
இயற்கை எழிலுடன் காட்சியளித்தது சிங்கவனம். அதில், பல வகை மிருகங்கள் வசித்து வந்தன; பெற்றோருடன் வசித்து வந்தது முயல்குட்டி சிகு. அதை கண்டிப்புடன் ஒழுக்கம் மிக்கதாக வளர்த்து வந்தன.
ஆரம்பத்தில், பெற்றோரின் அறிவுரை, கோபத்தை தந்தாலும், உணர்ந்து அதை முழுமையாக பின்பற்ற துவங்கியது சிகு. நாளடைவில் அதுவே பழகிப்போனது. எந்த வேலையை செய்ய துவங்கும் முன்பும், பெற்றோர் அறிவுரையைக் கேட்டது சிகு.
தகுந்த பருவம் வந்தவுடன், வாழ்வதற்கான பயிற்சி வகுப்பிற்கு மகிழ்ச்சியுடன் சென்றது. பல இடங்களிலிருந்தும் அங்கு வந்திருந்தன முயல் குட்டிகள். அவை பயிற்சியின் போது வகுப்பறை விதிமுறைகளை பின்பற்ற முடியாமல் திணறின.
அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி, ஆசிரியர்களிடம் பெரும் பாராட்டு பெற்றது சிகு. அதைக் கண்ட பிற முயல் குட்டிகள், 'உன்னால் மட்டும் எப்படி முடிகிறது; ஏதாவது, உத்தி வச்சுருக்கியா...' என, ஆச்சரியத்துடன் கேட்டன.
'அனைத்தும், வீட்டில் தினமும் பின்பற்றிய நடைமுறைகள் தான்; பெற்றோரின் அறிவுரையை முறையாக கடைபிடித்ததால் இங்கும் சுலபமாக இருக்கிறது. இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...' என கூறியது சிகு.
உடனே, 'அப்ப, உங்க வீட்டில் கூட இப்படி விதிமுறைப்படி நடக்க வேண்டுமா... உனக்கு எரிச்சலாக இல்லையா...' என கேட்டன முயல்குட்டிகள்.
'பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு முறையே, என்னை ஒழுக்கமாக மாற்றி உள்ளது; அதுவே வாழ்வில் கவசமாக உள்ளது... இதில் எரிச்சல்பட ஒன்றுமில்லை...' என கூறியது சிகு.
முயல் குட்டிகள் எல்லாம் ஆச்சரியமடைந்தன. அவை, சிகுவை பார்த்து, பயிற்சி வகுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற துவங்கின.
குழந்தைகளே... பெற்றோர் சொல்லும் அறிவுரைகளை பின்பற்றுங்கள். அது சிறப்புடன் வாழ உதவும்.
பிரதீபா விஸ்வநாதன்

