தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தவறை ஒப்புக் கொள்!

தவறை ஒப்புக் கொள்!

தவறை ஒப்புக் கொள்!


PUBLISHED ON : ஆக 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குயில்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தார்

தர்மன். ஒரு பசுவை வளர்ந்து வந்தார். அதன் மீது, அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அந்த பசுவோ அன்பு காட்டவில்லை. பிரிந்து செல்ல எண்ணியது. தொழுவத்தில் கட்டுண்டபடி, வாழ்வதில் விருப்பம் இல்லை.

ஒரு நாள் -

பசுவைக் குளிப்பாட்ட, ஆற்றுக்கு ஓட்டிச் சென்றார் தர்மன். நன்றாக தேய்த்து குளிப்பாட்டிய பின், கரையில் மேய விட்டு, நீந்தி குளிக்கத் துவங்கினார்.

கரையேறிய பசு, 'தப்பித்துச் செல்ல இதுதான் சரியான சமயம்' என முடிவு செய்து, மின்னல் வேகத்தில் ஓட்டமெடுத்தது.

ஓடி களைத்து, ஒரு மடத்தை வந்தடைந்தது பசு. அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பசியுடன் மடத்தின் நிழலில், வாயில் நுரை தள்ளியபடி ஒதுங்கி நின்றது. அன்னதானம் வழங்கிய பெரியவர் அதைக் கண்டார்.

'அடடே... பசுவே சாப்பிட வந்து விட்டதே' என மகிழ்ந்து, 'யாரங்கே... பசுவுக்கு உணவு கொடுங்கள்...' என்றார்.

வேலை ஆட்கள் உணவு வழங்கினர். மகிழ்ச்சியோடு சாப்பிட்டது பசு. அன்னதானம் முடிந்து எல்லாரும் சென்று விட, பசு மட்டும் நின்றது.

'நல்ல சாப்பாடு கிடைக்கிறதே; ஏன், இங்கேயே தங்கிவிடக் கூடாது' என்று எண்ணியபடி மடத்தின் திண்ணையில் படுத்தது.

'அன்னதான மடத்தில் பசு படுத்திருக்கிறதே' என்று, வியப்புற்றனர் ஊர்மக்கள். அதை அன்ன லட்சுமியாக கருதினர். அதற்கு மாலை போட்டு, தேங்காய், பழம் வைத்து, கற்பூரம் காட்டினர். விதம் விதமாக உணவு கொடுத்து உபசரித்தனர்.

'சாணவாடை வீசிய தொழுவத்தில், சிறைச்சாலை போன்ற இடத்தில் வாழ்ந்தோம். இப்போது தெய்வீக வாழ்க்கை கிடைத்திருக்கிறது. எல்லாமே, அதிர்ஷ்டம் தான்' என்று, நினைத்து மகிழ்ந்தது பசு.

தினமும் சாப்பிட்டு, துாங்குவது தான் வேலையாகியிருந்தது. இந்த வாழ்க்கை மீது அலுப்பு ஏற்பட்டது. ஊரை சுற்றி பார்க்க முடிவு செய்து புறப்பட்டது. எல்லையில் பசுமையான வயல்களைக் கண்டது. நாக்கில் எச்சில் ஊறியது. அவற்றை சாப்பிடும் ஆசை வந்தது. தாமதிக்காமல் வயலில் இறங்கி மேய துவங்கியது.

மாலை வரை பயிர்களை சாப்பிட்ட பசு, மடத்தில் வந்து படுத்தது.

அன்று மடத்தில் கொடுத்த உணவையும் சாப்பிட்டது.

திடீரென, பசுவுக்கு, ஒரு யோசனை தோன்றியது.

'ஊர் மக்கள், கடவுளாக நினைத்து, சகல வசதிகளையும் செய்து தருகின்றனர். இந்த நேரத்தில், வயலில் நெற்பயிர்களை மேய்வது, தெரிந்தால், தண்டித்து விடுவர். அதனால், இரவு நேரத்தில் மட்டும் பயிரை மேய்ந்து மடத்தில் படுத்துக் கொள்ளலாம்' என திட்டம் போட்டது.

அன்று இரவு வயல்வெளியில் பயிர்களை மேய்ந்தது; பின், அமைதியாக மடத்தில் படுத்தது.

மறுநாள் -

கவலையுடன், பசுவின் முன் வந்து நின்றனர் ஊர்மக்கள்.

'அன்ன லட்சுமி தெய்வமே... நீ தான், எங்க குறையைப் போக்க வேண்டும். இதுவரை ஊரில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை...' என்றார் ஒருவர்.

மக்கள் எதற்காக, அழுகின்றனர் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் பார்த்தது பசு.

மற்றொருவர், 'வயலில் பச்சைப் பயிர்கள் எல்லாம், இரவில் யாரோ நாசம் செய்கின்றனர். உன் அருளால் அதற்கு முடிவு கட்டு...' என, கண்ணீர் வடித்தார்.

பசுவின் உள்ளம் உருகியது; தவறை உணர்ந்தது. 'பச்சைப் பயிர்களை தின்னும் ஆசையால், பச்சை துரோகம் செய்து விட்டேனே... மக்கள் நம்பிக்கையை, நொடிப்பொழுதில் வீணாக்கி விட்டேன்...

'இந்த மடத்தில் வசிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை. மறுபடியும், சாணித் தொழுவத்தில் சிறைபட்டு வாழ வேண்டியது தான். அது தான் குற்றத்திற்கான தண்டனை' என நினைத்தபடி, தர்மனைத்தேடி புறப்பட்டது.

குட்டீஸ்... தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் வாழ்வில் உயர வழிகாட்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us