
புதுச்சேரி, வில்லியனுார், இம்மாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2011ல், 7ம் வகுப்பு படித்தபோது, விடுதியில் தங்கியிருந்தேன். உடனிருந்த மாணவியர் பள்ளி விழாக்களில் பங்கேற்பதில்லை. காரணம், நிகழ்ச்சியில் அணிவதற்கு ஆடை, ஆபரணம் எதுவும் இருக்காது. வறுமையால் அவற்றை வாங்க இயலாமல் இருந்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆர்வமுள்ளோரை அழைத்தது பள்ளி நிர்வாகம். துணிந்து நடன பயிற்சி அறைக்கு சென்றேன்; அங்கு, போதுமான மாணவியர் இருந்தனர்.
அடுத்து, நாடக பயிற்சி அறைக்கு சென்றேன். கிராமத்து பெண்ணாக நடிக்க கூறினார், கணித ஆசிரியை ரீட்டா. தயங்காமல் நடித்த என்னை கட்டியணைத்து, 'தேவையான உதவிகளை செய்கிறேன்...' என்று உற்சாகப்படுத்தினார். அனைவரும் போற்றும் வகையில் நடித்தேன். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த புதுச்சேரி முதல்வர் ரங்காசாமியிடம் பாராட்டு பெற்றேன்.
இப்போது எனக்கு, 21 வயதாகிறது. பொறியியல் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறேன். அன்று, என் ஆர்வத்துக்கு தடை போடாமல், திறமையை வெளிப்படுத்த திறவுகோலாக இருந்த அந்த ஆசிரியையை வணங்குகிறேன்.
- கோ.வர்ஷா, விழுப்புரம்.

