PUBLISHED ON : ஜன 29, 2016

அழகே உருவான பறவை மயில். அதிலும் ஆண் பறவையின் அழகைச் சொல்லி மாளாது. மயில் அனேகமாக இந்தியாவில் தோன்றியது எனலாம். இங்கிருந்து தெற்கு ஆசியாவிற்குப் பரவியது எனலாம். இது தோகையை விரிக்காமல் நின்றாலும் அல்லது தோகையை விரித்தாலும் அழகுதான்.
ஆண் மயில் அழகால் கண்ணுக்கு விருந்தாகும். தோகையை விரித்தாடுவது நாம் பார்த்து மகிழமட்டும் அல்ல, பெண் பறவையைக் கவர்வதற்கே! பெண் மயில், ஆண்மயிலின் அழகில் எந்த அம்சமும் கொண்டது அன்று. பொதுவாக பறவைகளைப் பொருத்தவரை கம்பீரமான, அழகிய தோற்றம் ஆண் வர்க்கத்திற்கு தான் உண்டு. அதிலும், மயிலோடு போட்டி போட எந்தப் பறவைக்கும் தகுதியே இல்லை எனலாம்.
இதனுடைய தலை, கழுத்து, மார்பு ஆகியவை மிகவும் அழகான குளிர்ந்த நீல நிறமும், பச்சை நிறமும் பெற்று விளங்கும். இதன் தலையில் இருக்கும் கொண்டையின் அழகை விவரிக்கத் தேவையே இல்லை. தனித்தனியாக நிமர்ந்து நிற்கும் 24 சிறகுகளைக் கொண்ட கொண்டை மயிலுக்கே மகுடம் சூட்டியது போல் அமைந்துள்ளது. இந்தக் கொண்டை மயில் கழுத்தைத் திருப்பும் போது எல்லாம் மாறி, மாறி வண்ண ஜாலம் காட்டும். இதன் முதுகுப்புறம் சிவப்பு கலந்த நீல நிறமாக இருக்கும். இந்த நிறங்கள் எல்லாமே மற்ற பறவைகளின் வர்ணச் சிறகு போல் இல்லாமல் பளபளப்பு மிகுந்து காணப்படுவது மயிலுக்கு தனிச் சிறப்புதான்.
