சுழற்காற்றுக்கு விதவிதமான பெயர்கள் உண்டு தெரியுமா? ஆஸ்திரேலியாவில் 'வில்லி வில்லீஸ்' என்றும், பசிபிக் கடற்பகுதிகளில் 'டைபூன்ஸ்' என்றும், இந்தியப் பெருங்கடற்பகுதியில் 'சைக்ளோன்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. எப்படி அழைத்தாலும் அவை மிகவும் கொடுமையானவை. கடலில் உருவாகி நிலத்தை 75 கி.மீ., வேகத்தில் தாக்கும் திறன் கொண்டவை. சுழற்காற்றின் சுழற்சியில் 200 மில்லியன் டன் நீர் இருக்கும். முன்னூறு கி.மீ., மேல் மேலெழும்.
கடல் சூறாவளிகளில் மிகப் பெரியது சுனாமி. இது ஜப்பானியச் சொல். சுனாமி என்றால் மிகப்பெரிய அலை என்று பொருள். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பத்தால் சுனாமி உண்டாகிறது. இதனால் எழும் அலையின் வேகம் 300 கி.மீ., மேல்.
காற்று என்பது சமீப காலம் வரை ஒரு தனிப்பட்ட வாயுவாகவே விஞ்ஞானிகளால் கருதப்பட்டிருந்தது. அது பல வாயுக்களின் கூட்டமைப்பு என்பதை லவாய்சியர் (1778) என்ற விஞ்ஞானி சோதனைகள் மூலம் நிரூபித்தார். காற்றின் பெரும்பகுதி நைட்ரஜனாகவும் (78.09 சதவீதம்) ஆக்சிஜனாகவும் (20.95 சதவீதம்) மீதி உள்ளது ஆர்கான் என்ற வாயுவாகவும் இருப்பதை அவர் கண்டறிந்தார். கார்பன் டை ஆக்சைடு மிகச் சிறிய அளவில் இருப்பதும் தெரிய வந்தது.
மற்ற கிரகங்களில் இருப்பதைவிட பூமியில் ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடானு கோடி ஆண்டுகளாய் உயிரினங்கள் ஆக்சிஜனைச் சுவாசித்து வந்தும், வளிமண்டல ஆக்சிஜன் அளவு குறையவில்லை. காரணம் இழக்கப்படுகிற ஆக்சிஜனைத் தாவரங்கள் உடனுக்குடன் மீட்டெடுத்துத் தந்து விடுகின்றன. அதனால், வளி மண்டலத்தில் உள்ள மொத்த ஆக்சிஜன் அளவு மாறாமல் வைக்கப்படுகிறது.
தாவரங்கள் இல்லாத காரணத்தால் மற்ற கிரகங்களில் உள்ள வளிமண்டலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் போனதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூரியன், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களைச் சுற்றி ஹைட்ரஜனும், ஹீலியமும் கொண்ட வளிமண்டலம் சூழ்ந்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய் இவற்றின் வளிமண்டலம் நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கொண்டது. புளுட்டோ சூரியனில் இருந்து தள்ளி இருப்பதால் அதில் நைட்ரஜனும், மீத்தேனும் மட்டுமே உள்ளன.
பூமியின் வளிமண்டலத்தில் அம்மோனியா, மீத்தேன், நீராவி, ஹைட்ரஜன், சல்பைடு கலவை நிறைந்திருந்த காலகட்டத்திலோ, நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு நீராவி கலவை நிறைந்திருந்த காலகட்டத்திலோ உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று அறிவியலார் தெரிவித்தனர். இங்கே தாவரங்கள் தோன்றியபிறகு வளிமண்டலம் நைட்ரஜனையும், ஆக்சிஜனையும் அதிக அளவில் கொண்டதாயிற்று.
ஆக்சிஜனால் உயிரினங்கள் உண்டாவதும், உயிரினங்களால் ஆக்சிஜன் உண்டாவதும் ரொம்ப ஆச்சரியமா இல்ல குட்டீஸ்...
***