PUBLISHED ON : ஜன 06, 2012

தெத்துப்பட்டி கிராமத்தில் விநோதன் என்ற பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். பெயர்தான் பெரிய மனிதர். செய்யும் செயல்கள் எல்லாம் சிறுமையாக இருக்கும். அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்து கட்டடத்தில் இருபது சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைத்தபடி நின்று கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
''உங்களுக்கு சிமென்ட் வேண்டுமா?'' என்று கேட்டான்.
''சிமென்டை யாரும் இப்படி ஊர் ஊராகக் கொண்டு போய் விற்க மாட்டார்கள். அதற்குக் கடை, கிடங்கு எல்லாம் வேண்டும். அதனால் நீ இந்தச் சிமென்ட் மூட்டைகளை எங்கேயோ மோசடி செய்து இருக்கிறாய்...'' என்றார் விநோதன்.
விநோதன் கூறியதைக் கேட்டதும், அந்த இளைஞன் ஆடிப்போய் விட்டான்.
அதைப் பார்த்துக் தலையை ஆட்டிக் கொண்டு சிரித்த விநோதன்,
''ஏனப்பா ஆடிப் போய் நிற்கிறாய்? நான் உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன் என்றா? உன்னைப் பிடித்துப் போலீஸில் கொடுக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏதோ கஷ்டப்பட்டு நீ மோசடி செய்து இருக்கிறாய். உன்னுடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்க வேண்டும். என்னுடைய கண்டுப்பிடிப் புக்கும் பலன் இருக்க வேண்டும். அதனால், நாம் நம் இருவருக்கும் லாபகரமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வோம். எண்பது ரூபாய்க்கு விற்கும் சிமென்ட் மூட்டையை நீ எனக்கு முப்பது ரூபாய்க்கு விற்க வேண்டும். எனக்கு பத்து மூட்டை சிமென்ட் வேண்டும். முன்னூறு ரூபாய் கொடுப்பேன். சத்தம் போடாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மூட்டைகளை நீ இந்த ஊரில் விற்கக் கூடாது!'' என்றான் விநோதன்.
அந்த இளைஞன் அதற்குச் சம்மதித்தான். முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு விநோதனுக்கு பத்து சிமென்ட் மூட்டை களைக் கொடுத்தான். பிறகு, மீதி மூட்டை களை நான் என்ன செய்ய?'' என்று கேட்டான்.
''பக்கத்து ஊரான கிளியூரில் 'குப்பன்' என்ற ஒருவன் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறான். அவன் திமிர் பிடித்தவன்; அவன் தலையில் சிமென்ட் மூட்டைகளை கட்டி விடு,'' என்று யோசனை கூறினான் விநோதன்.
''கிளியூருக்கு சிமென்ட் மூட்டைகளைக் கொண்டு போவதற்கு வண்டி வேண்டுமே! இந்த ஊரில் வண்டி கிடைக்குமா?'' என்று கேட்டான் இளைஞன்.
''ஊர் என்று இருந்தால் வண்டி இல்லாமல் இருக்குமா? ஆல மரத்தடியில், 'சுப்பன்' என்று ஒருவன் பார வண்டி வைத்திருக்கிறான். நான் சொன்னேன் என்று சொல், உடனே வருவான்,'' என்றான் விநோதன்.
இளைஞன் ஆலமரத்தடிக்குச் சென்று சுப்பனைப் பார்த்து, ''விநோதன் அனுப்பினார். கிளியூருக்குச் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போக வேண்டும்,'' என்றான்.
சுப்பன் மறு பேச்சுப் பேசாமல், சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கிளியூருக்குச் சென்றான். கூடவே நடந்து சென்ற அந்த இளைஞன் குப்பனை சந்தித்து ஐம்பது ரூபாய் விலையில் எட்டு மூட்டை சிமென்டை விற்று விட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு இருக்கும்போது, அவரசமாக சைக்கிளில் வந்து இறங்கினான் விநோதன்.
