாகலிக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி பார்ப்போம்...
மத்திய கிழக்கு நாடான துருக்கி, பாடரா பகுதியில் கோதுமை வணிகர் ஒருவர் இருந்தார். மிகவும் பணக்காரர். அவரது மகன் பெயர் நிகோலாஸ். துறவியாக வாழ்ந்து வந்தார்.
அப்பா சம்பாதித்த செல்வத்தை, ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக திகழ்ந்தார். தங்க நாணயங்களை சிறிய துணியில் கட்டி, ஏழை வீடுகளில் புகைப்போக்கி வழியாக வீசி செல்வது அவரது வழக்கம். பரிசுப்பொருட்களை ஜன்னல் வழியாக வீசுவதும் உண்டு.
நிகோலாசின் குடியிருப்பு, ஒரு குன்றில் இருந்தது. குளிர்காலம் நெருங்கியபோது, ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப்பொருட்களை கையிருப்பில் வைத்திருந்தார். அப்போது, அந்த நகரத்தைத் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. வீட்டுக் கூரைகளில் ஏறி தப்பிய மக்கள், பசியால் வாடினர்.
உடனே, சுடச்சுட உணவு தயாரித்தார் நிக்கோலாஸ். அவரிடம் படகு இல்லை. எனவே பெரிய மரப்பீப்பாயை படகு போல மாற்றினார். வெண்ணெய் கிளறப் பயன்படும் பெரிய மரக்கரண்டியை துடுப்பாக்கினார்.
அந்த படகில் சென்று, வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு தந்து பசியாற்றினார். இதுபோல அவர் புரிந்த உதவிகள் ஏராளம். அவர் மறைந்தபோது, கிறிஸ்துவ மதப் புனிதரில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். அவரது பெயருடன் புனிதர் பட்டம் சேர்ந்தது.
இந்த பெயர், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் டச்சு மொழியில், 'சிண்டர் கிளாஸ்' என அழைக்கப்பட்டது. அந்த சொல் உலகம் முழுதும் பரவியபோது, சாண்டா கிளாஸ் என மாறியது. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு, சாண்டா கிளாஸ் என்ற பெயர் வந்த கதை இதுதான்.
குழந்தைகள் என்றால், சாண்டா கிளாசுக்கு மிகவும் பிரியம். அவர் வாழ்ந்த காலத்தில் ஏழை எளிய பெண்களுக்கு நிறைய உதவிகளையும் செய்திருந்தார். இதனால், குழந்தை மற்றும் இளம்பெண்களின் பாதுகாவலராக அவரை கொண்டாடுவர்.
புனித நிகோலாஸ் பிறந்த இடம், பனியில்லாத நாடான துருக்கி. அப்படியிருக்க, பனி படர்ந்த தாடியுடன் அவரை காட்சியாக்குகின்றனர். இதற்குக் காரணமாக இருந்தவர், கவிஞர் கிளமண்ட் மூர். இவர் பல் டாக்டராகவும் இருந்தார்.
எட்டு கலைமான்கள் இழுத்து வரும் பனிச்சறுக்கு வண்டியில், கிறிஸ்துமஸ் தாத்தா பவனி வருவார். வீட்டுக்கூரையில் ஏறி புகைப்போக்கி வழியாக, பரிசுப்பொருட்களை போடுவார்.
இது போல கற்பனை செய்தது கிளமண்ட் மூர் தான். அதை ஒரு கதைப் பாடலாகவும் உருவாக்கினார். அந்த பாடல், 'இட் வாஸ் த நைட் பிபோர் கிறிஸ்துமஸ்' என துவங்கி பாடப்படுகிறது.
இப்படி தான், சிவப்பு கம்பளிக்கோட்டு, தொப்பி அணிந்த சாண்டா கிளாஸ் வடிவம் உருவானது. இன்றும், அதே வடிவில் உலா வருகிறார் கிறிஸ்துமஸ் தாத்தா.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் போது, வழிமேல் விழிவைத்து, சாண்டா கிளாஸ் வருகைக்காக காத்திருப்பர் குழந்தைகள். அது குளிர்காலம் என்பதால், வீட்டில் கணப்பு அடுப்பு அருகில் காலுறைகளை தொங்க விட்டிருப்பர். அதன் உள்ளே, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப்பொருளை போடுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உலகம் முழுதும் இந்த நம்பிக்கை மாறுபடுகிறது. சில நாடுகளில் பெயர்கள் வேறுபடும். ஐரோப்பிய நாடான இத்தாலியில், புனித பெபானா என்பவர் கிறிஸ்துமஸ் பாட்டியாக வந்து பரிசு தருகிறார். ரஷியாவில், 'பாபோக்சா' என்ற பெயரில், ஒரு பாட்டி பரிசு கொடுப்பார்.
இப்படி, சாண்டா கிளாசுக்கு பல பெயர்களும், பல்வேறு உருவங்களும் உண்டு.
கிறிஸ்து பிறந்த போது, கிழக்குத் திசையில் இருந்து மூன்று மன்னர்கள் வந்து வணங்கி, பரிசுப் பொருட்களை வழங்கியதாக ஒரு நிகழ்வு கூறப்படுவதுண்டு. கீழ்த்திசை அறிஞர்கள் என்று கருதப்படும் அவர்களை, 'மேகி' என்றும் அழைப்பர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடான போலந்தில், மேகி தான் குழந்தைகளை சந்தித்து, பரிசு வழங்குவது வழக்கம். ஐரோப்பிய நாடுகளான ஐஸ்லாந்து மற்றும் சுவீடனில் சாண்டா கிளாஸ் வண்டியை இழுத்து வரும், கலைமான்கள் தான் பரிசுப் பொருட்களை வழங்கும். மத்திய கிழக்கு நாடான சிரியாவில், மேகி ஏறி வந்த ஒட்டகங்களில் ஒன்றுதான் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும்.
எந்த வடிவம் எடுத்தாலும், குழந்தைகளை மகிழ்வித்து அன்பை பொழிகிறது, கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம்.
- மோகன ரூபன்
