PUBLISHED ON : ஜூலை 25, 2020

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அரசு நடுநிலைப் பள்ளியில், 2008ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் சுறுசுறுப்பாகவும், துடிப்பாகவும் திரிவேன். திடீர் என, 8ம் வகுப்பு ஆங்கில ஆசிரியை வாசுகி அழைத்தது கண்டு நடுங்கினேன்.
தயங்கியபடி சந்தித்தேன். ஆங்கில பேச்சுப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்திருப்பதாக கூறினார். ஓர் ஆங்கில கட்டுரையைக் கொடுத்து, 'மனப்பாடம் செய்து வந்து பேசிக் காட்டு...' என்றார்.
தமிழ் வழியில் பயின்றதால் தயங்கினேன். பாகற்காயை சுவைப்பதாக எண்ணி, பின் வாங்க நினைத்த போது, 'தயங்காதே... உன்னால் முடியும்...' என்று பரிவுடன் தட்டிக் கொடுத்தார்.
நன்றாக பயிற்சி செய்து பேசிக் காட்டினேன். வியந்து பாராட்டி, மேடை பேச்சின் நுணுக்கங்களை கற்றுத்தந்தார். நம்பிக்கை பெற்றேன். சரளமாக ஆங்கிலம் பேசும் கலையையும் கற்றேன்.
என் வயது, 20; கல்லுாரியில், இளங்கலை கணிதவியல் படித்து வருகிறேன். அந்த ஆசிரியை காட்டிய பரிவு, மனதில் நம்பிக்கை என்ற ஆணிவேராக ஊன்றியுள்ளது.
- சங்கீதா, திருப்பூர்.
