தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெளிவு!

தெளிவு!

தெளிவு!


PUBLISHED ON : அக் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஏன் இப்படி படைத்தார் கடவுள்...''

தாத்தா சபேசனிடம், ஆதங்கத்தோடு கேட்டாள் சுடர்விழி.

புரியாமல் விழித்தார்!

''விரைந்து நடக்க வசதியாக நீண்ட கால்கள்; பொருட்களை எடுத்து பணிகள் செய்ய மடிப்புடன் கைகள், விரல்களில் ஏற்ற இறக்கங்கள்... தலையை திருப்ப ஏதுவாக நெகிழ்வான கழுத்து... இப்படி உடல் பாகங்களை எல்லாம் பொருத்தமாக படைத்து, மூளையை மட்டும் மிகச் சிறியதாக படைத்து விட்டாரே...''

அங்கலாய்த்தாள் பேத்தி.

புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார் சபேசன்.

''பின்ன என்ன தாத்தா... படிக்கிறோம்; தொலைக்காட்சி பார்க்கிறோம்; அரட்டை அடிக்கிறோம். இவற்றை எல்லாம் பாதுகாப்பாக சேமித்து வைக்க, உடலை விட, மூளையை அளவில் பெரிதாக அல்லவா படைத்திருக்க வேண்டும்; சிறிய மூளைக்குள் எவ்வளவு விஷயங்களை அடக்க முடியும்...''

''சரியான கேள்வி தான்...''

பேத்தியின் சிந்தனை ஆற்றலைப் பாராட்டி, ''சிறிய மூளையால் உனக்கென்ன சிரமம்...'' என அப்பாவியாக கேட்டார்.

''மூளை பெரிதாக இருந்தால், மறதியே வராதில்லையா... தேர்வு நல்லா எழுதலாம்; பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கலாம். மறதின்னு யாரிடமும் திட்டும், அடியும் வாங்க வேண்டிய அவசியமிருக்காதே...''

பள்ளியில் படும் அவஸ்தைகளை அடுக்கிக்கொண்டிருந்தாள் சுடர்விழி.

புதிதாக வாங்கியிருந்த பீரோவில், பொருட்களை அடுக்க துவங்கினார் சபேசன்.

''தாத்தா... உங்களுக்கு சரியாக அடுக்க தெரியல...''

நிமிர்ந்து பார்த்தார் சபேசன்.

''சலவை துணிகளை எல்லாம், லாக்கர்ல திணிக்கிறீங்க; அப்போ பணம், நிலப்பதிவு பத்திரம், தங்க நகைகள் போன்ற முக்கிய ஆவணங்களை எங்கே வைப்பீங்க...''

''துணிகளை, லாக்கர்ல வைக்க கூடாதா...''

அப்பாவியாக கேட்டார்.

''லாக்கர் சிறியதாகத் தானே இருக்கும்; அதில், விலை உயர்ந்த முக்கிய பொருட்களை மட்டும் தான் வைக்கணும்; எல்லாவற்றையும் திணிச்சா, அவசியமானதைப் பாதுாக்காக முடியாம போயிடுமே...''

சரியான இடத்திற்கு வந்து விட்டதை ஊகித்தார் சபேசன்.

''நீ கூறியது தான் சரி... பெரிய பீரோவில், 'லாக்கர்' சிறியதாக எப்படி இருக்கிறதோ, அதே போலத்தான் உடலின் முக்கிய பகுதியான மூளை சிறியதாக படைக்கப்பட்டுள்ளது... அதை முறையாக பயன்படுத்துவது நம் பொறுப்பு...''

சிரித்தபடி கூறினார்.

சற்றுக் குழப்ப முகபாவனையோடு பார்த்தாள் சுடர்விழி!

''படிப்பு, கேள்வி ஞானம் மூலம் பெறும் அறிவு சார்ந்த வாழ்வில், முக்கியமானவற்றை மட்டும் மூளையில் பாதுகாக்க வேண்டும்... அரட்டை, பொழுது போக்கும் உரையாடல், காட்சி போன்ற எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.

''அதனால் தான், எதையும் ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட வேண்டும் என்பர்; எல்லாவற்றையும் மூளையில் திணித்திருந்தால், குழப்பம் தான் மிஞ்சும்...''

தாத்தாவின் மந்திரச் சொற்கள் மனதில் புகுந்தன.

தெளிவு பெற்றாள் சுடர்விழி.

தளிர்களே... நல்லவற்றை மூளையில் பாதுகாத்து முன்னேறப் பழகுங்க.

மு.நடராசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us