அவனைப் பார்த்ததும் இளைஞன் விநோதனிடம் சென்று, ''என்ன விஷயம்?'' என்று கேட்டான்.
''ஏய்யா, சிமென்ட் என்ற பெயரில் சாம்பலையும், மணலையும் கலந்து விற்று மோசடி செய்து இருக்கிறாயே! உன்னை என்ன செய்தால் தேவலை?'' என்று சீறினான் விநோதன்.
''சத்தம் போடாதீர்கள். உங்கள் ரூபாயையும், குப்பனிடம் விற்ற நானாறு ரூபாயையும் கொடுத்து விடுகிறேன். என்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள்,'' என்றான் இளைஞன்.
'நானூறு ரூபாய் அதிகமாக வருகிறது. விஷயத்தைச் சொல்லாமல் மறைந்து விட வேண்டும்' என்று நினைத்த விநோதன், ''சரி ரூபாயை எடு!'' என்றான்.
''இன்னும் இரண்டு மூட்டை சிமென்ட் விற்காமல் இருக்கிறது. அதை விற்றால் நூறு ரூபாய் கிடைக்கும். அதையும் உங்களிடம் கொடுத்து விடுகிறேன்,'' என்று கூறிய இளைஞன், ஊருக்குள் சென்றான்.
அதைக் கவனித்துக் கொண்டு இருந்த குப்பன், ''என்னய்யா விநோதா! அவன் எங்கே போகிறான்? நீர் எங்கே வந்தீர்?'' என்று கேட்டான்.
''ஏனய்யா, நான் உங்கள் ஊருக்கு வரக் கூடாதா?'' என்று கேட்டான் குப்புசாமி.
''ஏன் வரக்கூடாது? நீர் ஆயுள் முழுவதும் வந்து கொண்டே இரும்,'' என்று கூறினான் குப்பன்.
அரை மணி நேரம் ஆகியது. இளைஞன் திரும்பவில்லை. அவனுக்குப் பதிலாக உள்ளூர்க்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து, ''சாம்பலை நல்ல விலை தந்து வாங்கிய விநோதனுக்கும், குப்பனுக்கும் என் நன்றியைச் சொல்லி விடு, என்று என்னிடம் கூறிய ஒரு இளைஞன், பஸ் ஏறி போய் விட்டான்,'' என்று கூறினான்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டார் விநோதன்.
அவனை விட அதிகமாகத் திடுக்கிட்ட குப்பன் ஓடிப்போய் ஒரு சிமென்ட் மூட்டையைப் பிரித்துப் பார்த்தான். அதில் சாம்பலும், மணலும் இருந்தன. இதற்கா நானூறு ரூபாய்?
''எனக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றிப் போய் விட்டானே...!'' நீங்கதானே அவனுக்கு சிபாரிசு பண்ணிணீங்க... நீங்கதான் எனக்கு பணம் தரணும் என்று அழுவாத குறையாகக் கூறினான் வண்டிக்காரன்.
''என்னையும் ஏமாற்றி விட்டுப் போய் விட்டான்,'' என்று பெருமூச்சு விட்டான் விநோதன்.
''விநோதன் நீயும் அந்தப் பயலும் ரகசியம் பேசியபோதே நான் சந்தேகப்பட்டேன். அவன் மோசகாரன் என்பது உமக்கு முன்னாலேயே தெரிந்து இருந்தும், என்னிடம் சொல்லாமல் மறைத்தீரே! மோசகாரனுக்குத் துணை போன பித்தலாட்டக்காரரான நீர், உம் ஆயுளுக்கும் எங்கள் ஊருக்கு வர வேண்டாம்,'' என்று சத்தம் போட்டான் குப்பன்.
விநோதனுக்கு நஷ்டமும், அவமானமும் சேர்ந்து 'பளார் பளார்' என்று கன்னத்தில் அறைவது போல இருந்தது.
***
