
சாத்துார், ஏழாயிரம்பண்ணை, நாடார் மகமை உயர்நிலைப் பள்ளியில், 1954ல், 9ம் வகுப்பு சேர்ந்திருந்தேன். காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்த பின், பள்ளி வளாக வேப்ப மரங்களில் உதிரும் சருகு மற்றும் குப்பையை சேகரித்து, தொட்டியில் போட வேண்டும்.
தலைமையாசிரியர் சிவமுருகன் இதை கண்காணித்து முறைப்படுத்தி வந்தார். குப்பையை அதிகம் சேகரித்தால், பாராட்டு பெறலாம் என எண்ணினேன். அன்று பள்ளி செல்லும் போது வழியில் கிடந்த சருகுகளை சேகரித்து தலைமையாசிரியர் கண்ணில் படும் வகையில் தொட்டியில் போட்டேன்.
அதை கண்டதும், 'வளாகத்தில் வேப்பஞ்சருகு தானே கிடைக்கும். நீயோ ஆடு உண்ணும் இலைகளையும் போட்டுள்ளாயே...' என வினவினார். கை, கால்கள் வெலவெலக்க, 'வீட்டில் கிடந்ததை எடுத்து வந்தேன்...' என தடுமாறியபடி கூறினேன்.
மறுநாள் பிரார்த்தனை கூட்டத்தில், 'பள்ளி வளாகத்தில் மட்டுமல்ல... வீட்டிலும் குப்பை அகற்றி உதவும் இவன் போல் எண்ணம் எல்லாருக்கும் வேண்டும்...' என என்னை சுட்டிக்காட்டி பாராட்டினார் தலைமையாசிரியர்.
உடனே, உடற்பயிற்சி ஆசிரியர் சத்தியசீலன், 'திரீ சீயர்ஸ் பார், பாலசுப்ரமணியம்... ஹிப்... ஹிப்...' என்று உற்சாகப்படுத்தினார். குறுக்கு வழியில் நற்பெயர் பெற முயன்ற எனக்கு, அந்த குருட்டு அதிர்ஷ்டம், பெரும் கூச்சம் தந்தது. இனி அதுபோல் செய்வதில்லை என தீர்மானித்தேன்.
எனக்கு, 83 வயதாகிறது; சர்வோதய சங்கத்தில் மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். அறியாமை செயலால், பள்ளியில் படித்த போது எடுத்த உறுதியை, இன்றும் தவறாமல் பின்பற்றுகிறேன். இதற்கு, காரணமாக இருந்த தலைமையாசிரியரை வணங்கி வருகிறேன்.
- வீ.பாலசுப்ரமணியம், கோவை.
தொடர்புக்கு: 98944 36903