
கோவை மாவட்டம், சாத்துார், சாமக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!
வகுப்பறைகளில் மேற்கூரை பழுதடைந்திருந்ததால் சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விளையாட்டு மைதானத்தில் வேப்ப மரத்தடிக்கு வகுப்பறைகள் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தன.
அன்று மாலை, கடைசி வகுப்பு நடந்த போது, மைதானத்தில், 9ம் வகுப்பு மாணவர்கள் கால்பந்து விளையாடினர். வகுப்பில் மத்திய வரிசையில் அமர்ந்திருந்த எனக்கு கால்பந்தில் அதிக ஆர்வம்.
பாடத்தை கவனிக்காமல் விளையாட்டை ரசித்தபடி இருந்தேன். ஒரு அணியினர் கோல் அடித்ததைப் பார்த்ததும், உற்சாகமாக சத்தமிட்டேன்.
சற்றும் அலட்டாமல், 'வகுப்பறையில் கோல் போட்டது யார்...' என்று கேட்டார் ஆசிரியை மனோன்மணி. எழுந்து, நடந்ததை தெரிவித்தேன். சிரித்தனர் மாணவர்கள். பாடத்தை கவனிக்காததால், வேண்டிய பிரம்பு பூஜை கிடைத்தது.
மறுநாள் அறைக்கு அழைத்து, அறிவுரை வழங்கி, பள்ளி கால்பந்து அணியில் சேர்த்தார் ஆசிரியை. விளையாட்டிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி முன்னேறினேன்.
என் வயது, 66; வணிகவரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டிய அந்த ஆசிரியையை நினைவில் கொண்டுள்ளேன்.
- மா.திருவேங்கடம், கோவை.
தொடர்புக்கு: 94421 32076